திங்கள், 17 பிப்ரவரி, 2025

ஈரோட்டில் பிப்.21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் பிப்.21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான முகாம் வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 ஆகிய கைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


அந்தியூர் வட்டத்தில் பிப்.19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

அந்தியூர் வட்டத்தில் பிப்.19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் வரும் 19ம் தேதி காலை 9 மணிமுதல் மறுநாள் 20ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் மற்றும் திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 19ம் தேதி மாலை 4.30 மணிமுதல் 6 மணி வரை அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து: பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு

ஈரோடு அருகே பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து: பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறியதால் பரபரப்பு

ஈரோடு அருகே பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்தால், பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 ஈரோடு மாவட்டம் மாமரத்து பாளையம் பகுதியில்,ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி சிங் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்,  

இந்நிலையில், பிளாஸ்டிக் கயிறு தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது

இதனைக் கண்ட பணியாளர்கள் பதறி அடித்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து வெளியேறினார்,  

ஈரோடு தீயணைப்புத் துணைநருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் வருகின்றனர்,

இந்நிலையில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கயிறு தயாரிக்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது,

தொடர்ந்து மள மளவென கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து, பல அடி தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஈரோட்டில் 40 நாட்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 410 மனுக்கள்

ஈரோட்டில் 40 நாட்களுக்கு பிறகு நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 410 மனுக்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதையொட்டி கடந்த மாதம் 7ம் தேதியிலிருந்து கடந்த 10ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.
இதையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை இது வரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த பெட்டியில் போட்டு வந்தனர்.


இந்நிலையில், கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (பிப்.17) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காப்பீட்டு தொகை செலுத்தியிருந்த உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரூ.3 லட்சம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையினை வழங்கினார்.

மேலும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களான 2 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு எடையாளர் ஆகியோருக்கு மாவட்ட அளவிலான சிறந்த நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசுத்தொகையினை வழங்கி கௌரவித்தார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியரக (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், துணை ஆட்சியர் (பயிற்சி)சிவபிரகாசம், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதா பானு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர், பெண்  உதவி பொறியாளர் மீது  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஜான் என்பவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என பெண் உதவி பொறியாளர் ஆதாரங்களுடன் விளக்கம்.

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர், பெண் உதவி பொறியாளர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஜான் என்பவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என பெண் உதவி பொறியாளர் ஆதாரங்களுடன் விளக்கம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர், பெண்  உதவி பொறியாளர் மீது  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். ஜான் என்பவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என பெண் உதவி பொறியாளர் ஆதாரங்களுடன் விளக்கம்.

