ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

ஈரோட்டில் கிணற்றில் குதித்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை!

ஈரோட்டில் கிணற்றில் குதித்து ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை!

ஈரோடு வாய்க்கால் மேடு இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சீராளன் மகன் பிரவீன் (வயது 35). என்ஜினீயரிங் பட்டதாரி. திருமணம் ஆகாதவர். இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக மன உளைச்சல் ஏற்பட்டு யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரவீன் நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவர் அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே இருக்கும் கிணற்று பகுதியில் பிரவீனின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடிப் பார்த்தனர். அப்போது, பிரவீன் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த பிரவீன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது: 20 லிட்டர் ஊறல் பறிமுதல்!

ஈரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது: 20 லிட்டர் ஊறல் பறிமுதல்!

ஈரோடு அருகே நரிப்பள்ளம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள தோட்டத்தில் பேரல்கள் வைக்கப்பட்டு சாராயம் காய்ச்சப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டு இருந்த 20 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.,29ம்‌ தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.,29ம்‌ தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் வில்லரசம்பட்டி துணை மின் நிலைய மின் பாதை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 29ம் தேதி) நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லரசம்பட்டி துணை மின் நிலைய கருவில்பாறைவலசு மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம், இந்திராநகர், சானார்பாளையம், சன்கார்டன், ஐஸ்வர்யாபார்க், சத்யாநகர், கிரீன்சிட்டி பாய்ஸ் கார்டன், தொட்டம்பட்டி, கவுரிசங்கர்மில் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் குடோன்.

அம்மாபேட்டை சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ரெட்டிபாளையம், மலையம்பறைகாடு, விராலிகாட்டூர், மூலையூர், சென்றாயனூர், குரும்பனூர்காடு மற்றும் வெள்ளக்கரட்டூர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.28ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் சூரியம்பாளையம், சென்னம்பட்டி துணை மின் நிலையங்கள் மற்றும் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதையில் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சித்தோடு, ராயபாளையம், ஈரோடு சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர். பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவாக்கவுண்டனூர்.

அம்மாபேட்டை சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சென்னம்பட்டி, முரளி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, சனிச்சந்தை, கிட்டம்பட்டி, புதூர்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலைய மூன்ரோடு மின் பாதை (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- மூன்ரோடு, இருசானூர், மைலம்பாடி, ஏம்பாளையம், வரதநல்லூர், மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி மற்றும் கூலிக்காரன்பாளையம்.
பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.70 ஆயிரம் திருட்டு!

பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.70 ஆயிரம் திருட்டு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் அவினாசி சாலையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, பள்ளியின் பின்கதவு பூட்டு, காசாளர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும், அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம்: குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்; கோபி சார் ஆட்சியர் உத்தரவு!

சத்தியமங்கலம்: குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்; கோபி சார் ஆட்சியர் உத்தரவு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விஜயபாஸ்கர். இவர் அலுவலகத்துக்கு சரிவர வருவதில்லை. எப்போதும் நில அளவை செய்ய சென்று விடுவது உள்பட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் அவரை கண்டித்து வருகிற 5ம் தேதி கடம்பூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என குத்தியாலத்தூர் பொதுமக்கள் சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி கோபி சார் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி: அரசு செயலாளர் நேரில் ஆய்வு!

ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி: அரசு செயலாளர் நேரில் ஆய்வு!

ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு அடுத்த மாதம் (மே) 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு வேளாண்மை உற்பத்தி ஆணையாளரும், அரசு செயலாளருமான வி.தட்சிணாமூர்த்தி நேற்று கல்லூரியில் ஆய்வு செய்தார். அப்போது கண்காட்சி, கருத்தரங்கு மேடை அமைவிடம் தொடர்பாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.