புதன், 11 செப்டம்பர், 2024

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.....

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.....

அருந்ததியர் 3% உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இட ஒதுக்கீட்டு உரிமையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுசேராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர் சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருந்ததியர் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்ப நீ ரத்து செய்ய வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் பிரதாபன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர. இந்த போராட்டம் குறித்து அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளர்  வழக்கறிஞர் பிரதாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் முதற்கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக மாநில அளவில் அருந்ததியர் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 


செவ்வாய், 10 செப்டம்பர், 2024

ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த டீலக்ஸ் அறை படுக்கைகள்: அரசு பணியாளர்களுக்கு இலவசம்

ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் பயன்பாட்டுக்கு வந்த டீலக்ஸ் அறை படுக்கைகள்: அரசு பணியாளர்களுக்கு இலவசம்

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது:- 

தமிழக முதலமைச்சரால் ஈரோடு தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு உயர் சிகிச்சைக்காக 8 மாடி கட்டிடம் கடந்த மார்ச் 13ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற 20 படுக்கைகள் கொண்ட கட்டண சிகிச்சை பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தற்பொழுது கட்டண பிரிவு பயன்பாட்டில் உள்ளது. நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தனி அறை (டீலக்ஸ் அறை)- ரூ.2 ஆயிரம், இரு படுக்கை அறை (டபுள் டீலக்ஸ் அறை)- ரூ.1,000, 3 படுக்கை அறை (டிரிபிள் டீலக்ஸ் அறை )-ரூ. 700, மருந்துகள், மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை, உணவு ஆகியவை தனி கட்டணம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு குரு பிரசாத் 9150318361, வஞ்சி வேந்தன் 938580845 என்ற எண்களில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், அரசு பணியாளர்கள் மற்றும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்ட அட்டை (NHIS) வைத்திருந்தால் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னிமலை அருகே தந்தையின் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய மகள் கைது

சென்னிமலை அருகே தந்தையின் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய மகள் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 73). உடல்நலம் பாதித்து வீட்டிலேயே இருந்து வந்த விஸ்வநாதனை, அதே பகுதியில் கணவருடன் வசித்து வரும் அவரது மகள் ரம்யா (வயது 35) அவரை கவனித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி தந்தையின் வீட்டில் இருந்த ரம்யாவை முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ரம்யா தெரிவித்தார். 

இதையடுத்து, சென்னிமலை போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளை தொடர்பாக எந்த காட்சியும் பதிவாகவில்லை. பின்னர், ரம்யாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரம்யா நடத்தி வந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரூ.3 லட்சம் கடனான அவர் அதை அடைக்க தந்தையிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கு தெரியாமலேயே பீரோவில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்றதாக நாடகம் நடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தந்தையின் பணத்தை கொள்ளையடித்து விட்டு, முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கை, கால்களை கட்டுப்போட்டு கொள்ளையடித்ததாக நாடகமாடிய மகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும்:  ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்

திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும்: ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்

திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ் பேசினார்.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்புக்குழு தலைவர் கே.இ.பிரகாஷ் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். 
ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அனைத்து திருநங்கைகளுக்கும் பட்டா வழங்கி அரசின் சார்பில் குடியிருப்புகள் கட்டிக்கொடுப்பதோடு அவர்களுக்கு குடியிருப்பு காலனி உருவாக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தும் வகையில், திருநங்கைகள் சுய உதவிக்குழு உருவாக்கி வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோட்டில் 2 இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்த சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போல மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்ற பிறகும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இந்த கட்டிடங்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் சுப்பராயன், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், கூடுதல் ஆட்சியர் சதீஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார், மாவட்ட வன அதிகாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 21,626 மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் மற்றும் கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கம், கொங்கு பொறியியல் கல்லூரி, நந்தா தொழில்நுட்பக் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேளாளர் பொறியில் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீரர்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2, ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாநில அளவில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாநில அளவிலான போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மாநில அளவில் ஈரோடு மாவட்டத்திலிருந்து பங்கு பெற்ற வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் பரிசுகளை பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து தர வேண்டும். இப்போட்டியில் பங்குபெறும் அனைத்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சோலார் மற்றும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஆகிய இடங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஈரோட்டில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிகள் வந்திருந்தனர்.
ஈரோடு எம்பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு எம்பி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத் தலைவரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கே.இ.பிரகாஷ் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (10ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும் போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு முறையான நிதிகள் சென்று சேர்வதையும், அதன் பணிகளில் விரைவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, இக்கூட்டத்தில் 44 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.


குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு வரப்பெற்றுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி அதில் காலதாமதம் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் குறித்தும், திட்டப்பணிகளை மேற்கொள்ளும் போது பணிகளுக்கு இடையூறு ஏற்படுமனால் அவற்றை உடனடியாக சரி செய்து தீர்வு கண்டு பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம் (ஊரகம்), பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தேசிய மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் கு.வெ.அப்பால நாயுடு (ஈரோடு வன கோட்டம்), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) ராமசாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.