வியாழன், 21 நவம்பர், 2024

ரூ.16,500 கோடி விவசாய பயிர் கடன் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

ரூ.16,500 கோடி விவசாய பயிர் கடன் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகு மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு, திண்டல்மலை நகர கூட்டுறவு சங்கத்தில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.25.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (நவ.21) வழங்கினார்.


பின்னர், இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை எண்ணெய் விவசாயிகள் அதிகபடியாக இருக்கின்ற காரணத்தால், இங்கு விளையக்கூடிய தேங்காய்களாகவும், கொப்பரைகளாக மாற்றியும் தங்குடைய வாழ்வாதாதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த விவசாய பெருங்குடி மக்கள் வரவு செலவு செய்கின்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டறவு சங்கமானது நல்லமுறையில் செயல்பட்டு, விவசாயிகள் பாராட்டுகின்ற வகையில் இயங்கி வருகின்றது. கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர்ப்புற கூட்டுறவு சங்கங்களாக தரம் உயர்த்தப்பட்டு, கிராம கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.


மேலும், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு ஆகியற்றினை முன்னேற்றுவதே கூட்டுறவு சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரையின்படி, விவசாயிகளுக்கான பயிர் கடன் ரூ.12 ஆயிரம் கோடியை கடந்து தற்போது ரூ.16,500 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு வங்கி மூலம் பண பரிவர்த்தனை இந்தாண்டு ஒரு லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் பணி 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மேலும், கிராம அளவில் மொபைல் ஏ.டி.எம் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளை உயர்த்த புதுமையான திட்டங்கள் மூலம் புதுமைப்படுத்த அனைவரும் முனைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.


முன்னதாக, பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரை ஏல பணிகள், பதனிடும் அலகுகள், எண்ணெய் அரவை ஆலையில் தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடி, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகின் செயல்பாடுகள், அங்கு தயாரிக்கப்படும் மஞ்சள், ராகி மாவு, மசாலா பொருட்கள் தயாரிப்பு, மற்றும் பேக்கிங் ஆகியவற்றினை பார்வையிட்டார். மேலும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தட்டாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், விவசாயம் இயந்திரமாக்கலின் துணைப்பணி திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட ரூ.8 லட்சம் மானியத்தில் ரூ.15.99 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர், சுழற்கழப்பை, ஏர் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை காஞ்சிக்கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பயன்பாட்டிற்கு வழங்கும் பொருட்டு, அதன் சாவியினை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சென்னை சுப்பையன், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் (ஈரோடு மண்டலம்), கூடுதல் பதிவாளர் சீனிவாசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் செந்தமிழ்செல்வி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வக்குமரன், துணைப்பதிவாளர் தகாலிதா பானு, கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி உட்பட கூட்டுறவு சங்கங்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடியில் 7 புதிய திட்டப் பணிகள்: திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடியில் 7 புதிய திட்டப் பணிகள்: திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை தாளவாடியில் அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (நவ.21) வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சேஷன் நகர் பகுதியில், ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வருவாய் வட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் ஏறத்தாழ 300 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.


தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தாளவாடி வட்டம் சேஷன்நகர் பகுதியில் ரூ.47.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், தாளவாடி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலைய பொது சுகாதார அலகு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு கட்டடம். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நம்பியூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம். ரூ.53.74 லட்சம் மதிப்பீட்டில் திங்களூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பவானி மண் தொழிலாளர் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம், போதை மீட்பு மையம், அந்தியூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.61.32 கோடி செலவில் 34 மருத்துவ கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 375 துணை சுகாதார நிலையங்கள், 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம், 1 மாவட்ட தலைமை மருத்துவமனை, 2 வட்டம் சாரா மருத்துவமனை, 5 வட்டார மருத்துவமனை, 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2024-25-ல் ரூ.19.80 கோடி மதிப்பீட்டில் 16 அறிவிப்புகளின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


மேலும், ரூ.8.5 கோடி மதிப்பில் ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி, ரூ.87 லட்சம் மதிப்பில் மகப்பேறு சிறப்பு மையம் மற்றும் மொடக்குறிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மல்டிபாராமானிட்டர் மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை, மொடக்குறிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் இதர கருவிகள் வழங்கப்படும்.

