வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (25ம் தேதி) நடைபெற்றது.

இதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம், கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள் மற்றும் அதன் செயல்பாடு. தீயணைப்பு துறை ஊர்தியில் பயன்படுத்தப்படும் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு. வெட்டும் மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களின் செயல் விளக்கம் நடைபெற்றது.

மேலும், கயிறுகள் மூலம் உயர்மாடிக் கட்டடங்கள், கிணறுகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முறை. ஏணிகள் மூலம் மீட்கும் முறை, மூச்சு நின்றவர்களுக்கு சிபிஆர் (CPR) மூலம் இதயம், நுரையீரல் செயல்பாடு மீட்டல், நம் சுற்றுப்புறத்தில் தீவிபத்து ஏற்பட்டால் அந்த தீக்காலங்களில் தீயணைப்பான்கள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் வகைகள் தீயணைப்பு வாகனங்களின் வகைகள், பயன்பாடுகள் ஆகியவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தீத்தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், உதவி மாவட்ட அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் உட்பட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) முழு வேலை நாளாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.26) முழு வேலை நாளாக அறிவிப்பு

மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு கடந்த (22ம் தேதி) செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய நாளை ஈடுசெய்யும் வகையில் நாளை (26ம் தேதி) சனிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, நிதியுதவி, தனியார் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 22.10.2024 அன்று மாவட்ட ஆட்சியரால் விடுமுறை அளிக்கப்பட்ட நாளை ஈடு செய்யும் வகையில் 26.10.2024 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம் அருகே 53 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டு. மாணவ மாணவியர் குழுவினருடன் புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்.

சேலம் அருகே 53 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டு. மாணவ மாணவியர் குழுவினருடன் புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே 53 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டு. மாணவ மாணவியர் குழுவினருடன் புகைப்படம் எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர். 

தமிழகத்தில் நெடுந்தூரம் சென்று கல்வி பயிலும் மாணவ மாணவியரின் நலன் கருதி, தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் 12 ஆம் வகுப்பு பெயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மானாக்கர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
இதன் ஒரு பகுதியாக சேலத்தை அடுத்துள்ள நாழிகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் 53 மாணாக்கர்களுக்கு விலை வண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. பள்ளியின்  தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 21 மாணவர்கள் மற்றும் 32 மாணவிகள் என மொத்தம் 53 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். 
தொடர்ந்து மாணாக்கர்கள் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பாரப்பட்டி சுரேஷ் குமார். 
இந்த விழாவில் ஏஹெச்எம் உதவி தலைமை ஆசிரியர் திருமதி சித்ராதேவி, மூத்த ஆசிரியர் கணையம் உட்பட ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

வியாழன், 24 அக்டோபர், 2024

ஈரோடு ஜவுளி கடையில் கூட்டத்தோடு நின்று துணிகளை திருடிய 3 பெண்கள் கைது

ஈரோடு ஜவுளி கடையில் கூட்டத்தோடு நின்று துணிகளை திருடிய 3 பெண்கள் கைது

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜவுளி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் உட்பட கடை வீதிகளில் மக்கள் கூட்டம் புத்தாடை வாங்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது கடைக்கு ஜவுளி வாங்க வந்த மூன்று பெண்கள் துணிகளை பார்ப்பது போல பார்த்துவிட்டு கடையின் முன்னாள் விற்பனைக்கு அடிக்கு வைத்திருந்த பாவாடை துணி கட்டுகளை எடுத்துச் சென்றனர்.


இதன் பின்னர் கடையின் உரிமையாளர் செல்வராஜ் கடையில் கொள்முதல் செய்யப்பட்ட ஜவுளிக்கு விற்பனையான ஜவுளியுடன் கணக்கிடும் போது ஜவுளி இருப்பது குறைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த உரிமையாளர் வளாகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்த்த போது கடைக்கு வந்த பெண்கள் ஜவுளி கட்டுக்களை கட்ட பையில் திருடிச் செல்வது தெரியவந்தது.

இதன் பின்னர், ஈரோடு நகர காவல் நிலையத்தில் செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கோபிசெட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா, கோகிலா, சுசீலா ஆகிய 3 பெண்கள் என தெரியவந்தது. இதன் பின்னர் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்தியூர் குப்பாண்டம்பாளையம் மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அந்தியூர் குப்பாண்டம்பாளையம் மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 185 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அத்தாணி உள்வட்டம் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் இன்று (24ம் தேதி) நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து, 185 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பின்னர் அவர் தெரிவித்ததாவது, இம்மனுநீதி நாள் முகாமில் அரசு துறைகளின் சார்பில் பல்வேறு கருத்து காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, வேளாண்மை உழவர் நலத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.


தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர்கள் உமாசங்கர் (ஊராட்சிகள்), சக்திவேல் (பேரூராட்சிகள்), துணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர்‌ சக்தி கிருஷ்ணன், குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பூங்கோதை, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன், 23 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.4.06 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.4.06 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆத்துப்பாலம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக் குழு அதிகாரி ஜெகநாதன் தலைமையில், காவல் ஆய்வாளர் ரேகா மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 5 மணி நேரம் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் பசுபதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலையில் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் சத்தியமங்கலம், அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி அணை இன்று (அக்.24) மூடல்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கொடிவேரி அணை இன்று (அக்.24) மூடல்

கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், இன்று (அக்.24) அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஒன்றாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் வினாடிக்கு 860 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த தண்ணீர் அணையில் இருக்கும் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி விழுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, இன்று (24ம் தேதி) வியாழக்கிழமை கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.