செவ்வாய், 4 மார்ச், 2025

ஈரோட்டில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோட்டில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பாலித்தீன் பை பயன்படுத்திய இட்லி கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட்லி கடைகள் அதிகமாக உள்ளன. இந்த கடைகள் தமிழக அளவில் பிரசித்தி பெற்றவை. தினசரி பல ஆயிரம் இட்லிகள் இங்கிருந்து ஈரோடு மட்டுமின்றி, பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. விருந்து, விழாக்களுக்கும் ஆர்டர்களின் பேரில் இங்கிருந்து இட்லிகள் கொண்டு செல்லப்படுகிறது.


இந்தநிலையில், நேற்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன் ஆகியோர் கருங்கல்பாளையத்தில் உள்ள இட்லி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று அங்கு இட்லி வேக வைக்கும் பாத்திரங்கள், இட்லி தட்டுகள், மாவு மற்றும் மாவு வைக்கும் பாத்திரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் ஆகியவை குறித்து சோதனை நடத்தினர்.

மேலும், இட்லி வாங்கும் பொதுமக்களுக்கு பாலித்தீன் பைகளில் (கேரி பேக்) இட்லி வழங்கப்படுகிறதா? எனவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, பாலித்தின் பைகள் பயன்படுத்தியதாக சில இட்லி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.6 ஆயிரமும், வடை உள்ளிட்ட பலகாரங்களை அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் நேரடியாக வைத்து வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் கூறியதாவது, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இட்லி தயாரிக்கும்போது பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து, தமிழ் நாட்டிலும் இதுபோன்ற சுகாதாரமற்ற நடவடிக்கைகள் உள்ளனவா? என்று சோதனை செய்ய தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவிட்டார்.


அதன்பேரில், ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் இந்த ஆய்வு பணியை தொடங்கி உள்ளோம். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் இட்லி தயாரிப்பின் போது பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது. அதனை கண்டறிந்து அபராதம் விதித்துள்ளோம். விரைவில் இங்குள்ள இட்லி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெறும்.

இதுபோன்ற சோதனைகள் தொடரும். உணவுப்பொருட்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை

ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை

ஈரோடு ரயில்வே காலனியில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு இறந்து கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் எந்தவித பயன்பாட்டில் இல்லாமல், நீண்ட ஆண்டுகளாக பாழடைந்த பழைய ரெயில்வே காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு ரெயில்வே பணியாளர்கள் யாரும் தங்காததால் இங்குள்ள வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. 

இதுதவிர, இந்த பாழடைந்த வீடுகளுக்குள் சமூக விரோதிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், அங்கு மது பிரியர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், இன்று மதியம் அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவரின் கழுத்து பகுதி நெரிக்கப்பட்ட நிலையிலும், ஒரு கையில் வெட்டுக்காயம் இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் காவிரி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபிடி சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

போலீசார் விசாரணையில் இறந்தவர், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் அருகே உள்ள துன்பகாடா கிராமத்தை சேர்ந்த ஜெகநாத் ஹபல் என்பவருடைய மகன் டன்டபனி ஷபர் ( 31) என்பது தெரியவந்தது. ஈரோட்டில் அவர் எங்கு தங்கி இருந்தார். என்ன வேலை செய்து வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டன்டபனி ஹபல் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது மதுபோதையில் அவரை மர்ம நபர்கள் யாரேனும் கழுத்தை நெரித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1993ல் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். கர்ப்பணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 மாதம் முதல் 25 மாதம் வரை இணை உணவை வாங்கக் கூடிய பயனாளிகளின் முகத்தை புகைப்படம் எடுக்கும் முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். 

மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மினி மையத்திலிருந்து பிரதான மையங்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு இன்கிரிமென்ட் வழங்க வேண்டும். 5 வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கும், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது மாவட்ட அளவிலான முதுநிலை பட்டியல் தயாரித்து சீனியாரிட்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.மணிமாலை, மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி, செயலாளர் எஸ்.சாந்தி மற்றும் செயற்குழு உறுப்பினர் எஸ்.பூங்கொடி ஆகியோர் தலைமை வகித்தனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரமேஷ், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பெருந்திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா: பவானியில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம்

செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா: பவானியில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம்

செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பவானி நகரில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
 ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கர்ப்ப கிரகத்தில் உள்ள செல்லியாண்டியம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்ய தொடங்கி, இன்று மதியம் 12 மணி வரை இந்த நிகழ்வு நடந்தது.