மேலும், ஜம்பை, பு.புளியம்பட்டி, தாளவாடியில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், பி.மேட்டுப்பாளையம், அஞ்சூர், எருட்டிபாளையம், குந்திரி பகுதியில் துணை சுகாதார நிலையங்கள், கடம்பூர், டி.ஜி.புதூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சமுதாயம் சார்ந்த புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

மக்களைத் தேடி ஆய்வகம் திட்டத்தின் கீழ், இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் செமி ஆட்டோ அனலைசர், செல் கவுன்டர் மற்றும் இதர ஆய்வகக் கருவிகள் வாங்குதல், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் தகவல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வாங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.


ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள்" முகாமானது ஈரோடு மாவட்டத்தில் 22.11.2023 அன்று காளிங்கராயன்பாளையம், துணை சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டதில் 10,24,998 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 123 நபர்கள் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதல் சேவை 18,22,062 நபர்களுக்கும், தொடர் சேவை 7,35,743 நபர்களுக்கும் 100 சதவீதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 6 அரசு மருத்துவமனை. 10 தனியார் மருத்துவமனைகளில் 6750 நபர்களுக்கு ரூ.7,34,75,701 மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 171 முகாம்கள் நடத்தப்பட்டு 157455 பயன்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இதயம் காப்போம் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதில் இருதய பாதுகாப்பு மருந்துகளான ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரல், ஆட்ரோவாஸ்டாட்டின் மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 536, துணை சுகாதார நிலையங்களில் 22 என 558 வாங்கி பயன்பெற்றுள்ளனர்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பொருட்டு சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 386 நபர்களும், துணை சுகாதார நிலையங்களில் 36 நபர்களும் என 422 நபர்கள் பயனடைந்துள்ளனர்.


பழங்குடியினருக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் மாவட்டம் தமிழ்நாட்டின் நீலகிரி ஆகும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் யாரும் எளிதில் செல்ல முடியாத போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அவர்களின் வீடுகளை தேடிச் சென்று மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தாளவாடி மக்கள் பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இப்பகுதிக்கு என பிரேத பரிசோதனை கூடம் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.78 லட்சம் மதிப்பில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 10 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினையும். 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டச்சத்து பெட்டகத்தினையும், காசநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 நபர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினையும் அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பண பரிவர்த்தனை இலக்கு ரூ.1 லட்சம் கோடி: அமைச்சர் பெரியகருப்பன்

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பண பரிவர்த்தனை இலக்கு ரூ.1 லட்சம் கோடி: அமைச்சர் பெரியகருப்பன்

ஈரோடு மாவட்டத்த்தில் உள்ள பெருந்துறை, ஈரோடு மஞ்சள், கொப்பரை தேங்காய் விற்பனைக்கான கூட்டுறவு சங்கங்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று (நவ.21) ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஈரோடு, திண்டல் மலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்ட பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளதால், தேங்காயாகவும், கொப்பரை தேங்காயாகவும் விற்பனை செய்து, பொருளாதார மேம்பாட்டில் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் வழங்கினர். தற்போது, ரூ.12 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து கடன் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, ரூ.16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில், ரூ.589 கோடி ரூபாய் பயிர் கடனாகவும், கால்நடை பராமரிப்பு கழகம், ரூ.88 கோடி ரூபாய், நகை கடன், ரூ.921 கோடி, மகளிர் குழுவுக்கு, ரூ.76 கோடி ரூபாய் கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் வங்கிகளில் வரவு, செலவு பண பரிவர்த்தனை கடந்தாண்டு ரூ.86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இருந்ததை, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முதல்வர் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.

கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அதன் கீழ் கொண்டு வர முயல்கிறோம். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில், 30 ஆண்டுக்கு மேலாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. மத்திய அரசு கூறும் சில விளக்கங்கள், நாம் ஏற்புடையதாக இல்லை. அதை சரி செய்ய கேட்டு வருகிறோம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடந்தது நிர்வாகத்துக்கு இடையூறாக உள்ளது. அதனால் கூட்டுறவு சங்கத்தில் முழுமையாக அனைவர் பதவி காலமும் முடியவில்லை. அனைவர் பதவி காலமும் முடிந்தபின், முறையான உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். முன்பு, போலி அங்கத்தினர் சேர்க்கை அதிகம் இருந்தது. 40 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள் என கண்டறிந்து நீக்கி உள்ளோம்.

நீக்கியவர்கள், உண்மையான உறுப்பினராக இருந்தால் அவர்களது ஆதார் அட்டையையும் இணைக்க கேட்டுள்ளோம். அதில், 60 சதவீதம் பேர்தான் இணைத்துள்ளனர். முழு உறுப்பினர் பட்டியல் தயாரித்த பின், தேர்தல் நடத்தப்படும். கூட்டுறவு வங்கிகளை ‘கோர் பாங்கிங்’ மூலம் இணைத்து, ஏடிஎம் கார்டு வழங்கி, எங்கும் பணம் எடுக்கலாம் என்பதற்கான திட்டப்பணி, 50 சதவீதத்துக்கு மேல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கி சார்ந்த துறையில் போட்டிகள் உள்ளதால், கூட்டுறவு துறையை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள், கூட்டுறவு கடன் சங்கத்தில் கணக்கு வைத்து ஆர்டி போடுகின்றனர். அது அவர்களாகவே சேமிக்கின்றனர். நாங்கள் சேமிக்க கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறாக கூட்டுறவு வங்கியில் 9 லட்சம் பேர் ஆர்டி துவங்கி உள்ளனர். எங்கும் நாங்கள் நிர்பந்திக்கவில்லை என்று கூறினார்.
தமிழகத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் காரணமாக ஒரு மாநிலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு சேலத்தில் பேட்டி.