சேலத்தை அடுத்துள்ள  நிலவாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜான்.டி.செல்வா. இவர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி பொறியாளராக திருமதி சாந்தி என்பவரும் பணியாற்றி வருகிறார். நிலவாரபட்டி பகுதியை சேர்ந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான்.டி.செல்வா தனது பணி தகுதி என்ன என்பதை மறந்து  ஒரு அலுவலக உதவியாளரைப் போல பீரோவை துடைப்பது மேஜையை துடைக்க வைப்பது, அது மட்டுமல்லாமல் வாகன ஓட்டியாக பயன்படுத்துவது போன்ற சில்லறைத்தனமான பணிகளை  மேற்கொள்ள வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட தன்னிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று அதே அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 
இதன் ஒரு பகுதியாக தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு என்று  சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் அவர்களிடம் விடுமுறை கடிதம் அளித்த போது அவர் அந்த கடிதத்தை உதாசீனப்படுத்தி மேலதிகாரியை  பாருங்கள் என்னால் தங்களுக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று கூறி அந்த கடிதத்தை முகத்தில் விட்டெறிந்ததாகவும் கூறிய மின்வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா   தனது மனைவியின் மருத்துவ விடுமுறையை முடித்து தொடர்ந்து பணியாற்ற அலுவலகம் வந்த போது சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் திருமதி சாந்தி அவர்கள் தனது விடுமுறையை ஏற்காமல் தற்பொழுது வரை இன்றைய நாள் வரை தன்னை பணியில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாத காலங்களாக மாத ஊதியம் இல்லாமல் தனது  குடும்பம் மிகுந்த மன உளைச்சலிலும் சாப்பாட்டிற்கு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றோம் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 
பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் பரபரப்பை எடுத்து இந்த புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் திருமதி சாந்தி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜான் D செல்வா என்பவர் தன் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவ விடுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது ஆனால் வணிக ஆய்வாளர் விடுப்பு என்று எடுத்தால் குறைந்தபட்சம் 200 நாட்களில் இருந்து 375 நாட்கள் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடியவர் என்று பல்வேறு ஆதாரங்களை முன் வைத்தார் திருமதி சாந்தி அவர்கள். இதுபோன்று நீண்ட நெடிய விடுப்பு எடுத்து பணிக்கு திருப்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்ற ஒப்புதல் கடிதம் பெற்று அலுவலகத்தில் தந்த பிறகு பணிக்கு திரும்ப முடியும். ஆனால் ஜான் D செல்வா என்பவர் சம்பந்தப்பட்ட காவல்துறை கடிதத்தை வழங்காமல் தற்போது வரை பணிக்கு திரும்பாமல் இருப்பது என்ன காரணம் என்று பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியாது என்று கூறிய அவர், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஓட்டுனராக இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட அவர் பதவி உயர்வு அடிப்படையில் வணிக ஆய்வாளராக தற்பொழுது பணியாற்றி வருகிறார் ஆனால் அந்த பதவிக்கு உண்டான பணியை அவர் இதுவரை செய்ததே இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், ஒரு திட்டத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் அதற்கான திட்ட மதிப்பீடு இதுவரை அவர் தயார் செய்து கொடுத்ததில்லை என்றும் மாறாக களப்பணியை இதுவரை செய்யவில்லை என்றும் விளக்கமளித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பணியில் இருக்கும் போதே அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு எங்கேயாவது சென்று படுத்துக் கொள்வார் என்றும் பணி விஷயமாக அவரை அழைக்கும் போது அந்த அழைப்புக்கு தற்பொழுது வரை உரிய மதிப்பு அளித்ததே இல்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இறுதியாக பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் மீது எனது அதிகாரத்திற்கு உட்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே அவர் மீது தான் எடுத்ததாகவும் ஆனால் அவர் விடுப்பு முடிந்து ஏன் தற்பொழுது வரை பணிக்கு வரவில்லை என்பது தங்களுக்கு தெரியாது என்றும் தனது ஆதங்கத்தை திருமதி சாந்தி வெளிப்படுத்தினார். இதே போல அந்த  அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகளும் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஈரோட்டில் போக்சோவில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் குவிந்த பெற்றோர்கள், மாணவர்கள்

ஈரோட்டில் போக்சோவில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் குவிந்த பெற்றோர்கள், மாணவர்கள்

ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 31). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் பணிபுரியும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவனுக்கு செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அலாவுதீனை கைது செய்தனர். இந்த நிலையில் அவரிடம் 'டியூசன்' படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று ஒன்று திரண்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை போலீசார் நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர்களிடம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, ஆசிரியர் அலாவுதீன் எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக டியூசன் எடுக்கிறார்.

இதுபோன்ற பிரச்சினை இதுவரை இல்லை. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் எங்களுடைய குழந்தைகளின் படிப்பு பாதிக்கும். எனவே கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும்' என்றனர்.

போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆசிரியர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் எஸ்பி அலுவலகத்தில் திரண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மகளிர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

ஈரோடு மகளிர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல்பரிக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். செல்வம் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோடு கச்சேரி வீதியில் ஒரு மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையில், அவரது மகளுக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில், அவரது மகள் மற்றொரு நபரிடம் பழகி வந்துள்ளார். அந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக செல்வத்துடன் கூறியுள்ளார்.

இதற்கு செல்வம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது மகள் திடீரென மாயமாகி விட்டார். இதனால், போலீஸ் செயலியில் மகள் மாயமானது குறித்து செல்வம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்வம் வந்தார்.

அப்போது திடீரென தண்ணீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் போலீசார் செல்வத்திடம் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் அவரது பிரச்சனை குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து சமாதானமாகி சென்றார்.