புதன், 25 டிசம்பர், 2024

ஈரோட்டில் ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் ரூ.7 லட்சம் கடன் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி அருகே உள்ள கைகாட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 44). இவருக்கு, அறிமுகமான ஈரோடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியரான குமாரசாமி மற்றும் அவரது இளைய மகன் சிவராமன் ஆகியோர் பெரியவலசு நேதாஜி நகரில் உள்ள வீட்டை புதுப்பிக்க கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனசேகரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியத் தெரிகிறது.
இந்நிலையில், வீட்டை புதுப்பித்து விற்ற பிறகும் தனசேகருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இருவரும் காலம் தாழ்த்தி, வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி தந்தை, மகன் இருவரிடமும் தனசேகரன் பணம் கேட்க சென்றபோது, அவர்கள் இருவரும் தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தந்தை , மகன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.27ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.27ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.27ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம், கோபி அருகே உள்ள அளுக்குளி மற்றும் பவானிசாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 27ம் தேதி) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து, கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மொடக்குறிச்சி கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஆயிக்கவுண்டன் பாளையம், கணபதிபாளையம், சானார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்புரம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடுவலசு, கொமரம்பாளையம், ராக்கியா பாளையம், கல்யாணிபுரம், களத்து மின்னப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தரண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டைவலசு.

கோபி அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடை புதூர், ஒட்டர்கரட்டுப்பாளையம், வெங்கமேட்டு புதூர், சத்தியமங்கலம் பிரிவு, கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூலவாய்க்கால், ராஜீவ்காந்தி நகர் மற்றும் போடிசின்னாம்பாளையம்..

பவானிசாகர் பெரியகள்ளிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, ஜெ.ஜெ.நகர் மற்றும் பருசாபாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 டிசம்பர், 2024

கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 62). இவர் தற்போது மகன் மகேந்திரனுடன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நிலப்பிரச்சனை தொடர்பாக மனு அளிப்பதற்காக பெருமாநல்லூரில் இருந்து கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வெளியே வந்த அவர் தண்ணீர் குடிக்க சென்றார்.

அப்போது, அவர் 3 பவுன் நகை, ரூ.21 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை அடங்கிய பையை அலுவலக வளாகத்திலேயே கீழே வைத்து விட்டு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது பையில் இருந்த நகை, பணம் காணாமல் போனதும், மர்ம நபர்கள், அதை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூரில் மானியத்தில் கடன் வாங்கி கொடுப்பதாக 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

அந்தியூரில் மானியத்தில் கடன் வாங்கி கொடுப்பதாக 217 பவுன் நகை, ரூ.89 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி சசிகலா (வயது 35). இவருக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமாக ஆப்பக்கூடல் வேலமரத்தூரை சேர்ந்த தொழிலாளியான கருணாமூர்த்தி (வயது 35) என்பவர் அறிமுகமானார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் நபார்டு வங்கி மூலமாக விவசாய கடன் மானியத்துடன் பெற்றுத்தருவதாக கருணாமூர்த்தி கூறி உள்ளார். இதை நம்பிய சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி விவசாய கடன் பெறுவதற்காக 12 பவுன் நகையை கருணாமூர்த்தியிடம் கொடுத்தார்

அவரும் நபார்டு வங்கியில் இருந்து கடன் வாங்கி விட்டதாக சசிகலாவிடம் கூறினார். மேலும், தனக்கு அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதனால் சசிகலா கடனாக பெற்ற ரூ.9 லட்சத்தை கருணாமூர்த்தியிடமே ஒப்படைத்துள்ளார்.

நீண்ட நாட்களாகியும் கருணாமூர்த்தி வட்டியும், அசலும் கொடுக்கவில்லை. இதனால் அந்தியூர் போலீசில் சசிகலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கருணாமூர்த்தி மானியத்தில் கடன் வாங்கி கொடுப்பதாக பல பெண்களை ஏமாற்றி நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட் டதும், வங்கிகள், நிதி நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்துவிட்டு வங்கியில் மானியத்தில் கடன் பெற்றதாக பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.

30-க்கும் மேற்பட்டவர்களிடம் 217 பவுன் நகை மற்றும் ரூ.89 லட்சத்தை கருணாமூர்த்தி மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதனிடையே இந்த வழக்கை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கருணாமூர்த்தியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வங்கிகள், நிதி நிறுவ னங்களில் நகைகளை அடமானம் வைத்ததற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து கைதான கருணாமூர்த்தி ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.26) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் வெண்டிபாளையம், நடுப்பாளையம், காந்திநகர், ஏளூர், டி.என்.பாளையம், புஞ்சை துறையம்பாளையம் மற்றும் எரங்காட்டூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.26) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி, நாடார் மேடு, சாஸ்திரிநகர், நொச்சிகாட்டுவலசு, ஜீவா நகர், சேரன் நகர், சோலார், போக்குவரத்து நகர், சோலார்புதூர், நகராட்சிநகர், லக்காபு ரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர், பச்சபாளி, சஞ்சய் நகர், பாலுசாமிநகர் மற்றும் சி.எஸ்.ஐ. காலனி.

மொடக்குறிச்சி நடுப்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூர், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், கருமாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேலப்பம்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம். காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர், கருத்திபாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.

காஞ்சிக்கோவில் காந்திநகர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், காந்திந கர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டுவலசு, எருக்காட்டு வலசு மற்றும் இச்சிவலசு.

சத்தியமங்கலம் ஏளூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஏளூர், கொடிவேரி ரோடு, காளியூர், இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தைகடை, எம்.ஜி.ஆர்., காலனி, வேட்டுவன் புதூர்.

கோபி டி.என்.பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- டி.என்.பாளையம், மோதூர், கொங்கர்பாளையம், வினோபாநகர், அரக்கன் கோட்டை, வாணிப்புத்தூர் மற்றும் கள்ளியங்காடு.

கோபி புஞ்சைதுறையம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- புஞ்சை துறையம்பாளையம், குட்டையூர், பங்களாப்புதூர், கொண்டையம் பாளையம் மற்றும்இந்திரா நகர்.

கோபி ஏரங்காட்டூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- எரங்காட்டூர், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, வளையபாளையம், அடசப்பாளையம், பகவதி நகர், அண்ணா நகர் மற்றும் சைபன் புதூர்
பெருந்துறையில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

பெருந்துறையில் அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தீவிர சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆண், பெண் வார்டுகள் மற்றும் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, சீனாபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை இணைய வசதி மூலமாக விரைந்து வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர், நமுட்டிபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டதில் கிராம நகலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதைத் தொடர்ந்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சீனாபுரம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை, அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.


மேலும், சீனாபுரம் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளின் எண்ணிக்கை, எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விவரங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருவதையும், ஓட்டுநர் தேர்வு தளத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்களிடம் அங்கு பயிற்சி பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை குறித்தும் அடிப்படை வசதிகள் ஏதேனும் தேவை உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, பெருந்துறை தீயணைப்பு மீட்புப்பணி நிலையத்தினை பார்வையிட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, பெருந்துறையில் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கினை பார்வையிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வரும் விவரங்களை குறித்து கேட்டறிந்து, அங்கு செயல்பட்டு வரும் குளிர் பதன கிடங்கினையும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பெருந்துறை கிடங்கினை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதையும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்துறை கிளையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் வட்டாட்சியர் செல்வகுமார், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் அன்புராஜ், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ஈரோடு சரகம் காலிதாபானு, அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மொடக்குறிச்சி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய 850 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி காரில் கடத்தியவர் கைது

மொடக்குறிச்சி அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய 850 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி காரில் கடத்தியவர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின்பேரில், ராட்டைசுற்றிபாளையம் பொன்விழா நகர் அருகில் காவல் ஆய்வாளர் சுதா, உதவி காவல் ஆய்வாளர் மேனகா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 850 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, ஆம்னி காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராட்டைசுற்றிபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பதும், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, ரேஷன் அரிசியை கடத்திய சேகரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.