வெள்ளி, 19 ஜூலை, 2024

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்பு

ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்பு

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதன், பின்னர் தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இணைய இயக்குநராக பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் டாக்டர்.நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, இன்று (19ம் தேதி) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையாளருக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்,பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், ஏலம் விடப்படாத வணிக வளாகம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற முக்கிய திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும், அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு மாநகராட்சி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலைமைக் காவலர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலைமைக் காவலர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் குமார் (வயது 45). மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவிலும் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று இரவு வடவள்ளியில் உள்ள வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் தலைமை காவலர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில், உயிரிழந்த தலைமை காவலர் குமாருக்கு பவித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
பெருந்துறை அருகே ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை அருகே ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி கால்வாயில் குறிப்பிட்ட இடங்களில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க கோரியும் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதை கண்டித்தும், பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து, ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் பணிகளை முடிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கலைந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.70 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வங்கியாளர்கள் கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், இன்று (19ம் தேதி) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், சான்றிதழ்கள் ஆகியவை மற்றும் வித்யாலட்சுமி, ஜன்சமர்த் ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 5,000 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக்கடன் வழங்குவதில் கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வங்கிகளுக்கும் இடையில் பாலமாக செயல்பட வேண்டும்.

கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவ, மாணவியர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்குவது, அவர்களிடையே குழுக்கள் ஏற்படுத்தி கல்விக்கடன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அதில் கல்விக்கடன் தேவைப்படும் நபர்களுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து விளக்குவது, கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவியர்களுக்கு வித்யாலட்சுமி (https://www.vidyalakshmi.co.in/Students) மற்றும் ஜன்சமர்த் (https://www.jansamarth.in/home) ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்துக் கொடுப்பது ஆகிய பணிகளை முன்னெடுத்து நடத்திட வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகம், கல்விக்கடன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பெறும் நபர்களுக்கு விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கிகளின் உதவியோடு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக இன்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்ற மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நடைபெற்ற பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 நர்சிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 16 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 14 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 5 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 41 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இதில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்விக்கடன் விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாநில முதுநிலை ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
லட்ச ரூபாய் அளவிற்கு சேலத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மெகா நல உதவிகள் வழங்கும் முகாம்...

லட்ச ரூபாய் அளவிற்கு சேலத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மெகா நல உதவிகள் வழங்கும் முகாம்...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் விங் ரோட்டரி சங்கம், அன்பின் கரங்கள் அறக்கட்டளை மற்றும் ஜென் னிஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மெகா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது. 

சேலம் கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சேலம் விங் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திருமதி.கரோலின் மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக  மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றவர்கள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கான தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. 
மேலும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து கொண்டு சிறந்த சமூக சேவையாற்றி வந்த நபர்களுக்கு விழாவில் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டத்தோடு மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தலைக்கவசமும் வழங்கப்பட்டன. ஏழை எளிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வை இழந்தவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன. 
இது தவிர மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வை இழந்த நபர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன. இது போக இன்னும் ஏராளமான உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட இந்த மெகா நிகழ்ச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது. 
மெகா நல உதவிகள் வழங்கிய  அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளான சசிகுமார், விஜய் ஆனந்த், அர்ச்சனா மணிகண்டன், ஹேமலதா, சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரமௌலி, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர், சிறந்த மாற்றுத்திறனாளி சமூக சேவகர் அத்தி அண்ணன்,  மற்றும் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வியாழன், 18 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கவுந்தப்பாடி, நல்லக்கவுண்டன்பாளையம் மற்றும் கூகலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (20ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
ஈரோடு துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய வலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு மற்றும் நேதாஜிரோடு,

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஒடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடி புதூர், மாரப்பம்பாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சர மடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்க வலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம். செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

கோபி நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின் நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமால் நகர், வேலுமணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர் மற்றும் உரும்பபாளையம்.

கோபி கூகலூர் துணை மின் நிலையம்:

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்புதூர், புதுக்கரைபுதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சாணார்பா ளையம். மேவாணி, சென்னிமலை கவுண்டன்புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது

ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி ஏழாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரின் வீட்டில் கடந்த மாதம் ஜூன் 8ம் தேதி 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடிட்டர் சுப்பிரமணியின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரை சேர்ந்த சத்யன் (வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஆலப்பள்ளி ரோடு திருமலை நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோடி குப்பம் ஆர்.கொள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (வயது 24) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ரூ.19 லட்சம் மற்றும் 90 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்நிலையில், ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம், கென்னடிகுப்பம் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் குமரன் (வயது 40) என்பவரை போலீசார் நேற்று (18ம் தேதி) கைது செய்தனர். அவரிடம் இருந்து, 42 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.