திங்கள், 19 ஆகஸ்ட், 2024

தேசிய சீட்டு நிதி நாள்.... ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம்.

தேசிய சீட்டு நிதி நாள்.... ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தேசிய சீட்டு நிதிநாள் நிதி நாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் சேலம் மாவட்ட சிட் மற்றும் பைனான்ஸ் நிதி நிறுவன அசோசியேஷன் சார்பில் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்.

ஆண்டுதோறும்  ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தேசிய சீட்டு நிதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய சீட்டு நிதினாள் அன்று சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் அசோசியேஷன் சார்பில் அன்னதானம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட சீட்டு மற்றும் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பில் சேலம் அரசு பொது மருத்துவமனை அருகே புற நோயாளிகள் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அந்த சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ரவிசங்கர் ராஜேந்திரன் செல்வம் மற்றும் சட்ட ஆலோசகர் மோகனசுந்தரம் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 
இந்த நிதி நாள் கொண்டாட்டம் குறித்து அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆண்டுதோறும் தேசிய சீட்டு நிதி நாளன்று தங்களது அசோசியேஷன் சார்பில் ஏழை எளியவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்து வருவதாக தெரிவித்த அவர், அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் தங்களது முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பலன் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் கார்த்தி ஹரிஷ் சேகர் முரளி செந்தில் வேல் உட்பட நிதி நிறுவன ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால், கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலக, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலைபாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
70வது ஆண்டில் அடியேடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

70வது ஆண்டில் அடியேடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் 2வது மிகப்பெரிய மண் அணை, தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப் பரப்பு என்ற பெருமையைக் கொண்டது கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை.
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலமாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ தூரத்திலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் இணையும் இடமான பவானிசாகரில் 1948ம் ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

அணையின் கரையின் நீளம் 8.78 கிலோமீட்டர். கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம் 200 கிலோமீட்டர்.பிரதான கால்வாயில் இருந்து 800 கிலோமீட்டர் நீளத்திற்கு கிளை வாய்க்கால்கள், 1,900 கிலோமீட்டர் நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப இயந்திரங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டது. 1953ம் ஆண்டு அணையின் கட்டுமான பணி நடந்த போது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகள் பணி முடிந்து 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அணையை திறந்து வைத்தார்.
69 ஆண்டுகளை கடந்தும் உறுதி தன்மையுடன் காட்சியளிக்கிறது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த பவானிசாகர் அணை இன்றுடன் (19ம் தேதி) 69 ஆண்டுகளை நிறைவு செய்து 70வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அணையில் ஆற்று மதகுகள் ஒன்பது, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் மூன்று மற்றும் உபரி நீர் ஸ்பில்-வே மதகுகள் ஒன்பது என 21 மதகுகள் உள்ளன. இதில், பவானி ஆற்றின் மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் 8 மெகாவாட் மின்சாரமும் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பவானிசாகர் அணை 1955ம் ஆகஸ்ட் 19ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், 1957ம் ஆண்டு முதல் முறையாக அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதன்பின், 1958, 1959, 1960, 1961, 1962 என தொடர்ச்சியாக ஆறு முறை நிரம்பியது. பின்னர், 2005, 2006, 2007ல் முழு கொள்ளளவை எட்டியது. இதன் பின்னர், 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அணை முழு கொள்ளளவை எட்டியது.

69 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக பவானிசாகர் அணை காட்சியளித்து, மக்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்தை செழிக்க வைக்கும் இந்த அணையை பாதுகாப்போம்.
ஈரோட்டில் சினிமா தியேட்டரில் தீ விபத்து: புகை மூட்டத்தால் ரசிகர்கள் ஓட்டம்

ஈரோட்டில் சினிமா தியேட்டரில் தீ விபத்து: புகை மூட்டத்தால் ரசிகர்கள் ஓட்டம்

ஈரோடு பெரியவலசு பகுதியில் இரண்டு ஸ்கீரின்களுடன் பிரபலமான அண்ணா தியேட்டர் இயங்கி வருகிறது. இந்த தியேட்டரில் ஸ்கீரின் 1ல் விக்ரம் நடித்த படம் தங்கலான் திரைப்படமும், 2வது ஸ்கீரினில் ஆங்கில திரைப்படம் இரவுக் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்த்து கொண்டிருந்தனர். தியேட்டரின் உள்ளே கேண்டீன் செயல்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், தியேட்டர் கேண்டீனில் இருந்த பாப்கார்ன் இயந்திரத்தில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கி தீ விபத்து ஏற்பட்டது. உடனே, சம்பவம் இடத்தில் பணியிலிருந்த ஊழியர்கள், தியேட்டரில் இருந்த தீயணைப்பான் சாதனங்களை பயன்படுத்தி தீயை அணைத்து கட்டுக்குள் வந்தனர்.

