ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் பிளாட்டினம் மஹாலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளுக்கு 383 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளுக்கு 250 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், ரூ.34.39 கோடி மதிப்பில் புதிய மற்றும் முடிவுற்றப் பணிகளை அடிக்கல் நாட்டி திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த 382 கிராம ஊராட்சிகளுக்கு 633 எண்ணிக்கையிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ.34.39 கோடி மதிப்பில் புதிய மற்றும் முடிவுற்றப் பணிகளை அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்தார்.
இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது, ஒவ்வொரு முறையும் ஈரோட்டுக்கு வரும் போது ஒரு தனி புத்துணர்ச்சி ஏற்படும் அதற்கு காரணம் தந்தை பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு மண். பெரியாருடைய ஈரோடு குருகுலம் தான். கலைஞருடைய குருகுலமும், அவரை உருவாக்கியதும் இந்த மண் தான். அப்படிப்பட்ட பெரியாருடைய ஈரோடு மாநகரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத் திட்டம் உதவிகளை வழங்குவதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 382 ஊராட்சிகளுக்கு இந்த மேடையிலே கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாடு அரசினுடைய வருவாய்த்துறை, சுகாதரத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை உள்ளிட்டத் துறைகளின் சார்பாக கிட்டத்தட்ட 4000 பேருக்கு சுமார் ரூ. 22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடி மதிப்பிட்டில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி வைத்தோம். பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் கொண்ட தொகுப்பை வழங்கப்பட்டது.
ஈரோடு மற்றும் கரூர் மாவட்டம் தொழில்துறைக்கு மட்டும் அல்ல. விளையாட்டுத் துறைக்கும் பல பங்களிப்பை செய்து உள்ளது. இங்கு கூட நிறைய விளையாட்டுத் துறை சாதனையாளர்கள் இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக பாரா பாட்மிட்டன் வீரர் ரித்திக் ரகுபதி இங்கு வருகை தந்திருக்கிறார்கள். ரித்திக் ரகுபதி தன்னுடைய திறமையினாலும், உழைப்பாலும் இன்றைக்கு பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். ஜப்பானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும். பெருமை சேர்த்து இருக்கிறார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அவருடைய வெற்றி பயணம் இந்த ஈரோடு மாவட்டத்தில் இருந்து இன்னும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கட்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். அதைபோல ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி வாலிபால் போட்டியில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். அவரும் இங்கே வருகை தந்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற ஆசிய கடற்கரை கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் தான் மகேஸ்வரி.
சர்வதேச அளவில் அவர் பெற்றுவரும் வெற்றிகள் பெண்கள். மாற்றுதிறனாளிகள் பலரையும் விளையாட்டுத்துறையை நோக்கி வர செய்து கொண்டிருக்கிறது. அவருக்கும் நாம் அனைவரும் நம்முடைய சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உந்து சக்தியாக முன்உதாரணமாக இருக்கிறார்கள். விளையாட்டு மேம்பாட்டுத் துறை எடுத்து வரும் பல முயற்சிகளை பாராட்டி CII - Confederation of Indian Industries அமைப்பு 'Best State Promoting Sports' நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அளித்து இருந்தது.
அதைபோல The Hindu Sportstar பத்திரிக்கை சார்பாக 'Best State for Promotion of Sports' என்ற உயரிய விருதையும் நம்முடைய தமிழ்நாடு அரசுக்கும். நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கும் அளித்து கவுரவித்து இருக்கிறது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றோம். இதுவரை ஏராளமான வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக ரூ. 9 கோடி அளவுக்கு நிதி உதவி அளித்து இருக்கின்றோம். அதேபோல் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் நிதி உதவி பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் நம்முடைய வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகை (High Cash) வழங்கி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 600 வீரர்களுக்கு ரூ. 14 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கி இருக்கின்றோம். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே பேசும்போது, தன்னுடைய பேத்திக்கு ரூ. 9 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கியது என்று எடுத்துக் கூறினார்.
அது அவருடைய பேத்திக்கு மட்டும் வழங்கப் படவில்லை. 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 14 கோடி அளவில் நம்முடைய முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல அரசு மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உங்களை போன்ற பல வீரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திமுக அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் எடுத்த சீரிய நடவடிக்கையின் பேரில் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் விளையாட்டுத் துறை என்றால் அது தமிழ்நாடு தான் என்கிற வகையில் தொடர்ந்து புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில் மிக முக்கியமானது தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம். விளையாட்டுத் துறை வளர்ச்சி என்பது நகரங்கள் மட்டும் தேங்கி விடக் கூடாது.
அது கிராமங்களில் இருந்து வரவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம். கிராமங்களிலிருந்து நிறைய விளையாட்டுத் துறை திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார். இந்த விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகின்றேன், கேட்டுக் கொள்கிறேன். கலைஞர் பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன.
எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும் விளையாட்டுத்துறை சார்பாக முதன் முறையாக கலைஞர் அவர்கள் பெயரால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் தான். ஒரு விளையாட்டு வீரனுக்கு என்னென்ன திறமைகள் வேண்டும். நல்ல எனர்ஜி வேண்டும். கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். துல்லியமான கணக்கிடுதல் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மனத்திடம் வேண்டும். நல்ல டீம் ஒர்க் வேண்டும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த திறமைகள் அனைத்தையும் கொண்டவர்தான் கலைஞர்.
அதனால் தான் இந்த திட்டத்திற்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் என்று பெயர் வைத்தோம். அத்தகைய கலைஞருடைய பெயரால் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பெறக் கூடிய இளைஞர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம். கலைஞர் அவர்களுக்கு இருந்த அந்த குணங்களையும், திறமைகளையும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் பெற இந்த ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தின் அத்தனை ஊராட்சிகளையும் அந்த ஊராட்சி ஒன்றிய முகங்களாக இங்கே வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன்.
அதேபோல் இன்றைக்கு இந்த மேடையில் கிட்டத்தட்ட 1800 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கியிருக்கின்றோம். இதில் பெருமையாக குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தந்தை பெரியாருடைய இடத்திற்கு அவருடைய பேரன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் அந்தப் பட்டாவை வழங்கியிருக்கின்றோம். பெரியாருடைய பேரனுக்கு பட்டாவை வழங்கியிருக்கிறோம். பெரியாருடைய கொள்ளுப் பேத்திக்கு உயரிய ஊக்கத்தொகையும் வழங்கியிருக்கிறோம் என்றால், அதுதான் திராவிட மாடல் அரசு. பட்டா கிடைக்க வேண்டும் என்பது பலருக்கு நெடுநாள் கனவு.
அதனை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். இன்று முதல் உங்களுடைய வீட்டில் நீங்கள் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் இடத்தின் மீதான சட்டபூர்வமான உரிமையையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வங்கிக்கடன் இணைப்பைப் பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக் சகோதரிகள். பல்வேறு நலத்திட்டங்கள் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என அனைவருக்கும் இந்திய அரசின் சார்பாக விளையாட்டு துறையின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், திமுக அரசு என்றைக்கும் உங்களோடு பக்கபலமாக துணையாக நிற்கும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் இந்த அரசினுடைய கடமை என்றும் நாங்கள் என்றும் உங்களுக்காக பணியாற்றிக் கொண்டே இருப்போம்.
முதலமைச்சரை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் ஒவ்வொரு சேவையும் சென்றடைய வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் திமுக அரசால் பயன்பெற வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, விடியல் பயணத் திட்டம், மாணவியருக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு வருகின்ற 9ம் தேதி முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம்.
முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் நாற்பத்தெட்டு, இல்லம் தேடி கல்வி, மக்களுடன் முதல்வர் போன்ற எண்ணற்ற திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு திட்டம் என்றால் அதுதான் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஜூலை வரை 1.16 கோடியே பதினாறு லட்சம் மகளிருக்கு தலா மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் என்கிற வகையில் மொத்தம் 11,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி வருகின்றது. இந்தத் திட்டங்களின் காரணத்தால் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு. மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவே நம்பர். 1 இடத்தைப் பிடித்திருக்கிறது. இதனை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பே புள்ளி விவரத்தோடு அளித்துள்ளது. இனியும் தொடர்ந்து உங்களுக்காக உழைக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார். எனவே இந்தத் திட்டங்களின் பயனாளிகள் என்ற அளவில் இல்லாமல் அவற்றின் பங்கேற்பாளர்கள் என்ற உணர்வோடு நீங்கள் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசின் திட்டங்களை உங்களுடைய உற்றார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எடுத்துச் செல்லுங்கள். நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களுக்கு தூதுவராக வந்திருக்கக்கூடிய பயனாளிகளாக நீங்கள்தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளுக்கும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் என்று பேசினார்.
தொடர்ந்து, ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை புதிய தலைமை அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சேலம் பன்னோக்கு விளையாட்டு வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், அந்தியூர் வட்டாரம், பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 குழந்தைகள் தங்கும் பள்ளிக் கட்டணத்தையும் திறந்து வைத்தார்.
மேலும், அந்தியூர் வட்டாரம், தேவர்மலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.71.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள், உத்தண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டடம், அந்தியூர் வட்டம், தேவர்மலையில் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தகக் கட்டடம், நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சித்த மருத்துவக் கட்டடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர். ப. செல்வராஜ். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, பாரா பாட்மிட்டன் வீரர் ரித்திக் ரகுபதி, கையுந்து பந்து வீராங்கனை மகேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.