ஞாயிறு, 4 மே, 2025

அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!

அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). அரிசி வியாபாரி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி நோக்கி வியாபார வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பருவாச்சி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால், சரவணன் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது உறவினர்கள் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இதுகுறித்து, அறிந்ததும் நேற்று காலை அவரது வீட்டுக்கு அந்தியூர் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய் வாளர், செந்தில்ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.

பின்னர், இறந்த சரவணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சரவணனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், சச்சின் (14) என்ற மகனும், நிஷா கோபிகா (12) என்ற மகளும் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) 12 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) ஞாயிற்றுக்கிழமை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 9 இடங்களில் 12 மையங்களில் மொத்தம் 4,162 மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு நடந்தது. 
தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவ - மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 97.64 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேரும், 2023-ம் ஆண்டு 98.13 சதவீதம் பேரும், கடந்த 2024 ஆண்டு 96.84 சதவீத பேரும் நீட் தேர்வு எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 3 மே, 2025

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் கடந்த மாதம் ஈரோடு ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம், அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 134 பேர் மீதும், போக்குவரத்து சிக்னலை மீறியதாக 3 பேர் மீதும். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 827 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கிய 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டிய 115 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கிய 39 பேர் மீதும், வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கிய 109 பேர் மீதும் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுதவிர, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 57 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலை நாளை (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் கரூர், காங்கேயம் வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர், காசிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக ஈரோடு-சென்னிமலை சாலைக்கு வந்து ஈரோடு செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி காசியூர் ரோடு, சந்தை கடை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 47). இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வருகிறார். இதனால், அவர் வீட்டிலேயே பந்தல் போடும் சாமான்களை வைத்திருந்தார்.
இவரது வீட்டின் அருகே சந்தை கடையில் ஊசி பாசி விற்பனை செய்பவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் நேற்று இரவு சாப்பாடு செய்து விட்டு அடுப்பில் தீயை அணைத்து உள்ளனர். எனினும், தீ சரியாக அணையாததால் அதிலிருந்த தீப்பொறி வடிவேல் வீட்டின் மீது பட்டு சிறிது நேரத்தில் வீடு தீ பிடித்துள்ளது. 

வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரம் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!

ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, சிவகிரி போலீசார் நடத்தியம முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்பி சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து பெருந்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் மயோனைஸ் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

ஈரோட்டில் மயோனைஸ் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

தமிழகத்தில் பரவலாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையில் செய்த மயோனைஸ் உணவை அனைவரும் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக குழந்தைகள் இதனை விரும்பி உண்பதால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓராண்டுக்கு பச்சை முட்டையில் இருந்து மயோனைஸ் தயாரிக்கவும், இருப்பு வைக்கவும் விநியோகிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உத்தரவின் பேரில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள் மற்றும் அசைவ உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது, தடை விதிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அதை நுகர்வோர், வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும், சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைசிலும் சேர்ந்துவிடும் என்பதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்கு தடை செய்துள்ளது. இத்தடை ஆணையானது, கடந்த 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உணவு வணிகர்கள், கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மயோனைசை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மயோனைசை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

அரசு உத்தரவை மீறி தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப் பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்பு துறையினரின் கள ஆய்வின் போது இது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பிறகு உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். உடல் நலனை பேணி காக்க ஏதுவாக, நுகர்வோரும் இதனை தவிர்க்க வேண்டும்.

எனினும் மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப் பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும்.

அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடை ஏதுமில்லை. அவை நுகர்வோரின் உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். மேலும், தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்த அறிவிப்பிற்கிணங்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பதிலாக மறுசுழற்சித் தன்மை உள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டது. 

குடிநீர் தரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சரிவிகித உணவு தொடர்பான விளக்கங்களும் சமூக ஊடகங்களில் சரிவிகித உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் அரசின் மறு சுழற்சி பயோ டீசலாக மாற்றும் திட்டத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வழங்க தெரிவிக்கப்பட்டது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரிபேக் விலை பயன்படுத்தாமல் இருக்கவும் உணவுப் பொருள்களை பாலித்தீன் பைகளில் கட்டி விற்பனை செய்யாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

செய்தித்தாள்களின் மீது உணவு பொருட்களை வைத்திருக்கக் கூடாது, மற்றும் செய்தித்தாள்களில் உணவை பரிமாற கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், நுகர்வோர் ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது டிஎன்எப்எஸ்டி என்ற செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.