இருந்தபோதிலும், இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டம் தியேட்டர் முழுவதும் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து தியேட்டருக்குள் அதிக புகைமூட்டமாக இருப்பதால், படத்தை நிறுத்திவிட்டு, புகைமூட்டத்தை வெளியேற்றும் பணியில் திரையரங்க ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஸ்கீரின் 1ல் நிறுத்தி வைக்கப்பட்ட விக்ரம் நடித்த தங்கலான் படம் திரைப்படத்தை, மீண்டும் போடுவார்களா? என காத்திருக்கும் ரசிகர்கள் ஒருபுறம் காத்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் தாங்கள் வாங்கிய டிக்கெட்டிற்கான தொகையை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானியில் நடந்த காலிங்கராயன் பசுமை மாரத்தான் ஓட்டத்தில் 450 பேர் பங்கேற்பு

பவானியில் நடந்த காலிங்கராயன் பசுமை மாரத்தான் ஓட்டத்தில் 450 பேர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமிநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பவிஷ் பார்க்கில், கொங்கு மண்டலத் தலைவர் காலிங்கராயன் என்பவரால் 1271 ஆம் தொடங்கப்பட்டு 1283 ஆம் முடிக்கப்பட்டு இன்றளவும் விவசாயிகள், பொதுமக்கள் பயனுற வேண்டும் என வாழ்ந்து மறைந்த வரை நினைவு கூர்ந்து, மரம் நடுவோம் மழை பெறுவோம் என பசுமைய வலியுறுத்திய
வண்ணம் ஈரோடு காளிங்கராயன் பசுமை மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில்
மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 
 
இந்த மாரத்தான்ஓட்டம்
ஐந்து கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தொடக்க இடத்தில் இருந்து
வாசவி கல்லூரி வரையும், 10 கிலோமீட்டர் சித்தோடு நால்ரோடு வரை சென்று திரும்பியது. மாரத்தானில் பங்கேற்று ஆர்வமுடன் பங்கேற்று முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மாரத்தான்
ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள்,
சிறார்கள் என மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தாளவாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

தாளவாடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் ஊராட்சியில் உள்ள கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் மகாதேவன் - கனகா. இவர்கள், கூலி வேலை செய்து வருகின்றனர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.
நேற்று மகாதேவன் - கனகா தம்பதியினர் அருகில் உள்ள தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, இரண்டாம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமி அகல்யா அருகில் இருந்த சிறுமிகளுடன் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் இருந்த ஆறாடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி தவறி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை பார்த்த மற்ற குழந்தைகள் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, சிறுமியை அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்ட பெற்றோர் சிறுமியை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 17 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் போலி வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா வாலிபர்

ஈரோட்டில் போலி வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியா வாலிபர்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் ஈரோட்டில் அபி டூர்ஸ் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
இதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வெளிநாட்டு கரன்சிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், போன்றவை முன்பதிவு செய்து கொடுக்கப்படும் என இணையதளம் மூலமாக விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை செய்து வந்தார்.

இந்நிலையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு (வயது 36) என்பவர் இணையதளத்தில் செய்துள்ள விளம்பரத்தை பார்த்து மருத்துவமனை சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பு பணத்திற்கு பதிலாக இந்திய மதிப்புக்கு பணம் தேவை என அசோக்குமாரை அணுகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வு வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

அந்த அமெரிக்க டாலரை அசோக்குமார் வாங்கி சோதனை செய்த போது இது போலியான என தெரியவந்தது. இதனையடுத்து, அசோக்குமார் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், நாதன் இகேச்சுக்விடம் இருந்து போலி அமெரிக்கா டாலர் நோட்டுக்களை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். தற்போது, அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் தாங்கி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.