தமிழகத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் காரணமாக ஒரு மாநிலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு சேலத்தில் பேட்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் காரணமாக ஒரு மாநிலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு சேலத்தில் பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  ஆலோசனையின் படி தமிழ்நாடு முழுவதும் கிராம வட்டாரம் நகர பேரூராட்சி மாநகர கமிட்டிகளின் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநகர துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆன கேவி தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,  கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆன கே.வி தங்கபாலு, 
கிராம அளவில் காடுகள் அளவில்  காங்கிரசை புதுப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் அதன் ஒரு பகுதியாக  சேலம் மாநகர மாவட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி அந்த நிகழ்வுகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டிருக்கிறோம். மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மாவட்ட பார்வையாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் சொல்லப்பட்டவர்கள் அறிவித்திருக்கிறார்கள். மாவட்ட பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட தலைவரோடும் நிர்வாகிகளோடும் இணைந்து இந்த செயல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலம் மாநகர தலைவர் பாஸ்கர் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எல்லா வாக்குச்சாவடிகளும் காங்கிரஸ் கட்சியை மீட்டு உருவாக்கம் செய்கிற நல்ல பணியை செய்ததற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சி வெற்றி அடையும் என நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி புதிய நிலையில் புதிய வடிவத்தில் நல்ல முன்னெடுப்புகளை எடுப்பதற்கு வாய்ப்பாக பணி உறுதிப்படுத்துவோம், என்பது எங்களுடைய நோக்கம். தொடர்ந்து பேசிய அவர், ஓசூரில் வழக்கறிஞர் கொலை நடந்திருப்பதையும் நாங்கள் பத்திரிகையிலே பார்த்தோம்.  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நடக்கிற ஒரு சில குறைகளை வைத்து ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை மதிப்பிட முடியாது கூடாது. தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை  பார்த்தால் தமிழ்நாடு எப்பொழுதும் சிறந்த மாநிலமாக இருக்கிறது சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள்  நடப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அதை நாம் வரவேற்கவில்லை இன்னும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக பணியாற்றி இதுபோன்ற செயல்பாடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் அந்த ஆசிரியை படுகொலையை பற்றி விரிவான அறிக்கை தமிழ்நாடு அரசு காவல்துறை உரிய விசாரணை செய்யும் என நம்புகிறோம்.  அதேபோல வழக்கறிஞர் கொலையும் தவிர்க்க வேண்டும் சில தனிப்பட்ட காரணங்களால் நடைபெறுகிற கொலை கொள்ளைகள் காரணமாக கருதி ஒரு மாநிலத்தில் நிர்வாகத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதே  என்னுடைய பார்வை என்றார். அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செல்வதற்கு மாநில அரசு நல்ல முயற்சிகளை மேற்கொள்ளும் என நாங்கள்  நம்புகிறோம் என்று கூறிய அவர், அரசியல் கட்சிகள் என்றாலே முன்னிலைப்படுத்துவது பஞ்சாயத்து தேர்தல் சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி பஞ்சாயத்து நிலை பஞ்சாயத்து அரசாங்கம் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றி எங்கள் கூட்டணி பெற்றிருக்கிறது.  இது ஒரு மகத்தான மக்கள் கூட்டியாக திகழ்கிறது. மக்கள் நம்பிக்கை பெற்ற  அரசாக தமிழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் அமைந்திருக்கிற இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் பல்வேறு வெற்றிகளை பல நிலைகளில் பெற்று வருகிறோம் என்பது தான். என்றும் தெரிவித்தார் குட்கா மற்றும் போதை பொருட்கள் என்பது யதார்த்த நிலை என்றும்  தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது, குறிப்பாக போதை மருந்துகள் போதை வஸ்துகள் அதிகமாக வினோக்கப்படுவது குஜராத் மாநிலம் தான் போதை வஸ்துகளை அதிகமாக நாட்டு மக்களிடத்திலே வினியோகிக்கிற நிலை இருக்கிறது. அது தவிர்க்கப்பட வேண்டும் மத்திய அரசு அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மாநில அரசு பல முயற்சிகளை எடுத்திருக்கிறது. என்பதையும் நாம் அறிவோம். கடந்த மூன்று ஆண்டுகளில் போதை இல்லா தமிழகம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் விரும்புகிறோம்.  தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் போதை போன்ற தவறான பண்பில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.  மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க  வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்  எல்லா கட்சிகளுக்கும் பல்வேறு பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால்  தமிழ்நாட்டில் இப்பொழுது முழு பலத்தோடு முழு மெஜாரிட்டியோடு தனித்த மெஜாரிட்டோடு திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இருக்கிறது.  எங்கள் தோழமைக் கட்சி ஆட்சி இருக்கிறது. ஆக இந்த நேரத்தில் துணை முதலமைச்சர் இது போன்ற தேவைகளை பற்றி பேசுவது நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து என்றும்  இரண்டாவது,  கூட்டணி சம்பந்தமாக அல்லது ஆட்சியில் பங்கு என்ற நிலைப்பாடு எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை மட்டுமே எடுக்க  உரிமை உள்ளது  என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் என்றதோடு,  எங்களுடைய கூட்டணி சிறப்பாக இயங்குகிறது தமிழ்நாட்டில் எங்களோடு  வெற்றி கூட்டணி தலைவர்கள் இணைந்து பேசி எல்லா நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் என திரளானூர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். சேலத்தில் நீதிமன்ற பணிகள் பாதிப்பு.

