புதன், 5 மார்ச், 2025

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் மோதல்

கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் மோதல்

கோபியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் தள்ளுமுள்ளு மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினராக கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கூட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரூர், நகர, வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே ஏ.செங்கோட்டையன் பேசி முடித்ததற்கு பிறகு அந்தியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அதிமுக சார்பில் நடைபெறும் எந்த கூட்டங்களுக்கு அழைப்பு வருவதில்லை முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, அவர் மேடைக்குச் சென்று சார்பில் நடக்கும் எந்த கூட்டத்திற்கும் தங்களுக்கு அழைப்பு விடுவதில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை மேடையில் ஏறி முன் வைத்தார். அப்போது அதிமுகவினர் இடையே ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலானது.

உடனடியாக அந்த கேள்வி கேட்ட நபர் வெளியேற்றப்பட்டார். இதனை படம் பிடித்த கேமராக்களை அதிமுக நிர்வாகிகள் தாக்கியதில் கேமரா உடைந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும் பொழுது அந்தியூரில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.எம்.ஆர். ராஜா தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நபரை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தியூர் சட்டமன்ற தொகுதி தோற்றத்திற்கு இ.எம்.ஆர்.ராஜா தான் காரணம் எனவும் பரபரப்பு குற்றம் சாட்டினார். அதற்கு தகுந்த ஆடியோ சிடி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் கேள்வி கேட்ட அந்த நபரை அதிமுக உறுப்பினர்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்படுத்தது. கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் அந்தியூர் ஒன்றிய இளைஞர் அணி பாசறை அமைப்பாளர் பிரவீன் குமார் என்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு, மொடக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு, மொடக்குறிச்சியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு மற்றும் மொடக்குறிச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர் முத்துசாமி இன்று (மார்ச் 5ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடிவுள்ள மங்கை திருமணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாக்களில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளில், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, அவர்களுக்கு சீர்வரிசையாக தட்டு, பழம், வளையல், பூ, மஞ்சள், குங்குமம், இனிப்பு, காரம் ஆகியவற்றுடன் 5 வகையான மதிய உணவு வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

கர்ப்பிணி தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், தங்களை பாதுகாக்க அரசு மற்றும் அரசு சார்ந்த துறை அலுவலர்கள் இருக்கின்றார்கள் என்ற உணர்வோடு இருப்பதை காண முடிகிறது. சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.

அதேபோல, மாற்றுத்திறனாளிகள் அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்படுகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஐ.பூங்கோதை, மாநகர் நல அலுவலர் மரு.கார்த்திகேயன், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 4 மார்ச், 2025

மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் ரூ.7.48 கோடியில் பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு

மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் ரூ.7.48 கோடியில் பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.7 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில், பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கொடுமுடி அருகே உள்ள கொங்குடையாம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நொய்யல் கயிறு குழுமத்தில் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், ஈரோடு விற்பனைக் குழு வேளாண்மை துணை இயக்குனர் சாவித்திரி உள்பட பலர் உடன் இருந்தனர்.