வெள்ளி, 3 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 7.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 7.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 878 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 355 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1,233 நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான பச்சரிசி, புழுங்கல் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் 2025ம் ஆண்டில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 44 ஆயிரத்து 463 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1,379 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 45 ஆயிரத்து 842 தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

 அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறும் வகையில் நாளொன்றுக்கு 200 ரேஷன் அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்களுக்கு குறிப்பிட்ட டோக்கன்கள் வழங்கும் பணி இன்று (ஜன.3) வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு பகுதி வாரியாக வரும் ஜன.8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, பொது மக்கள் தங்களது நியாய விலைக்கடைகளில், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட உரிய நேரத்தில் வருகை புரிந்து கூட்ட நெரிசலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


நாமக்கல் அருகே பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முயற்சியின் காரணமாக நான்கு குற்றவாளிகள் கைது.

நாமக்கல் அருகே பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முயற்சியின் காரணமாக நான்கு குற்றவாளிகள் கைது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

நாமக்கல் அருகே பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முயற்சியின் காரணமாக நான்கு குற்றவாளிகள் கைது.

நாமக்கல்  மாவட்டம்-  வேலகவுண்டம்பட்டி கிராமத்தின் பட்டியலின குடும்பத்தை சார்ந்த சஞ்சை என்கிற 22 வயது  இளைஞர் கடந்த 01-01-25 மாலை 8 மணி அளவில் சில தீய சக்திகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சஞ்சயை மீட்டு  நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு கோர்ட் நடவடிக்கை குழுவில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அவர்களை அணுகி உள்ளனர். 
அவரது அறிவுறுத்தலின் பேரில், 
குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்துபோன சஞ்சை உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையை வற்புறுத்தி உள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த படுகொலை சம்பவத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 
இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாமல். இருப்பது வேதனையாக உள்ளது என்று சஞ்சயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி வந்த நிலையில், நாமக்கல் காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படுகொலையை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் நாமக்கல் காவல்துறையினர்.
பாதிக்பட்ட  பட்டியலின குடும்பத்திற்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு போட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, உட்பட ஜெயக்கொடி, பழ. முரளிதரன், பாபு மற்றும் ஜேசுபாதம் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஊர் மக்களுடன் NHAI திட்ட இயக்குனர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ராமதாஸ் முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு.

ஊர் மக்களுடன் NHAI திட்ட இயக்குனர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ராமதாஸ் முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஊர் மக்களுடன் NHAI திட்ட இயக்குனர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ராமதாஸ் முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1 வது கோட்டம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) புதிதாக கட்டப்படும் பாலத்தில் இணைப்புபாலம் அமைத்து தர வேண்டி மக்களுடன் இணைந்து NHAI திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இராமதாஸ் தலைமையில் ஊர் பொதுமக்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இது குறித்து தகவல் இல்லை சேலம் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் சம்பந்தப்பட்ட திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அலுவலகத்துக்கு பூட்டு போட சென்ற பொழுது போலீசார் மற்றும் அலுவலகத் திட்ட இயக்குனர் சீனிவாச ரெட்டி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். 
அப்பொழுது ஆவேசமடைந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் இராமதாஸ், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டும் பாலத்திற்கு அருகே இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் தற்பொழுது வரை அதனை செய்யாத திட்ட இயக்குனர் அலுவலகம் எனது சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கக் கூடாது. எனவே அதற்காக பூட்டு போடுகிறேன் என்று ஆதங்கப்பட்ட அவர், எனது தொகுதி பொதுமக்களுக்கு பயன் தராத திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தீர்வேன் இது எனது தாய் மீது சத்தியம் என்று கோபத்துடன் பேசியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எடுத்து பேசிய திட்ட இயக்குனர் அலுவலக அதிகாரிகள், பாலத்தின் வேலையை உடனே நிறுத்துவதாக உறுதி அளித்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றுகிறேன் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறிய உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் புதிய இணைப்பு பாலம் கட்ட தவறும் பட்சத்தில் ஊர் பொதுமக்களுடன் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஊர் பொதுமக்களுடன் மிகப்பெரிய அளவிலான மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த போராட்டத்தின் போது, மாநில பசுமை தாயக இணை செயலாளர் சத்ரிய சேகர், ஆட்டோ சின்னத்தம்பி, ஊத்து கிணறு பிரகாஷ், செந்தில், பழனி, மாவட்ட மகளிர் அணி கிருஷ்ணம்பாள், மாவட்ட அன்புமணி தம்பிகள் செயலாளர் இளவரசன், சிவராஜ், துரைராஜ், RM ரவி, செல்வம், மணிவேல், முருகன், பாலு மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 2 ஜனவரி, 2025

பெருந்துறை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட மிஷின் ஆபரேட்டர் வாய்க்காலில் தள்ளி கொலை: நண்பன் உள்பட 2 பேர் கைது

பெருந்துறை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட மிஷின் ஆபரேட்டர் வாய்க்காலில் தள்ளி கொலை: நண்பன் உள்பட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பாண்டியம்பாளையம் கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் யுவராஜ் (வயது 39). இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மில்லில் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இவர், கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் இருந்து வெள்ளாங்கோவிலில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், இதுகுறித்து அவரது தாயார் ராமாயாள் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி பாண்டியம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே மிதந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் யுவராஜ் எனத் தெரிந்தது.

இதனிடையே, யுவராஜின் நண்பரான கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (40) மற்றும் பூவேந்திரன் (வயது 43) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், யுவராஜிடம் தங்கராசு ரூ.1.90 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, பணத்தை திருப்பி கொடுக்குமாறு யுவராஜ், தங்கராசுவிடம் கடந்த சில வாரங்களாக கேட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தங்கராசு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் யுவராஜை, தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு, தங்கராசு மற்றும் பூவேந்திரன் சேர்ந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு யுவராஜை அழைத்து சென்றனர்.

பின்னர், இருவரும் சேர்ந்து வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டதில் யுவராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோட்டில் இன்று (ஜன.2) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.
இந்த சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. அரசு எந்த இடத்திலும் விடவில்லை.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த குற்றச்சாட்டையும் அரசின் மீது வைக்க முடியாது. நிறைய விஷயங்களுக்கு சி.பி.ஐ விசாரணை கேட்டார்கள். ஆனால் எதில் சிபிஐ விசாரணை தேவை என்பதில் வரைமுறை உள்ளது.

குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.15 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன.2) பார்வையிட்டார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, நடைபெற்று வரும் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில், குறிப்பாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 44 பெரியார் நகர் இ-பிளாக் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 380 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் பதித்தல் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து, வார்டு 27 கண்ணையன் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கரீட் சாலை, வார்டு 40 பச்சையப்பா வீதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 16 பட்டேல் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 7 அக்ரஹாரம் பகுதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை என ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கனி மார்க்கெட் பகுதியில் ரூ.12 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடையினையும், வார்டு 26 கள்ளுபிள்ளையார் கோவில் வீதியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தினையும், வார்டு 24 ஆர்.கே.வி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா என ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வார்டு 53 முனிசிபல் சந்திரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, அதேப் பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, வார்டு 25 ராமசாமிநகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார மையத்தில் ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மேற்கூரையினை திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ்.என், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, மாநகர பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சுமதி, ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்: வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்: வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு இன்று (ஜன.2) போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாநகராட்சி 5வது வார்டு கனிராவுத்தர் குளம், காந்திநகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள கடையில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இது அப்பகுதி மக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளது.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (ஜன.2) டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு காவல் நிலைய போலீசார் மதுக்கடையை ஒட்டி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

இருந்தபோதிலும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், டாஸ்மாக் துணை மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மதுபான கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.