சனி, 23 நவம்பர், 2024

சேலத்தில் 26 ஆம் ஆண்டு மீலாது விழா....1000 கிலோ பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

சேலத்தில் 26 ஆம் ஆண்டு மீலாது விழா....1000 கிலோ பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் 26 ஆம் ஆண்டு மீலாது விழா....1000 கிலோ பிரியாணி மற்றும் இனிப்பு வகைகள் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது. 

சேலம் பார்க் தெரு மீலாது விழா கமிட்டி சார்பில் இந்த உலகில் மக்களுக்கு அருள் நெறியோடு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துத் தந்த ஏந்தல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதற்காக 1000 கிலோ உணவுப்பொருட்களை கொண்டு சுமார் 20 பெரிய அளவிலான டபராக்களில் பிரியாணி சமைக்கப்பட்டது. மேலும் சுமார் 3000 நபர்களுக்கு இனிப்புகளும் தயார் செய்யப்பட்டன. 
சேலம் ஜாமியா மசூதி முத்தவல்லி எஸ் ஆர் அன்வர் ஷாகிப் தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் ஜாமியா மசூதியின் இமாம் மவுலவி காரிசு ஹேல் அகமது காசிமி மற்றும் சேலம் கோட்டை இமாம் முகமது அப்பாஸ் காசிமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பயான் நடத்தினர்.
அதுமட்டுமில்லாமல் மீளாது விழா கமிட்டியினர் மற்றும் மற்றும் பார்க் தெரு மக்கள் நலச்சங்கம் ஆகியவற்றின் சார்பில் அரபிக் பயிலும் குழந்தைகள் மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 10,11, மற்றும் 12 பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 1000 கிலோ அளவில் தயார் செய்யப்பட்ட பிரியாணி மற்றும் இனிப்பு வகைகளை இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் என சுமார் 3,000 மேற்பட்டோருக்கு தப்ரூக் எனப்படும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்வுகளின் போது மீலாது விழா கமிட்டியின் தலைவர் அப்துல் சுபான், செயலாளர் முகமது ஷபி, பொருளாளர் சர்தார், துணைத் தலைவர் சர்தார் ஹுசைன், 31வது கோட்டை மாமன்ற உறுப்பினர் சையது மூஸா 31வது கோட்டை திமுக செயலாளர் சையது இப்ராஹீம் மற்றும் 31 வது கோட்டை காங்கிரஸ் பிரமுகர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்: சத்தியமங்கலம் ராஜன்நகரில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு

உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்: சத்தியமங்கலம் ராஜன்நகரில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன் நகர் ஊராட்சி கஸ்தூரிபா துவக்கப்பள்ளி வளாகத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று (நவ.23) நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சந்திராமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மாகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

தற்போது, மழைக்காலம் துவங்கியுள்ளதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு முக்கியமான ஒன்று நமது வீட்டினை தூய்மையாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி சுற்றுப்புறத்திைனையும் தூய்மையாக பராமரிப்பதாகும். வீட்டின் முன்புறம், பின்புறம் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேவையற்ற நீர்தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் கொண்டு வண்டியில் வைத்து குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். குடிநீர் பாத்திரங்கள் தவிர மற்ற அனைத்து நீர் சேகரித்து வைக்கும் சிமெண்ட் தொட்டி, கீழ்நிலை தொட்டி, மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் பானைகள் போன்றவற்றில் கொசுப்புழு கண்டறியப்பட்டால், நீரினை முழுவதுமாக கொட்டி, பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி, 24 மணிநேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

நீர் சேகரித்து வைக்கும் அனைத்து பாத்திரங்களிலும், கொசு புகாதவண்ணம், நன்கு மூடிவைக்க வேண்டும். மேலும், காய்ச்சல் அறிகுறி ஏதேனும் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், ராஜன் நகர் ஊராட்சி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்மாதிரி ஊராட்சியாக சிறந்து செயல்பட வேண்டும்.

அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதுடன் அவர்களின் பணிக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதுடன் ஊராட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முழு பங்காற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், ராஜன் நகர் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) பழனிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) மரகதமணி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, ராஜன்நகர் ஊராட்சி துணைத்தலைவர் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க கால நீட்டிப்பு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க கால நீட்டிப்பு: நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் நாளிதழ்களில் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் நவம்பர் 30ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்
சத்தியமங்கலத்தில் ரூ.99.66 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் ஆட்சியர் ஆய்வு

சத்தியமங்கலத்தில் ரூ.99.66 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.99.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (23ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.53.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க தயாராக உள்ள 528 குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட ராஜன் நகர் பகுதியில் ரூ.45.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 குடியிருப்புகளையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரும் வகையில் பணிகளை முழுமையாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, சத்தியமங்கலம் வட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.6.91 கோடி மதிப்பீட்டில் 30 தொகுப்புகள் கொண்ட 120 குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன், சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், விஜயலட்சுமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.