இதைத் தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. இதையொட்டி, பவானி நகரில் நாளை (மார்ச் 5ம் தேதி) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊராட்சிக் கோட்டை, காடையாம்பட்டி தளவாய்பேட்டை, சின்னப்புலியூர், லட்சுமி நகர் வழியாக ஈரோடு செல்ல வேண்டும். அதேபோல் சேலம், நாமக்கல், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து பவானி வரும் அனைத்து வாகனங்களும் லட்சுமி நகர் வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வந்து அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு திருப்பி விடப்படும். கனரக வாகனங்கள் நாளை காலை முதல் இரவு 10 மணி வரை நகர எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு


கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வடுகபட்டி பேரூராட்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை குறித்து கேட்டறிந்து, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, அஞ்சூர் ஊராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் வீதம் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.

மேலும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அஞ்சூர் ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் வடிவுள்ளமங்களம் ஏடி காலனி முதல் வள்ளிபுரம் வழி வேப்பங்காட்டுபாறை வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சாலையின் நீளம், அகலம் ஆகியவற்றினை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கொந்தளம் ஊராட்சியில் ஊரக குடியிருப்புகள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் அதே பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.41.58 லட்சம் மதிப்பீட்டில் கொந்தளம் சாலை முதல் லட்சுமிபுரம் வரை சாலை பலப்படுத்தும் பணி மற்றும் கொடுமுடியில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பயணியர் மாளிகை கட்டிடம் பலப்படுத்தி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, கொடுமுடி பேரூராட்சியில் செயல்படும் முழுநேர கிளை நூலகம், மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவைற்றை பார்வையிட்டு, அங்கு போட்டி தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி, கணபதிபாளையத்தில் அமைந்துள்ள வள மீட்பு பூங்காவில் குவிந்துள்ள பழைய கழிவுகளை உரத்திற்கு சலித்தது போக மீதமுள்ள கழிவுகள் மற்றும் தினசரி சேகரமாகும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த இயலாத கழிவுகள் எரிக்கும் இயந்திரம் தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்ததை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கொடுமுடி வடக்கு வீதி பகுதியில் உள்ள வீடுகளுக்கு அம்ரூத் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அழுத்தத்தினை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சிவகிரி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதாபானு, மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ், கொடுமுடி வட்டாட்சியர் பாலமுருகாயி, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, கவிதா, கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை..!

தமிழ்நாடு விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை..!

தமிழ்நாடு விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை...


திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எல் கே எம் சுரேஷ் தலைமையில், செயலாளர் இரா. வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்ரமணியம், துணைத் தலைவர் மங்களம் கோபால், திருப்பூர் மண்டல பொறுப்பாளர் பாலாஜி, கோவை மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் பொறுப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்,
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை சந்தித்து  விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு செய்து தரும்படி மத்திய அரசை வலியுறுத்த கோரி மனு வழங்கினர்,  


இந்த கோரிக்கை மனு குறித்தும், விசைத்தறியாளர்களின் முழு கோரிக்கை விபரங்களை கேட்டறிந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, விசைத்தறி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் பேசி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் புதிய முழு உருவ வெண்கல காந்தி சிலை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிறுவப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் புதிய முழு உருவ வெண்கல காந்தி சிலை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நிறுவப்பட்டது.


சாலை விரிவாக்க பணிக்காக தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு முத்துசாமி தலைமையில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் புதிய முழு உருவ வெண்கல காந்தி சிலை நிறுவப்பட்டது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அங்கு அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காங்கிரிட் காந்தி சிலை அமைத்து உள்ளது. 

சாலை விரிவாக்க பணியின்போது இந்த சிலையையும் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

கருங்கல்பாளையம் காவேரி சாலையில் 1970 -ம் ஆண்டு நிறுவப்பட்ட காந்தி சிலையை, அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் காந்தி சிலையை திறந்து வைத்தார். ஈரோட்டில் அடையாளமாக இந்த சிலை இருந்து வந்தது.  


இச்சிலையை இடமாற்றம் செய்வதில் குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து அமைச்சர் முத்துசாமி மற்றும் திமுக.வினர், காங்கிரஸ் கட்சியினருடன் கலந்தாலோசித்து, தற்போதுள்ள சிலைக்கு பின்புறம் உள்ள இடத்தில் கீழே நூலகத்துடனும், மேல் பகுதியில் முழு உருவ காந்தி சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. 

இதற்காக நூலகத்துடன் கூடிய சிலை வைக்கும் பீடம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இடத்தில் வெண்கலத்தினால் செய்யப்பட்ட முழு உருவ காந்தி சிலை நிறுவும் பணிகள் கிரேன் வாகன உதவியுடன் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு சுமார் 4 மணியளவில் சிலை நிறுவப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து இன்று காலையும், இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்து, சிலை நிறுவும் பணி நிறைவடையும் வரை அங்கேயே இருந்தார். 

இந்த பணியின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ சந்திரகுமார்,, திமுக துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர் ராமச்சந்திரன், திமுக கவுன்சிலர் ரமேஷ், காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி ரவி, பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன், முகமது ரஃபீக் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.  

விரைவில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைய காந்தி சிலை அகற்றப்பட்டு, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.