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். சேலத்தில் நீதிமன்ற பணிகள் பாதிப்பு.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். சேலத்தில் நீதிமன்ற பணிகள் பாதிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் வழக்கறிஞர் கண்ணனை அறிவாளால் வேட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில்  வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் கொடூரமாக தாக்கியதற்கு கண்டனம்  தெரிவிக்கும் விதமாக இந்த  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தும் விதமாக இன்று பணிபுறகணிப்பில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் நாளை காலை தாக்குதல் நடத்திய நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் குற்றப்பத்திரிகை உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் வரும் வரை  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இமயவரம்பன் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகளும் பல்வேறு வடக்குக்காக வந்திருந்த வழக்காடிகளும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.




புதன், 20 நவம்பர், 2024

அந்தியூர் அருகே போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய 5 பேர் கைது

அந்தியூர் அருகே போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய 5 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வெள்ளப்பிள்ளையார் கோவில் பெரிய ஏரி அருகில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 5 வாலிபர்கள் ஒரு இடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்தனர்.

அவர்கள் கையில் மருந்து செலுத்தப்படும் ஊசி இருந்தன. இதனால் போலீசார் 5 பேரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 34), அபினேஷ் (வயது 20), ஹரிஹரன் (வயது 24), சுரேஷ் (வயது 24), இளம்பருதி (வயது 24) என்பதும், அவர்கள் 10 போதை மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையில் 6 மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் அங்கு போதை மாத்திரைகளை விற்க நின்று கொண்டு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 4 போதை மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு வழியாக சபரிமலைக்கு 3 சிறப்பு ரயில்கள்

ஈரோடு வழியாக சபரிமலைக்கு 3 சிறப்பு ரயில்கள்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கச்சக்குடா, ஐதராபாத்தில் இருந்து ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கச்சிகுடா - கோட்டையம் (07131) சபரிமலை சிறப்பு ரயில் வருகிற 24ம் தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோட்டுக்கு 25ம் தேதி காலை 9.50 மணிக்கு வந்து சேருகிறது. இங்கிருந்து 10 மணிக்கு புறப்படும் ரெயில் கோட்டையத்துக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கமாக அங்கிருந்து இரவு 8.50 மணிக்கு கோட்டையம் - கச்சிகுடா (07132) சபரிமலை சிறப்பு ரயில் புறப்பட்டு ஈரோட்டுக்கு 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வருகிறது. இங்கிருந்து 4.40 மணிக்கு புறப்பட்டு 27ம் தேதி நள்ளிரவில் 1 மணிக்கு கச்சிகுடா சென்றடைகிறது.

அதேபோல், ஐதராபாத் - கோட்டையம் (07135) சபரிமலை சிறப்பு ரயில் வருகிற 26ம் தேதி மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு 27ம் தேதி காலை 8.20 மணிக்கு வருகிறது. இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு கோட்டையத்துக்கு மாலை 4.10 மணிக்கு சென்றடைகிறது.

பின்னர், அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் கோட்டையம் ஐதராபாத் (07136) சிறப்பு ரயில் 28ம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு ஈரோட்டுக்கு வருகிறது. 2.20 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது.

இதேபோல் மற்றொரு சிறப்பு ரயிலான ஐதராபாத் - கோட்டையம் (07137) சிறப்பு ரயில் நாளையும் (வெள்ளிக்கிழமை), வருகிற 29ம் தேதியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை மறுநாளும் (சனிக்கிழமை), 30ம் தேதியும் காலை 9.40 மணிக்கு ஈரோட்டுக்கு வருகிறது. அன்றைய தினம் மாலை 6.45 மணிக்கு கோட்டையம் சென்றடைகிறது.

மறுமார்க்கமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை), 30ம் தேதி ஆகிய நாட்களில் இரவு 9.45 மணிக்கு கோட்டையத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் சிறப்பு ரயில் ஈரோட்டுக்கு மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு வந்தடைகிறது. நள்ளிரவு 12.50 மணிக்கு செகந்திராபாத்தை ரயில் சென்றடைகிறது.