புதன், 14 மே, 2025

ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று புதிய உச்சமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவு!

ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று புதிய உச்சமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் பதிவு!

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக ஈரோட்டில் புதன்கிழமை (மே.14) இன்று 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது. 
ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் பொதுமக்களின் இயல்பு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காரணமாக வாழ்க்கை கடந்த 2 நாட்களாக 103 டிகிரி, 104 டிகிரி என வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (மே.14) புதன்கிழமை இந்த ஆண்டின் உச்ச கட்டமாக 106.16 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

காலை 10 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வாகனங்களில் சென்றவர்கள் அனல் காற்றை தாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். மேலும், கடுமையான புழுக்கம் நிலவி வருவதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் எங்கும் செல்ல முடியாமலும் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெருந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்: 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்!

பெருந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்ட 3ம் கட்ட சிறப்பு முகாம்: 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட துடுப்பதி, நிச்சாம்பாளையம், பாண்டியம்பாளையம், ஈங்கூர், கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இன்று (மே.14) மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்களை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்து, 157 பயனாளிகளுக்கு ரூ.8.97 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 70 கிராம ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 70 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், பெருந்துறை வட்டத்தில் துடுப்பதி ஊராட்சி, சின்னமல்லாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம் ஊராட்சி, குஞ்சரைமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஈங்கூர் தம்பிராட்டியம்மன் திருமண மண்டபம், கூத்தம்பாளையம் ஊராட்சி அக்கரயாம்பாளையம் கன்னிமார் காலியம்மன் கோவில் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.


தொடர்ந்து, புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள். இலவச வீட்டுமனை பட்டா வரன்முறை படுத்துதல், உட்பிரிவு பட்டா, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம், கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு கடனுதவிகள், மேலும், இன்று மனுக்கள் வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வாக மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, பதிவு அட்டை மற்றும் புதிவு அட்டை புதுப்பித்தல் ஆணை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா சலவைப் பெட்டி என 157 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், இணை இயக்குநர் (வேளாண்மை) தமிழ்ச்செல்வி, துணை இயக்குநர் (சுகாதாரம்) அருணா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர். தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ். மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ஜூன், பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: தனியார் நிறுவனங்களில் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும்; தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவு!

ஈரோடு: தனியார் நிறுவனங்களில் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும்; தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் திருக்குறள் விளக்க உரை எழுத வேண்டும் என்று தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் நிறுவனங்களில் திருக்குறளும், விளக்க உரையும் எழுத உத்தரவிட்டார்.

அதன்படி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் பா.மாதவனின் அறிவுரைபடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்க உரையும் எழுதப்பட வேண்டும்.

தினம் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். மேலும் வேலை அளிப்போர் அமைப்புகளிடமும், தொழில் நிறுவனங்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த தகவலை ஈரோடு தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.15) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.15) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின் பாதை மற்றும் தண்ணீர்பந்தல் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிபாளி மின் பாதைகளில் நாளை (மே.15) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா முதல் ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம் வரை, பெருந்துறை மெயின் ரோடு, காந்தி நகர் காலனி, ஓ.ஏ.ராமசாமி வீதி, பழனியப்பா வீதி, கொங்கு கலையரங்கம் மற்றும் அதன் பின்புறம், சின்ன முத்து 2 வது வீதி மற்றும் ஈ.பி.காலனி.

தண்ணீர்பந்தல் துணை மின் நிலைய சென்னிபாளி மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிட்டியாம் பாளையம், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டி பாளையம், மைலாடி, நடுப்பாளையம், அஞ்சுராம் பாளையம் மற்றும் சின்னதொட்டி பாளையம்

செவ்வாய், 13 மே, 2025

ஈரோட்டில் போர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கிய அதிமுக பிரமுகர்!

ஈரோட்டில் போர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கிய அதிமுக பிரமுகர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடைபெற்றது.
 இந்த கூட்டத்தில் 46 புதூர் வில்வா சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகானந்தம் மற்றும் அக்கட்சியினர் சிலர் பஹல்காம் சம்பவத்தின் தொடர்ச்சியாக நடந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்கான நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வழங்கினர்.

அப்போது, அதிமுகவைசேர்ந்த டாக்டர் சிவமுருகன், சுனில்ராஜ், பன்னீர்செல்வம், பாஸ்கர், ராஜ மாணிக்கம், அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்த இளைஞர் தீபக்குமார் (வயது 29). இவர் தனது நண்பர்களுடன் கோடை விடுமுறையை கொண்டாட தாளவாடி அடுத்த தர்மபுரம் கிராமத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் துணி காய போடும் கம்பி மின்சார கம்பியுடன் இணைந்து இருந்தது. தெரியாமல் துணிகளை உலர வைப்பதற்காக கம்பியை தொட்ட தீபக் குமார் தொட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.

 உடனே அருகில் இருந்த சக நண்பர்கள் செருப்புடன் கூடிய காலில் மிதித்து காப்பாற்ற முயற்சி செய்து அவரை மீட்டனர். பின்னர், தாங்கள் வந்திருந்த காரில் தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் தீபக்குமாரின் தந்தை தங்கவேலுவிற்கும், தாளவாடி போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாட வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.
மொடக்குறிச்சி அருகே பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் சு.முத்துசாமி!

மொடக்குறிச்சி அருகே பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் சு.முத்துசாமி!

மொடக்குறிச்சி அருகே பூந்துறை சேமூரில் பகுதிநேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் நடத்தும் முழு நேர ரேஷன் கடையான பூந்துறை சேமூர் ரேஷன் கடை 822 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்த அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் பூந்துறை சேமூர் ரேஷன் கடையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர்.
இப்பகுதி மக்கள் பயண தூரத்தை குறைத்து தங்கள் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் சுமார் 157 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு பகுதி நேர ரேஷன் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சு.முத்துசாமி பூந்துறை சேமூர் அம்பேத்கர் நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, மொடக்குறிச்சி வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.