ஈரோடு அருகே உள்ள செட்டிபாளையம் பாரதிபாளையம் முதல்வீதியைச் சேர்ந்தவர் நல்லசிவம். ஜோசியம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி மோளகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
இரண்டாவது மனைவி கண்ணம்மாள் உடன் பாரதிபாளையம் பகுதியில் நல்லசிவம் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கண்ணம்மாவுக்கும், கண்ணம்மாவின் உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு தொடர்பாக வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (டிச.12) பிற்பகலில் நல்லசிவம், கண்ணம்மாள் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீச்சருவாளுடன் வந்த கண்ணம்மாளின் உறவினர்கள் சிலர் சரமாரியாக வெட்டி கண்ணம்மாளை படுகொலை செய்தனர்.
இதை தடுக்கச் சென்ற நல்லசிவத்திற்கு கை கால் மற்றும் முழங்காலில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஈரோடு ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன், தடயங்களை சேகரித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது