ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 32). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்மாபேட்டை அருகேயுள்ள சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்தார்.
அப்போது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் வாகன ஓட்டுநரிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டு அடித்ததாக தெரிகிறது. இதை பார்த்த சக வாகன ஓட்டுநர்கள் திரண்டு காவலரிடம், குடிபோதையில் ஏன் வாகன சோதனையில் ஈடுபட்டு ஓட்டுநரை அடிக்கிறீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இது சம்பந்தமான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பவானி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், புகாருக்கு உள்ளான காவலர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், குடிபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


