வியாழன், 24 ஏப்ரல், 2025

அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

அந்தியூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஒப்பாரி போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை.
எனவே, 5 மாத கூலி கேட்டு நேற்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க அந்தியூர் கிளை சார்பில் அந்தியூர் கனரா வங்கி முன்பு ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 5 மாதங்கள் கூலி வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஒப்பாரி வைத்தனர்.

இந்த போராட்டத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம், பிரம்மதேசம், நகலூர், சின்னத்தம்பிபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.26ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி, பவானி ஊராட்சிக்கோட்டை மறஙஅந்தியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஏப்.26ம் தேதி) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கவுந்தப்பாடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- கவுந்தப்பாடி,கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தபாடிபுதூர், அய்யம்பாளையம், வேலம்பாளையம். சந்திராபுரம், வெள்ளாங்கோயில், மாரப்பம்பாளையம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளையம்.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பவானி நகரம், குருப்பநாயக்கன் பாளையம், நடராஜபுரம், ராணா நகர், வர்ணபுரம், ஊராட்சிகோட்டை, ஆண்டிகுளம், ஜீவா நகர், கூடுதுறை மற்றும் சொக்கரம்மன் நகர்

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.
ஈரோடு: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை; ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு!

ஈரோடு: ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை; ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு!

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட அனுமதி சான்று பெறுவதற்காக, அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அப்போது, அங்கு பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், பேரூராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்த கோபால் ஆகியோர் கட்டிட அனுமதி சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத செல்வராஜ் இதுகுறித்து ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்களின் திட்டப்படி கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், டேங்க் ஆபரேட்டர் கோபால் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சில வினாடிகளில் அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கார்த்திகேயனையும், டேங்க் ஆபரேட்டர் கோபாலையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர், வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது

இந்த நிலையில், நீதிபதி ராமசந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் அரசு பணியை செய்ய லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் வாங்கியதற்கும் கார்த்திகேயன், கோபால் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதா ஆஜரானார்.
சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் புதூர் பிரிவு பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஜீப்பை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கடம்பூர் அருகே உள்ள தொண்டூர் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 59), கடம்பூர் கோட்டார் தொட்டியை சேர்ந்த மணிகண்டன் (60), சின்னநஞ்சன் என்பவருடைய மகன் பெரியசாமி (35), சடையப்பன் என்பவருடைய மகன் ராமர் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்டவிரோதமாக ஜீப்பில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு: சென்னிமலை அருகே முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்!

ஈரோடு: சென்னிமலை அருகே முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேர் கைது: ரூ.54 ஆயிரம் அபராதம்!

சென்னிமலை அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திருந்த 3 பேரை பிடித்த வனத்துறையினர் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி வனப்பகுதிக்கு உட்பட்ட புளியம்பாளையம் பகுதியில் ஈரோடு வனச்சரக அதிகாரி சுரேஷ், சென்னிமலை வனத்துறை அதிகாரி முருகன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சேலம் மாவட்டம் சங்க கிரி மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 25), வடிவேல் (32), பிரகாஷ் (35) ஆகிய மூவரும் நாட்டு துப்பாக்கி வைத்து, முயலை வேட்டையாட முயற்சி செய்யும் போது கையும், களவுமாக பிடிப்பட்டனர்.

அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவரையும் மாவட்ட வன அலுவலர் முன் ஆஜர்படுத்தினர். அவர் நபர் ஒருவருக்கு தலா ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது!

பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது!

பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலை சாலையில் உள்ள எல்லைமேடு அருகே பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக 7 பேர் நடந்து வந்தவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வங்கதேசத்தை சேர்ந்த இத்ரிஷ் அலி (வயது 20), ஷான்தா (வயது 37), மொகின்மியா (வயது 34), முகமது பாரூக் உசேன் (வயது 31), முகமது பெல்லா உசேன் (வயது 27), முகமது ஹர்சத் (வயது 34), முகமது பாஹிம் உசேன் (வயது 24) என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதன், 23 ஏப்ரல், 2025

மாநில அளவிலான ஓவிய கண்காட்சி-போட்டி: ஈரோட்டில் 26ம் தேதி தொடங்குகிறது!

மாநில அளவிலான ஓவிய கண்காட்சி-போட்டி: ஈரோட்டில் 26ம் தேதி தொடங்குகிறது!

ஈரோட்டில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி வருகிற 26ம் தேதி மாநில அளவிலான ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டி தொடங்க உள்ளது.

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவையொட்டி பாவா ஓவிய அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ஓவியப் போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே நடத்தப்பட்டது. இந்நிலையில், போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் புகழ்ப்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியானது ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி திருமண மண்டபத்தில் வருகிற 26ம் தேதி(சனிக்கிழமை) முதல் தொடங்கி 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

 26ம் தேதி சிறப்பு நிகழ்வாக 4ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனர் குப்பண்ணன் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப் போட்டியை தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், எம்பி பிரகாஷ், எம்எல்ஏ சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 27ம் தேதி மாநில அளவிலான ஓவியப்போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இவ்விழாவிற்கு மண்பாண்ட கலைஞர் முனுசாமி தலைமை தாங்குகிறார். 

தமிழ் நிலம் ஓவிய அறக்கட்டளை தலைவர் ஜாபர் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்று பரிசுகளை வழங்க உள்ளார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் பொருளாளர் ஷானவாஸ் செய்துள்ளார். இந்த கண்காட்சியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இதில், பொதுமக்களும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்று பயன்பெறலாம் என நிகழ்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.