புதன், 16 அக்டோபர், 2024

சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது

சித்தோடு அருகே போலீஸ் எனக் கூறி ரூ.25 ஆயிரம் பணம் பறித்த 5 பேர் கைது

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் ராமன் பாலக்காடு என்ற இடத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு மசாஜ் சென்டருக்குள் நுழைந்த 5 பேர் தங்களை போலீஸ் எனக்கூறி, மசாஜ் சென்டரில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

பின்னர் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வந்தவர்கள் போலீஸ்காரர்கள் தானா? என்று சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கார்த்திகேயனிடம் போலீஸ் எனக்கூறி  மிரட்டி பணம் பறித்த, ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த வசந்தராஜ் (வயது 34), செங்கோடம்பள்ளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 38), லக்காபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32), சூரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (வயது 30), ஆனந்தகுமார் (வயது 38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


துப்புரவு பணியாளர்கள் உட்பட 90 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் தீபாவளி புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்.

துப்புரவு பணியாளர்கள் உட்பட 90 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் தீபாவளி புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

துப்புரவு பணியாளர்கள் உட்பட 90 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் தீபாவளி புத்தாடைகளை வழங்கி மகிழ்ந்த 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர்.

60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. ஆண்டுதோறும் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களின் போது சேலம் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தனது சொந்த செலவில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 10-வது கோட்டத்தில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் புத்தாடைகள் உள்ளிட்ட அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 
அதன் அடிப்படையில் தற்போது இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் இன்று எனது கோட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், DBC பணியாளர்கள், பிளம்பர், பிட்டர், டிரைவர்கள், சூப்பர்வைசர்கள், என மொத்தம் 90 நபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் தனது சொந்த செலவில்,  அனைவருக்கும் திபாவளி பண்டிகைக்கான புத்தாடைகளை  சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அவர்கள் திருக்கரங்களில் கொடுத்து மகிழ்ந்த தெய்வலிங்கம் அனைவருக்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உடன் கோட்ட கழக செயலாளர்கள் லோகு. சௌந்தர் கவுன்சிலர் திருஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே எருமைக்குட்டை வனப்பகுதியை ஒட்டிய உள்ள தோட்டத்து மின் வேலியில் சிக்கி நேற்று காலை மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, இறந்தது மக்னா யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய யானை அருகே உள்ள தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது என்றனர்.

இதைத்தொடர்ந்து யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் அங்கேயே புதைத்தனர். மேலும், தோட்டத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் யார்?, மின்வேலியில் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நம்பியூரில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, நம்பியூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நம்பியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, எலத்தூர் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கொண்டு பராமரிக்கப்படும் பதிவேடுகள் நோயாளிகள் விபரம், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, எலத்தூர் பேரூராட்சி கண்ணாங்காட்டுபாளையம் பகுதியில் செயல்படும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குழந்தைகளின் உயரம், எடை மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்க தயாராக இருந்து உள்ள முட்டை மற்றும் சத்துமாவினை ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, எலத்தூர் பேரூராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பெரிய குளம் மேம்பாடு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலையப் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்து அவர்கள் பெற்றோரிடம் ஆலோசனைகள் வணங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நம்பியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேம்பாட்டு மானியம் ஆறாவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.99.40 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளியில் செயல்படும் சத்துணவு மையத்தினை பார்வையிட்டு, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த சத்துணவினை சுவைத்துப் பார்த்து, மாணவியர்களின் தேர்ச்சி மற்றும் இடைநிற்றல் மாணவியர்கள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், நம்பியூர் காவல் நிலையம் மற்றும் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ், நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் ஜாகிர் உசேன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரஸ்வதி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஈரோட்டில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரித்து விற்போருக்கு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை ஆணையகம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட முழுவதிலும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் பேசியதாவது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.

இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவு பொருட்கள் கையாளுபவர்கள் கையுறை, முககவசம், தலைகவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படுத்துதல் கூடாது. உணவுகையாளுபவர்கள் அனைவரும் மருந்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு உபயோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் மறுசுழற்சி நிறுவனங்களிடம் வழங்கி அதன் ஆவணங்களை வைத்திருந்தல் வேண்டும்.

மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.‌ இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் கஞ்சமலையை பசுமை சோலையாக மாற்றவும், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் இருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழக மக்களை காத்திடவும், சேலம் சித்தர் கோவிலில் மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்ச்சி. சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பங்கேற்பு.

சேலம் கஞ்சமலையை பசுமை சோலையாக மாற்றவும், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் இருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழக மக்களை காத்திடவும், சேலம் சித்தர் கோவிலில் மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்ச்சி. சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பங்கேற்பு.

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலம் கஞ்சமலையை பசுமை சோலையாக மாற்றவும், தமிழகத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் இருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழக மக்களை காத்திடவும், சேலம் சித்தர் கோவிலில் மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்ச்சி. சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பங்கேற்பு. 

சேலம் சித்தர் கோவில் என்பது பழமையான மற்றும் சித்தர்கள் வாழ்ந்து வரும் பகுதியாகும். கஞ்சமலையின் அடிவாரத்தில் சித்தேஸ்வர ஸ்வாமியின் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அதிகபட்சமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்தத் திருக்கோவிலை அமாவாசை திருக்கோவில் என்றும் அழைப்பார்கள். கஞ்சமலையில் மூலிகை மரங்கள் வாசனை மரங்கள் அதிக அளவில் வளர்கின்றது. மேலும் கஞ்சமலையை இன்னும் பசுமையாக மாற்றும் வகையில், சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் முயற்சியில், 5000 நாட்டு விதை பந்துகள் தயார் செய்து, நடவு செய்து மேலும் கஞ்சமலையை பசுமையாக்கும் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஈடுபட்டதுடன் தமிழகத்தில் தற்பொழுது பெய்து வரும் கனமழை வெள்ளத்திலிருந்து சேலம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை காத்திட வேண்டி, சேலம் கஞ்சமலை மேல் சித்தர் கோவிலில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. 

 சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் வடக்கு தொகுதி பாமக நிர்வாகிகள், முருகேசன் அசோக்குமார் அறிவழகன் குணசேகரன் சுசீந்திரன் பழனிச்சாமி மோகன்ராஜ் பிரவீன் தமிழரசன் விஜி பூபதி உள்ளிட்ட நூல்50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டார்ச் லைட் மற்றும் ஜெர்கின் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,17) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.,17) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, காந்திநகர் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 17) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், குஞ்சரமடை, ஓடத்துறை, ஓடமேடு, பெத்தாம்பாளையம், கருக்கம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்

காஞ்சிக்கோவில் அருகே உள்ள காந்திநகர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, எருக்காட்டுவலசு மற்றும் இச்சிவலசு

மொடக்குறிச்சி அருகே உள்ள தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம், வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, பள்ளியூத்து, ராட்டைசுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்கராங்காட்டுவலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு மற்றும் புதுப்பாளையம்.