சனி, 10 மே, 2025

ஈரோடு: ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு!

ஈரோடு: ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சி; திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு!

அந்தியூர் அருகே ரூ.3 கோடி சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது எஸ்பி ஆபிசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம், தனது உறவினர்கள் 100 பேருடன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3½ ஏக்கர் விளை நிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்ப தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த 2 பேரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவர்கள் பெயருக்கு கிரயம் செய்தேன். அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினர்.

கடந்த 2019-ம் ஆண்டு அசல், வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதித்தொகையை வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினர். இதற்கிடையில் மேற்கண்ட 2 பேரும், ஈரோடு மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனர். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்ட விரோதமான முறையில் மேற்படி கவுன்சிலர் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகிறார்கள். எனவே அவர்களை அழைத்து பேசி எனது உயிருக்கும். உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய 'சேப்டி பின்' அகற்றம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய 'சேப்டி பின்' அகற்றம்!

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தொழிலாளியின் தொண்டையில் சிக்கி இருந்த 'சேப்டி பின்' வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 47). இவர் நேற்று மதியம் 'சேப்டி பின்' ஒன்றை வாயில் வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார். அது தொண்டைக்குள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.

இதைத் தொடர்ந்து, அவரது தாயார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றனர். தொடர்ந்து, கன்னியப்பனுக்கு உடனடியாக எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொண்டைக்குழிக்கு கீழே அந்த சேப்டிபின் விரிந்த நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காது, மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரம் போராடி தொண்டை உள்நோக்கி கருவியின் (எண்டோஸ்கோப்பி) மூலம் தொழிலாளியின் தொண்டை குழாயில் எந்தவித பாதிப்புமின்றி 'சேப்டி பின்'னை வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமாக உணவு உட்கொள்கிறார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.30 ஆயிரம் வரை இந்த சிகிச்சைக்கு செலவு ஆகக்கூடிய நிலையில், ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் முகாமிட்டு காட்டு யானை அட்டகாசம்!

அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் முகாமிட்டு காட்டு யானை அட்டகாசம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் வனப்பகுதியில் அங்கப்பன் என்பவரை காட்டு யானை ஒன்று மிதித்து கொன்றது. தற்போது, இந்த காட்டு யானை மாத்தூர் அருகே உள்ள மோத்தங்கல்புதூர் வனப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள் உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முகாமிட்டு உள்ளது.
இரவு முழுவதும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள வாழை, கரும்பு, எலுமிச்சையை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதை கண்டதும் விவசாயிகள் விரட்ட முயன்றால், அவர் களை காட்டு யானை துரத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். 

மேலும், மோத்தங்கல்புதூர் கிராமத்துக்குள்ளும் காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சமூட்டுகிறது. இதனால், தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோட்டில் நாளை (மே.11) 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோட்டில் நாளை (மே.11) 108, 102, 1962 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்!

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் அம்பிகாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:- 

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களால் 108, 102 மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமான 1962ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை மே.11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

இதில், 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணராக பணிபுரிய, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் - ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி. ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 ரூபாய் மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

18 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு 24 வயது முதல் 35 வயதிற்குள், 162.5 செ.மீக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் பேட்ஜ் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,820 வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இதேபோல், 102 ஆம்புலன்சில், சுகாதார அதிகாரியாக பணிபுரிய, கல்வித்தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம் - ஏஎன்எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18,000 ரூபாய் மொத்தமாக வழங்கப்படும்.

அதேபோல், 1962 கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓட்டுநர் பணிக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.12,000 வழங்கப்படும்.வயது 24 முதல் 35 வரை, உயரம் 162.5 செ.மீ குறையாமல் இருக்க வேண்டும். லைசன்ஸ் எடுத்து 3 வருடம் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஒரு வருடம் பேட்ஜ் நிறைவு எடுத்து வர வேண்டும்.

உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், எந்தவொரு பயிற்சி வகுப்பையும் முடித்த ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதம் ரூ.15,725 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மேலும், நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வர வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு, 7397724813 , 73388 94971, 91500 84147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 9 மே, 2025

ஈரோட்டில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா கோலாகலம்..!

ஈரோட்டில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா கோலாகலம்..!


மாநில அம்மா பேரவை சார்பில் 
வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள  அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்ட்டாடம்..

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்த நாள் வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதைத் தொடர்ந்து ஈரோடு அஇஅதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று மாநில அம்மா பேரவை சார்பாக ஈரோடு வ.உ.சி பூங்காவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜையும், நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டியும், தற்போது இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெறவும், அவர்கள் நலமுடன் இருக்கவும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 


ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு முன்னிலை வகித்தார், சிறப்பு பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெற்றது. 

அன்னதானத்தை மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு தொடங்கி வைத்தனர். 


மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, பகுதிச் செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெயராஜ், ராமசாமி, பரமசிவம், துரைராஜ், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், மாவட்ட மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசு என்கிற பழனிசாமி  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வீரக்குமார் செய்திருந்தார்.

கோபி அருகே புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை!

கோபி அருகே புதுமண தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதியை சேர்ந்தவர் ராக்கிமுத்து. இவரது மகள் பிரியதர்ஷினி (19). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் மகன் சந்திரன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் தம்பதி இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் தம்பதியினர் சின்னகரடில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். அரசூர் குள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சந்திரனும், பிரியதர்ஷினியும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், சிறிது நேரத்தில் 2 பேரும் உறங்குவதற்காக சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சந்திரனும், பிரியதர்ஷினியும் பிணமாக மிதப்பதாக தகவல் பரவியது. பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அரசூர் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள தம்பதி இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மனமுடைந்த பிரியதர்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பார்த்த சக்திவேலுவும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரட்டைக் கொலை எதிரொலி: ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்; தனியாக வசிக்கும் 2,416 முதியவர்களின் விவரங்கள் சேகரிப்பு!

இரட்டைக் கொலை எதிரொலி: ஈரோடு மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்; தனியாக வசிக்கும் 2,416 முதியவர்களின் விவரங்கள் சேகரிப்பு!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இதுபோன்ற கொலைகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர். கூகுள் மேப் மூலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு, நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ஒன்றிணைத்து 68 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை, காஞ்சிக்கோயில், சென்னிமலை, அறச்சலூர், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி மற்றும் மலையம்பாளையம் காவல் நிலையங்களில் உள்ள குக்கிராமங்களில் தோட்டங்கள், தனியாக உள்ள வீடுகளில் வசித்து வரும் முதியோர்களில் இதுவரை 2 ஆயிரத்து 416 நபர்களின் பெயர் மற்றும் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தாத வீடு மற்றும் தோட்டத்து வீட்டின் உரிமையாளர்களிடம் கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 650 இடங்களில் 13 ஆயிரத்து 214 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்ற குற்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேலும் 200 கண்காணிப்பு கேமராக்கள் வைக்க பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.