வெள்ளி, 10 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா கூட்டணி சார்பில் திமுக போட்டியிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.10) அறிவித்தது. இதையடுத்து திமுக வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் இன்று (ஜன.11) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 2011-2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார்.

இவரது தந்தை பெயர் சொக்கலிங்க முதலியார், தாயார் சம்பூரணம் இருவரும் உயிருடன் இல்லை. சொந்த ஊர் ஈரோடு. மனைவி பெயர் அமுதா. இல்லத்தரசி. மகள் ருசிதா ஸ்ரீ. பல் மருத்துவர். மகன் மெகர்வின் ஸ்ரீ எல்எல்பி (இறுதி ஆண்டு). தொழில் ஜவுளி மொத்த வியாபாரம்.

இவர், 1987ல் திமுக வார்டு பிரதிநிதி. விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர். தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர். 2011ல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக எம்எல்ஏ. 2016ல் தென்னரசு அதிமுகவிடம் தோல்வி. 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளர் இருந்து வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராகவும், 2019 பாராளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், 2023 பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்தார்.

அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக அறிவித்த அனைத்து பொதுக் கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

பெருந்துறை சரளையில் நடைபெற்ற மண்டல மாநாட்டு பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சருமான சு.முத்துச்சாமியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், இவர் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருக்கிறார்.


முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டி: காங்கிரஸ் கமிட்டி அறிக்கை

முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டி: காங்கிரஸ் கமிட்டி அறிக்கை

முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு அடைந்ததையொட்டி, இடைத்தேர்தல் வரவிருக்கிறது.

2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச் செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்: தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் இன்று (ஜன.10) மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி இன்று (ஜன.10) காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. முதல் நாளான இன்று 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வருகிற 17ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். தேர்தல் தொடர்பான புகார்கள் இதுவரை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கட்டுபாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மீறல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பறக்கும் படை குழுவினர் மூலம் தற்போது வரை ரூ.2.80 லட்சம் மதிப்பிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பேட்டியின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், மாநகர் நல மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர்களின் பாரம்பரியமிக்க சண்டை சேவல்களை பறக்கவிடும் நிகழ்ச்சியுடன் கலை கட்டிய கல்லூரி பொங்கல் விழா. சேவல்கள் பறந்து தாக்குவதை ஆச்சரியத்துடன் கண்டு வியந்த கல்லூரி மாணவர்கள்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க சண்டை சேவல்களை பறக்கவிடும் நிகழ்ச்சியுடன் கலை கட்டிய கல்லூரி பொங்கல் விழா. சேவல்கள் பறந்து தாக்குவதை ஆச்சரியத்துடன் கண்டு வியந்த கல்லூரி மாணவர்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழர்களின் பாரம்பரியமிக்க சண்டை சேவல்களை பறக்கவிடும் நிகழ்ச்சியுடன் கலை கட்டிய கல்லூரி பொங்கல் விழா. சேவல்கள் பறந்து தாக்குவதை ஆச்சரியத்துடன் கண்டு வியந்த கல்லூரி மாணவர்கள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் வைபவம் வரும் 14ஆம் தேதி உலகத் தமிழர்களால் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. தைத்திருநாளை வரவேற்கும்  விதமாக சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று சூரிய பகவானுக்கு தங்களது நன்றியினை செலுத்திய வல்லம் உள்ளனர் வீர தமிழர்கள். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தைத்திருநாளை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் பொங்கல் திருவிழா நடைபெற்ற ஆளுமை கூட, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி பொங்கல் விழா மற்றும் அனைத்து கல்லூரி நிர்வாகத்தினரையும் திரும்ப பார்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையல்ல. 
வழக்கமாக பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் புது பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு கல்லூரி மாணவர்களின் கலை விழா நடத்தப்படுவதும், கூடுதலாக மாட்டுவண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல் கபாடி போட்டி பெண்களுக்கே உரித்தான கோலாட்டம் குறித்த வகைகளுடன் இந்த பொங்கல் வைபவம் இனிதே நிறைவு பெரும். ஆனால் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சேலம் அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா வழக்கமாக புது பானையில் பொங்கலிட்டு கரும்புகளை படைத்தும் மஞ்சள் கொம்புகளை படைத்தும் இயற்கைக்கு நன்றி தெரிவித்ததோடு, பாரம்பரிய விளையாட்டுகளும் இதுபோக உயர் ஜாதி ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்தும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
கல்லூரியின் தாளாளர் தங்கவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் விஜய கணேஷ் மற்றும் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் விமலாதித்தன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்த இந்த விழாவின் போது, கல்லூரி மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்தும், மாணவிகள் தாவணி மற்றும் புடவைகள் அணிந்து நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலந்து கொண்டனர். 
இதனிடையே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் சண்டை சேவல் என்றால் என்ன அவற்றை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது அவை போட்டிகளில் எவ்வாறு மற்றவர்களின் முதுகில் குத்தாமல் நேருக்கு நேராக மோதி எவ்வாறு தங்களது உரிமையாளர்களை வெற்றி பெறச் செய்கிறது என்பதை உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த சேவல்கள் பறக்க விடும் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் கண்டு ரசித்தது நம்மால் காண முடிந்தது. சேவல் சண்டை என்றால் ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த சூழலில் இதுபோன்ற சண்டை சேவல்களின் சண்டைகளை நேரில் தற்பொழுது வரை தங்களால் காண இயலவில்லை என்றும், பல்வேறு  காரணங்களுக்காக சேவல் சண்டைக்கு தமிழகத்தில் தடை விதித்துள்ள தமிழக அரசு நடைபெற உள்ள தைத்திருவிழாவின் போதாவது அதற்கான தடைகளை நீக்கி சட்ட திட்டத்துக்கு உட்பட்டு காவல்துறையினரின் முன்னிலையில் இந்த போட்டியினை நடத்த உரிய அனுமதி வேண்டும் என்று மாணாக்கர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
வெத்துக்கால் kசேவல் சண்டை மற்றும் கத்திக்கால் சேவல் சண்டை நடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்கள் உள்ளிட்ட அசௌகரிய சம்பவங்களை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது இந்த தடையை நீக்கி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக எவ்வாறு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியதோ அதேபோன்று எந்த ஒரு சூழலிலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் நின்று எதிரியை தாக்கும் குணம் கொண்ட இந்த சேவல் சந்தைக்கு இனியாவாது இந்த வருடமாவது தமிழக அரசு அனுமதி அளித்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த பொங்கல் திருவிழா அமைய வேண்டும் என்பது மட்டுமே சேவல் சண்டை வளர்ப்பாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 
நிறைவேற்றுமா தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வேட்புமனு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வேட்புமனு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி, இன்று (ஜன.10) காலை 11 மணி முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இறுதிச்சடங்கு செய்யும் முறையில் சேவண்டி, சங்கு, பால் ஆகியவற்றுடன் வேட்பு தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகம் வந்தார். 

அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ்யிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.

அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனக்கூறி இவ்வாறாக நூதன முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார்.

 மேலும், இவர் ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் செருப்பு மாலை அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்.5ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் இன்று (ஜன.10) காலை 11 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற சந்திரமோகன் என்பவர் அவுட்சோர்சிங் முறையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகம் வந்துள்ளார்.

அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றபோது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அவரை அரசு வாகனத்தில் ஏற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிக்காக வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 9 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜன.7ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாடு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பழைய கட்டிடம்) முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் 0424-2267674, 0424-2267675, 0424-2267679 மற்றும் 9600479643 தொலைபேசி எண்களிலும், 1800-425-0424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண் 1950ஐ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.