செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

மொடக்குறிச்சி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

மொடக்குறிச்சி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.18) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.27 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களையும், மாணவ, மாணவியர்களின் கழிப்பறை ஆகியவற்றினை அவர் பார்வையிட்டு, மாணவ, மாணவயிர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி, முத்துகவுண்டன்பாளையத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் வீதம் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளியிடம் கலந்துரையாடினார். மேலும், பெரியார் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, திட்டத்தின் பயன்கள் குறித்து பயனாளியிடம் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி சின்னியம்பாளையம் ஊராட்சி ஏடி காலனியில் ஊரக குடியிருப்புகள் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 16 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கண்ணாங்காட்டுமேடு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், நஞ்சை ஊத்துக்குளி அம்மன் நகர் குக்கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, பள்ளக்காட்டுப்புதூர் கிராமம் கணபதிபாளையம் வீதியில் ரூ.11.89 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் நஞ்சை ஊத்துக்குளி கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மொடக்குறிச்சி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் 96 கடைகளுடன் வாரச்சந்தை கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, தூரபாளையம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இச்சுத்திகரிப்பு நிலையத்திற்கு 6 இடங்களில் கழிவு நீர் சேகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 8 வார்டுகளுக்கு உட்பட்ட சுமார் 2200 வீடுகளில் உள்ள கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சண்முகபிரியா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அந்தியூரில் வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக பணம் பெற்று தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மாயம்.?

அந்தியூரில் வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக பணம் பெற்று தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் மாயம்.?

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 5 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து வந்தார். முன்னதாக கடந்த ஒரு வருடமாக இந்த அறையில் ஒரு வாலிபரை அவர் தங்க வைத்து இருந்தார்.
இதையடுத்து, அவர் அந்தியூர் பவானி ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து அதில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். இங்கு டிரேடிங் பாரின் கரன்சி முறையில் எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி வந்தார். பொது மக்களை அவர் சந்தித்து தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் வெளி நாடுகளில் முதலீடு செய்து பல மடங்கு பணம் உங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என கூறி மூளை சலவை செய்தார்.

இதை தொடர்ந்து, அவர் கூறுவது உண்மை என நம்பி அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் இவரிடம் பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொது மக்கள் பலரிடம் அவர் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பெற்றிருப்பதாகவும், இதனால் சுமார் ரூ.1 கோடி வரை அவர் வசூல் செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, இந்த நபர் தற்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலுவலகம் திடீரென மூடப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவரிடம் பணம் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தொடர்பு கொள்ளவும் முடிய வில்லை. மேலும் அவர் குடி இருந்த வீடும் கடந்த 3 மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் தினமும் காலை நேரத்தில் பணம் கொடுத்தவபர்கள் வந்து பார்த்து சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் தங்கி இருந்த வீடும் தற்போது பூட்டப்பட்டு இருப்பதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை திறக்க முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இதை தொடர்ந்து அவர் தங்கி இருந்த வீட்டில் உரிமையாளர் மேலும் பூட்டு போட்டு அவர் எப்போது வருவார் என கண்காணித்து வருகிறார்.

மேலும், இது தொடர்பாக பொதுமக்கள், பணம் செலுத்திய நபர்கள் எந்த அடிப்படையில் காவல் துறையில் புகார் கொடுப்பது. என்ற குழப்பத்தில் இதுவரை யாரும் புகார் கொடுக்காமல் இருந்து வருகின்றனர். இதே போல் இந்த நபர் கோவையில் ஏமாற்றி இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். தற்போது அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு உள்ளார் என்ற எந்த விபரமும் தெரிய வில்லை என மக்கள் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு யார் அந்த நபர்? எவ்வாறு அந்த நபர் மக்களை ஏமாற்றினார். என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

ஈரோட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2025ம் ஆண்டு நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் மாணவ மாணவியர்கள் தேர்வினை சிறந்த முறையில் எழுதி, வெற்றிபெறும் வகையில், ஒவ்வொரு புதன்கிழமைதோறும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முழுமையான மாதிரித் தேர்வுகள் வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/MGzcFDc3diqKyn3C6 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் வரும் 24ம் தேதிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


திங்கள், 17 பிப்ரவரி, 2025

அத்தாணி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: 80 வயது விவசாயி கைது

அத்தாணி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: 80 வயது விவசாயி கைது

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: 80 வயது விவசாயி கைது

அந்தியூர் அருகே கரும்பு தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 17 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் அருகே அத்தாணி கிழக்கு பீட்டிற்கு உட்பட்ட காக்காச்சிகுட்டை கணக்கம்பாளையத்தார் தோட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில் யானை ஒன்று நேற்று காலை உயிரிழந்து கிடந்தது. அதைப்பார்த்த விவசாயிகள் உடனே அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), ஈரோடு வனப்பாதுகாவலர் ராஜ்குமார், அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கரும்பு தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (வயது 80) என்பதும், வனவிலங்குகளிடம் இருந்து கரும்பு பயிரை காப்பாற்றுவதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் கரும்பு பயிரிட்டு உள்ள நிலத்தை சுற்றி கம்பி கட்டி அதில் கிணற்று மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்து பாய்ச்சி இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அத்தாணி கிழக்கு பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வந்த ஆண் யானை, கரும்பு தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

அப்போது, மின் வேலியில் சிக்கிக் கொண்டது. அதில், இருந்து உடலில் மின்சாரம் பாய்ந்ததில் யானை சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து, விளை நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக விவசாயி சின்னச்சாமி மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இதனையடுத்து, வன கால்நடை மருத்துவர் சதாசிவம் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர், யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை முயன்றனர். அப்போது, அங்கிருந்த விவசாயிகள் யானையை பிரேத பரிசோதனை செய்ய விடாமல் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதைத்தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், இதுகுறித்து கால்நடை மருத்துவர் சதாசிவம் கூறும்போது, உயிரிழந்தது சுமார் 17 வயதுடைய ஆண் யானை. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கரும்பு தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது.

அப்போது, மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விட்டது, என்றார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பிரம்மாண்ட குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.