புதன், 7 மே, 2025

கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த வாலிபர்: கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை!

கோபியில் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த வாலிபர்: கல்லூரி மாணவிக்கு பிறந்த குழந்தை!

ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுப்ரீத் (20) என்பவர், 19 வயது இளம்பெண்ணை அவரது மனைவி எனக் கூறிக்கொண்டு அவரது தாயாருடன் வாடகை வீட்டிற்கு குடியிருந்து வந்தார். சுப்ரீத், ஆக்குபேஷனல் தெரபி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 19 வயது இளம்பெண் கோவையில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த கல்லூரி மாணவிக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுப்ரீத் வீட்டிலேயே யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்து உள்ளார். அதில், மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மாணவிகளுக்கு ரத்த போக்கு அதிகரிக்கவே, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையுடன், மாணவியை கொண்டு சென்றனர்.

உடனே சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த வாலிபரும், மாணவியும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இதுகுறித்து கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பொன்மணிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, செவிலியர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, குழந்தையின் தொப்புள்கொடி மட்டும் ஒரு பிளாஸ்டிக் கவரில் இருப்பதை கண்டு அதை பறிமுதல் செய்தனர். இதனிடையில், மாணவியின் பெற்றோர் கோபி அருகே உள்ள மொடச்சூரில் வசித்து வருவது தெரியவந்தது. அவர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர், குழந்தையுடன் இருந்த மகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாலிபர் உண்மையிலேயே மாணவியின் கணவரா? என்பது குறித்து விசாரணை நடத்த சுகாதார துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு: சிவகிரி அருகே மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி!

ஈரோடு: சிவகிரி அருகே மரம் முறிந்து விழுந்து தொழிலாளி பலி!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே அம்மன்கோயிலை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52). இவர் அம்மன்கோயில் அருகே உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்ற தங்கவேல் அங்கு நடந்த நிலக்கடலை ஏலத்தில் ஏலத்திற்கு வந்திருந்த நிலக்கடலை மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.

அப்போது, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. தங்கவேல் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் நின்றார். இந்நிலையில், வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மரம் முறிந்து விழுந்தது.

இதில், ஒரு பெரிய கிளை தங்கவேலின் தலையில் விழுந்து அமுக்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தங்கவேலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு தங்கவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் வரும் மே.10ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் வரும் மே.10ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் மே.10 தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் மே மாதம் 10ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசிஎண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடம், காளிங்கராயன்பாளையம் -3, மேட்டுநாசுவம்பாளையம் கிராமம் ரேஷன் கடையிலும், பெருந்துறை வட்டத்தில் வாய்ப்பாடி ரேஷன் கடையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சைக்காளமங்கலம் ரேஷன் கடையிலும் நடக்க உள்ளது.

அதேபோல், கொடுமுடி வட்டத்தில் கோட்டைகாட்டுவலசு, கொந்தளம் கிராமம் ரேஷன் கடையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் குள்ளநாயக்கனூர், பெரிய கொடிவேரி கிராமம் ரேஷன் கடையிலும், நம்பியூர் வட்டத்தில் கூடக்கரை ரேஷன் கடையிலும் நடைபெற உள்ளது.

மேலும், பவானி வட்டத்தில் பெரியபுலியூர் ரேஷன் கடையிலும், அந்தியூர் வட்டத்தில் பர்கூர் ரேஷன் கடையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கராச்சிகோரை, புங்கார் கிராமம் ரேஷன் கடையிலும், தாளவாடி வட்டத்தில் கெட்டவாடி, பனஹள்ளி ரேஷன் கடையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்!

ஈரோட்டில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்!

ஈரோட்டில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பில் 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பில், புதிய பேருந்துகளின் இயக்கத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.7) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி 9 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்திற்கு நகர்ப்புற பேருந்துகள் 9 பேருந்துகள், 56 புதிய புறநகர் பேருந்துகள் என மொத்தம் 65 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.


 2025-2026-ம் ஆண்டிற்கு கூடுதலாக ஈரோடு மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்ட 59 பேருந்துகளில் 8 புதிய நகரப்பேருந்துகளும், மலைப்பகுதியில் இயக்ககூடிய ஒரு புதிய சிறிய புறநகரப் பேருந்தும் இன்று (மே.7) வழித்தடத்தில் இயக்க தயாராக உள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 43 புறநகர் பேருந்துகள், 2 நகர பேருந்துகள் மற்றும் மலைப்பகுதியில் இயக்கக்கூடிய 1 சிறிய பேருந்து என 46 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இன்று‌ (மே.7) அந்தியூர் கொங்காடை (வழி தாமரைக்கரை, ஒசூர்) ஒரு புறநகர் பேருந்து, பவானி பெருந்துறை (வழி சித்தோடு, நசியனூர்), சூரம்பட்டிவலசு - பவானி (வழி ஈரோடு பே.நி, பி.பெ.அக்ரஹாரம்), ஈரோடு பேருந்து நிலையம் சென்னிமலை (வழி ஈரோடு இரயில் நிலையம், வெள்ளோடு), ஈரோடு பேருந்து நிலையம் - சிவகிரி (வழி மொடக்குறிச்சி, விளக்கேத்தி), ஈரோடு பேருந்து நிலையம் திருச்செங்கோடு (வழி சோலால், கொக்கராயன்பேட்டை), ஈரோடு பேருந்து நிலையம் - பெருந்துறை (வழி திண்டல், மேட்டுக்கடை), பவானி - ஈங்கூர் (வழி சித்தோடு, நசியனூர், பெருந்துறை), ஈரோடு பேருந்து நிலையம் துடுப்பதி (வழி திண்டல், மேட்டுக்கடை, பெருந்துறை ஆகிய 8 நகரப்பேருந்துகள் என 9 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பேருந்தின் விலை ரூ.44 லட்சம் என மொத்தம் ரூ.3.96 கோடி ஆகும்.


தமிழ்நாடு அரசால் விடியல் பயணத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மண்டலத்தில் 304 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாளொன்றிக்கு சுமார் 3.56 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தாளவாடி மலைப்பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் 1 புறநகர் பேருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளொன்றிக்கு சுமார் 682 மகளிர் வீதம் நாளது வரை 1.51 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் (பொ) தனலட்சுமி, பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, ஈரோடு மண்டலம்) சிவக்குமார், துணை மேலாளர் (வணிகம்) ஜெகதீஸ், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 6 மே, 2025

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு காசிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஈரோடு அருகே சோளங்காபாளையத்தை சேர்ந்த பாண்டியனின் மகன் தர்மன் (வயது 24) மற்றும் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் சென்றபோது அவரிடம் இருந்து செல்போன் திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், பிரசாந்திடம் இருந்து திருடப்பட்ட செல்போனை மீட்டனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

 வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் இன்று (மே.7) புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு வரதநல்லூரில் உள்ள ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஊராட்சிக் கோட்டை நீரேற்று நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணிகள் நிறைவுபெற்றதும் குடிநீர் சீராக வழங்கப்படும். எனவே பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.
பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!

பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கரூர் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சாமி (வயது 54). இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் பவானிசாகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அவரை போலீசார் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.