சனி, 26 ஏப்ரல், 2025

சத்தியமங்கலம் : பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் சீறிப்பாய்ந்த சிறுத்தை; நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதி!

சத்தியமங்கலம் : பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சாலையில் சீறிப்பாய்ந்த சிறுத்தை; நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நேற்று சிறுத்தை ஒன்று சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் பாய்ந்தபடி சீறிப்பாய்ந்து கடந்து சென்றது.
இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்துடன், வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தையை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

தற்போது, இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பண்ணாரி வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

வியாழன், 24 ஏப்ரல், 2025

ஈரோட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஈரோட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் சிறுவர், சிறுமிகள் என பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, பயங்கரவாதிகள் தாக்குத லில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.
எனவே, 5 மாத கூலி கேட்டு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்கள் கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்தனர்.

இந்த போராட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம், பிரம்மதேசம், நகலூர், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, பவானி ஊராட்சிக்கோட்டை மறஙஅந்தியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஏப்.26ம் தேதி) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கவுந்தப்பாடி,கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தபாடிபுதூர், அய்யம்பாளையம், வேலம்பாளையம். சந்திராபுரம், வெள்ளாங்கோயில், மாரப்பம்பாளையம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பவானி நகரம், குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், வர்ணபுரம், ஊராட்சிகோட்டை, ஆண்டிகுளம், ஜீவா நகர், கூடுதுறை மற்றும் சொக்கரம்மன் நகர்

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.
ஈரோடு: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை; ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு!

ஈரோடு: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை; ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு!

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட அனுமதி சான்று பெறுவதற்காக, அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அப்போது, அங்கு பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், பேரூராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்த கோபால் ஆகியோர் கட்டிட அனுமதி சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத செல்வராஜ் இதுகுறித்து ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்களின் திட்டப்படி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், டேங்க் ஆபரேட்டர் கோபால் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சில வினாடிகளில் அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கார்த்திகேயனையும், டேங்க் ஆபரேட்டர் கோபாலையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர், வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது

இந்த நிலையில், நீதிபதி ராமசந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் அரசு பணியை செய்ய லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் வாங்கியதற்கும் கார்த்திகேயன், கோபால் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதா ஆஜரானார்.
சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் புதூர் பிரிவு பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஜீப்பை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கடம்பூர் அருகே உள்ள தொண்டூர் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 59), கடம்பூர் கோட்டார் தொட்டியை சேர்ந்த மணிகண்டன் (60), சின்னநஞ்சன் என்பவருடைய மகன் பெரியசாமி (35), சடையப்பன் என்பவருடைய மகன் ராமர் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்டவிரோதமாக ஜீப்பில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு: சென்னிமலை அருகே முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்!

ஈரோடு: சென்னிமலை அருகே முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்!

சென்னிமலை அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேரை பிடித்த வனத்துறையினர் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வனப்பகுதிக்கு உட்பட்ட புளியம்பாளையம் பகுதியில் ஈரோடு வனச்சரக அதிகாரி சுரேஷ், சென்னிமலை வனத்துறை அதிகாரி முருகன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சேலம் மாவட்டம் சங்க கிரி மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 25), வடிவேல் (32), பிரகாஷ் (35) ஆகிய மூவரும் நாட்டு துப்பாக்கி வைத்து, முயலை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடிப்பட்டனர்.

அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் மாவட்ட வன அலுவலர் முன் ஆஜர்படுத்தினர். அவர் நபர் ஒருவருக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார்.