புதன், 11 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை பெயர் சூட்ட அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை பெயர் சூட்ட அருந்ததியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடத்திற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என பெயரிட வேண்டுமென அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் ஈரோடு நல்லி அரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் வடிவேல்ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் நினைவரங்கம் அமைக்க அரசு ரூ.4 கோடியே 90 லட்சம் ஒதுக்கி அடிக்கல் நாட்டப்படுகிறது. 

இதற்கு தமிழக அரசிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு மாவீரன் பொல்லான் மாளிகை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் ரூ.8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நலத்திட்டங்களைப் பெற வருமான உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். வீட்டுமனை பட்டாவிற்கு நிலமெடுப்பு செய்வதில் உள்ள விதிமுறைகளை மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். பூமி தானம் மற்றும் நிலக்குடியேற்ற சங்கம் மூலம் வழங்கப்பட்ட விளை நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் தாட்கோ கடனுதவிகளை வழங்க வேண்டும்.

 பட்டியல் சாதியனர்க்கு சிறப்பு குறைதீர் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த அரசாணை வெளியிட வேண்டும். கலப்பு திருமண சான்று பெறுவதில் விதிமுறைகளை மாற்றி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் 17 அமைப்புகள் கலந்து கொண்டன. பேட்டியின் போது அதன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் வணிகர் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளின் வணிகர் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும். ஜிஎஸ்டியை எளிமையாக்கும் விதமாக பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும். ஜியோ, டி- மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் உணவு பொருட்கள், மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாநில அரசு சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதை திரும்ப பெற வேண்டும். வணிக வரி உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டணம் மாதந்தோறும் வசூலிப்பதை நடைமுறை படுத்த வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்டத் தலைவர் ஆர்.கே.சண்முகவேல் தலைமை வகித்தார். பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன், பேரமைப்பின் கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஈரோடு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் வி.துரைசாமி, ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கச் செயலாளர் பி.சுரேஷ், ஈரோடு மாநகர இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத் தலைவர் பாபு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெக்னிசியன்ஸ் அசோசியேசன் மாநிலத் தலைவர் ஆர்.கிருபானந்தா, பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

முன்னதாக மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி வரவேற்பு உரையாற்றினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய்தி தொடர்பாளர் சாதிக் பாட்சா, மாவட்ட துணை தலைவர்கள், துணைச் செயலாளர், மாநகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இணைப்புச் சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.12) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.12) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர், பெருந்துறை அருகே உள்ள சிப்காட் III மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.12) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி கொளப்பலூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காமராஜ்நகர், யூனிட்டி நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்பகவுண்டன்புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன் கோவில் பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம்.

பெருந்துறை சிப்காட் III துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- 
பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த வடக்கு பெருந்துறை, கிராமிய பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம்(SEZ), சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர்,கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, கோவை மெயின்ரோடு சின்னமடத்துபாளையம், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், பெரியமடத்துபாளையம், கள்ளியம்புதுார், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர் மற்றும் கூட்டுறவு நகர்.

சத்தியமங்கலம் வரதம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வடக்குப்பேட்டை, புளியம்கோம்பை, சந்தைக் கடை, மணிக்கூட்டு, கடை வீதி, பெரியகுளம், பாசக் குட்டை, வரதம்பாளையம், ஜேஜே நகர், கோம்புப்பள்ளம், கோட்டுவீராம்பாளையம் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.