வெள்ளி, 18 அக்டோபர், 2024

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு வில்லரசம்பட்டி சிவபுரத்தில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல்  நாட்டு விழாவில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு திண்டல் புது காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்ட பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திண்டல் குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதனை அடுத்து திண்டல் சுகாதார நிலையம் எதிரில் நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்ற பிறகு முத்தம் பாளையம் பண்ணைக்காடு அரிஜன காலனியில் பேவர் பிளாக் அமைப்பதற்கான திட்டப் பணியையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டல் மணிராசு திண்டல் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

பின்னர் ,சென்னிமலை சாலையில் அண்ணா நகருக்கு செல்லும் வழியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் , மாநகர மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம், 
துணைச் செயலாளர் செந்தில்குமார் ,
மண்டல செயலாளர் சசிகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து உள்ளனர்.
ஈரோட்டில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சியினை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் தமிழகப் பண்பாட்டு கண்காட்சியினை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில், தமிழக பண்பாட்டு கண்காட்சியினை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரன் மாணவர்கள் அமைப்பு இணைந்து  நடத்தும் இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம்  கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னணி வகித்தனர். 

தமிழர்களின் வாழ்வியலை  வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு வகையான பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. 

இவற்றை அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர். 

குறிப்பாக, குடும்பமேளம், பெரிய மேளம்  உருமி மேளம், உள்ளிட்ட 20 வகையான மேளங்கள்  இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 வகையான தமிழிசை கருவிகளை அங்கிருந்து பொதுமக்களும் ,மாணவ மாணவிகளும் கண்டு வியந்தனர். 

முன்னதாக அமைச்சர் முத்துசாமி கண்காட்சியினை துவக்க வைத்த போது தமிழ் பாரம்பரிய முறைப்படி தமிழிசை கருவிகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வேட்டை தடுப்புக் காவலர்கள் வனக்கோட்ட அலுவலரிடம் மனு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள், பணி வரன் முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வனக்கோட்ட அலுவலரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தியமங்கலம் வனக் கோட்ட அலுவலர் குலால் யோகேஷ் விலாசிடம் மனு அளித்தனர். அதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட விளாமுண்டி, பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், தலமலை, கடம்பூர் ஆகிய 6 வனச்சரகங்களிலும் சுமார் 59 வேட்டை தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .

பெரும்பாலானோர் பட்டியலின, பட்டியல் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மேலும், சாதாரண ஏழை-எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுமாவர். எங்களில் பெரும்பாலானோர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். வனப் பாதுகாப்பு பணியில் துறையின் அதிகாரிகளின் உத்திரவுகளுக்கு ஏற்ப, எந்தவித பணிப் பாதுகாப்பும் அற்ற நிலையிலும் கூட நாங்கள் சிரத்தையோடு எங்கள் பணிகளை செய்து வருகிறோம்.

வேட்டைத் தடுப்புக் காவலர்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருபவர்களை பணி வரன் முறை செய்யப்படுவது போல, எங்களின் பணியினையும் வரன் முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் எங்கள் நம்பிக்கையில் இடி விழுந்ததைப் போல, எங்களை வெளி முகாமைக்கு மாற்றும் நடவடிக்கைகளை துறை எடுத்து வருவதாக அறிகிறோம்.

வெளி முகாமைக்கு எங்களை மாற்றும் பட்சத்தில் எங்கள் பணி பாதுகாப்பற்றதாக ஆகிவிடுவதோடு, எதிர்காலத்தில் பணி வரன் முறைப்படுத்தல் என்பதும் அறவே இல்லாததாகி விடும். எனவே, வேட்டை தடுப்புக் காவலர்களாகிய எங்களை வெளி முகாமைக்கு மாற்றாமல், தொடர்ந்து தொகுப்பூதியத்திலேயே பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை இன்று (18ம் தேதி) வெள்ளிக்கிழமை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, சிறப்பு பணிகள் தொடர்பான பதிவேடுகள், நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள், பணியாளர் வருகை பதிவேடு, தற்செயல்விடுப்பு பதிவேடு, முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்த கோப்புகள், இணையதள பதிவுகள் குறித்த பதிவேடு உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ம.சதீஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்

ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் ஆக்கிரமித்திருந்த ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றம்

ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயில் இன்று (18ம் தேதி) இடித்து அகற்றப்பட்டன. 

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து அளவீடு செய்து சுமார் 2004 சதுர அடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இவற்றை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதை அடுத்து உரிய விசாரணைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோயில் மற்றும் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட கட்டுமானங்களை நேற்று அகற்றுவதாக அறிவித்தனர்.

அப்போது, கோயில் தரப்பினரும் ஆட்டோ நிறுத்தம் தரப்பினரும் மற்றும் தாசில்தார் ஆகியோருடன் ஈரோடு ஆர்.டி.ஓ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவின் படி குறிப்பிட்ட அளவுள்ள இடம் அளவீடு செய்து காண்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று (18ம் தேதி) காலை ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தினர், மாநகர பொறியாளர் விஜயகுமார், உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூரம்பட்டி போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படையினர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.

சுமார் 15 ஆண்டுகளாக இருந்த கள்ளுக்கடை ஆஞ்சநேயர் கோயில் இடித்து அகற்றப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதேபோல், கோயில் அருகே இருந்த ஆட்டோ நிறுத்த பகுதி கட்டிடங்களும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.


வியாழன், 17 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,19) சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் செண்பகபுதூர், பவானி மைலம்பாடி மின் தொடர், கொடுமுடி மற்றும் கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 19) சனிக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப் பகுதி.

சத்தியமங்கலம் செண்பகபுதூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சத்தியமங்கலம், காந்திநகர். நேரு நகர், ரங்கசமுத்திரம், பஸ் நிலையம், கோணமூலை, வி.ஐ.பி.நகர், செண்பகப்புதூர், உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யஞ்சாலை மற்றும் தாண்டாம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை மைலம்பாடி மின் தொடர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மைலம்பாடி, ஊராட்சிகோட்டை, மோளக்கவுண்டன்புதூர், சாணார்பாளையம், கொட்டக்காட்டுபுதூர், புதுப்பாளையம், அருமைக்காரன்புதூர், போத்தநாயக்கனுார், கல்வாநாயக்கனூர் மற்றும் கண்ணாடிபாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், தளுவம்பாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், பிலிக்கல்பாளையம், வடக்குமூர்த்திபாளையம் மற்றும் நாகமநாய்க்கன்பாளையம்.

மொடக்குறிச்சி கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், முத்துசாமி காலனி, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், எல்.ஐ.சி., நகர், ரைஸ்மில் சாலை, ஈ.பி.நகர், என்.ஜி.ஜி.ஓ., நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மாருதி கார்டன், மூலப்பாளையம், சின்னிசெட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைபாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், 46 புதூர் மற்றும் காகத்தான்வலசு.
ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விகிதம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் வருகை, எண்ணும் எழுத்தும் திட்டம், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாடுகள், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம், அரசு மருத்துவமனைகள் செயல்பாடு, பொது மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் முத்துசாமி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், இளவயது கர்ப்பம், பிறப்பு பாலின விகிதம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பு, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக்கிடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பூங்கோதை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.