செவ்வாய், 12 நவம்பர், 2024

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம். 

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலம் கோட்டை மைதானத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு பெருந்திரள்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சேலம் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை சையது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்டு நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவது என்பது சங் பரிவார் அமைப்பின் முஸ்லிம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாஜக அரசின் கண்களை உருக்குகிறது என்று வலியுறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவற்றை அபகரித்து அதானி அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சரி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை சையத் அலி கூறுகையில் இந்த மசோதாவானது வக்பு வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளை செய்யும் நடைமுறை என்று குற்றம் சாட்டிய அவர் சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வு காணும் அதிகாரம் கலெக்டர் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதன் மூலம் வக்பு வாரிய தீர்ப்பாயத்தை நீர்த்துப்போக செய்யும் எனவே மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நாடு தழுவிய அளவில் இந்தியாவை நேசிக்கும் முன் மதத்தினரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் அத் அமைப்பை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்யும் போது அது புரளி என தெரிய வந்தது.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது.

இந்நிலையில் ஈரோடு செட்டிபாளையம் பூந்துறை ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வந்தனர். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு பகுதியாக நவீன கருவிக்கொண்டு சோதனை நடத்தினர்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்களும் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்து தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இதே பள்ளிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் புல்லட் உதவியுடன் நீண்ட நேரம் சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.

பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 11 நவம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.13) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.13) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி, டி.என்.பாளையம், புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர், ஏளூர், கூகலூர் மற்றும் தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.13) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பாரதியார் நகர், ராசாம்பாளையம், வீரப்பம்பாளையம் பைபாஸ், முத்துமாணிக்கம் நகர், ஐஸ்வர்யா கார்டன், ரோஜா நகர், சுப்பிரமணியன் நகர், அருள்வேலன் நகர், வெட்டுக்காட்டுவலசு, எல்.வி.ஆர்.காலனி, ஈகிள் கார்டன், பழையபாளையம், கருவில்பாறைவலசு, குமலன்குட்டை, அடுக்கம்பாறை, பாரி நகர், செல்வம் நகர், சூளை, கீதா நகர், அன்னை சத்யா நகர், கணபதி நகர், முதலிதோட்டம், முருகேசன் நகர், மல்லி நகர், இந்திராகாந்தி நகர், ஈ.பி.பி.நகர், இந்து நகர், கந்தையன்தோட்டம், எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர், வில்லரசம்பட்டி சன் கார்டன், பொன்னிநகர் மற்றும் சீனாங்காடு.

டி.என்.பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர் மற்றும் இந்திரா நகர்.

புஞ்சைதுறையம்பாளையம், எரங்காட்டூர் மற்றும் ஏளூர் துணை மின் நிலையங்கள்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புஞ்சைதுறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், எரங்காட்டூர், பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், தோப்பூர், வினோபா நகர், சைபன் புதூர், குளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூலவாய்க்கால், ஏளூர், எம்.ஜி.ஆர்.நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு, சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு. 

கூகலூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன் புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதூர், பொன் னாச்சிபுதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சாணார்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டன் புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

தொப்பம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஆலாம்பாளையம், ஏரங்காட்டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம் நால்ரோடு மற்றும் முடுக்கன்துறை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20½ பவுன் நகை திருடிய கொள்ளையன் கைது

ஈரோட்டில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 20½ பவுன் நகை திருடிய கொள்ளையன் கைது

ஈரோடு சூரம்பட்டி என்ஜிஜிஓ காலனி 7வது வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 59). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் வெளியே சென்றவர் மாலையில் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வேகமாக வெளியேறினார். இதை பார்த்த பன்னீர்செல்வம் அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரை தள்ளிவிட்டு அந்த மர்ம நபர் தான் வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினார்.

இதையடுத்து பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அவற்றில் வைக்கப்பட்டு இருந்த 20½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அந்த பகுதியை விட்டு திருடன் வெளியேறவில்லை என்று உறுதி செய்தனர்.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள முட்புதரில் காட்டில் திருடன் மறைந்து படுத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த நகையையும் போலீசார் மீட்டனர். பின்னர் அவரை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் அவர். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசராவ்பெட் பகுதியை சேர்ந்த ராயபாட்டை என்கிற வெங்கையா (வயது 48) என்பதும், பன்னீர்செல்வம் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட அவர், வீடு புகுந்து நகை திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வெங்கையாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் திருட்டு, கொலை உள்பட மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் நேற்று மற்றும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனையடுத்து, மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்ட துணைத் தலைவராக ராஜா அருள் சேவியர், மாவட்ட செய்தி தொடர்பாளராக சாதிக் பாட்ஷா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்களாக ரியாஸ் அஹமது, ஞானசேகர், மாநகர இளைஞரணி அமைப்பாளராக பிரேம்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக தங்கராஜ், மாநகரப் பொருளாளராக கமலஹாசன், மாநகர துணைத் தலைவராக குழந்தைசாமி என்ற செல்வம், மாநகர துணை செயலாளராக ஸ்ரீரங்கன், பெருந்துறை வட்டாரத் தலைவராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள், இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 225 மனுக்களின் மீது விசாரணை

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 225 மனுக்களின் மீது விசாரணை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (நவ.11) திங்கட்கிழமை நடைபெற்றது.


இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை, நத்தம் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் இல்லம் சேர்க்கை, குடிநீர் வசதி வேண்டி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 225 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 5 தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கல்வி மற்றும் மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், கொடுமுடி வட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தமைக்கு, அவரின் தாயாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, தாட்கோ மேலாளர் அர்ஜூன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி பணி: ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் இலவச தடுப்பூசி பணி: ஆட்சியர் தகவல்

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திட, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சினையுற்ற ஆடுகள் தவிர 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆடுகள் வளர்ப்பில், ஆட்டுக்கொல்லி நோய் என்பது விவசாயிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக, இந்நோய் தாக்கி, ஆடுகள் இறப்பதால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இந்நோயால், ஆடுகள் இறப்பினை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக அனைத்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு போடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தங்களது ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.