சனி, 28 செப்டம்பர், 2024

கனமழையால் நிரம்பிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் நிரம்பிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணை 33.46 அடி உயரமும், 139.60 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். 
இந்நிலையில், நேற்றிரவு (28ம் தேதி) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 63 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம், முழுக் கொள்ளளவான 139.60 மில்லியன் கன அடியை இன்று (29ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு எட்டியது.

இதையடுத்து, அணையின் வலது மற்றும் இடது கரை வழியாக 66 கன அடி உபரிநீா் வெளியேறி வருகிறது. இதனால், அணையின் கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பவானி உபகோட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணை இன்று (29ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் முழு கொள்ளளவான 139.60 மி.கன அடியை எட்டி அணையின் வழிந்தோடிகள் வழியாக சுமார் 66 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

வரட்டுப்பள்ளம் அணையின் உபரி நீரானது எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், அந்தியூர், பிரம்மதேசம் மற்றும் வேம்பத்தி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று ஆப்பக்கூடல் கிராமம் அருகே பவானி ஆற்றில் கலக்கிறது.‌

எனவே, மேற்கண்ட கிராமங்களின் வழியே வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பினை தெரிவிக்குமாறு வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் பிரசவமான பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

கோபி அரசு மருத்துவமனை தவறான சிகிச்சையால் பிரசவமான பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சுண்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி மைதிலி (வயது 28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மைதிலி இரண்டாவதாக கர்ப்பமானார். கடந்த 20ம் தேதி மைதிலி பிரசவத்திற்கான கோபியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைதிலிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், மைதிலிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே, மைதிலிக்கு பிரசவத்திற்காக நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது அளவுக்கதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக கோபி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மைதிலியை கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரை செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைதிலி எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி நேற்று (28ம் தேதி) மதியம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மைதிலியின் இறப்பிற்கு கோபி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான மருத்துவ சிகிச்சையே காரணம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, மைதிலியின் உறவினர்கள் கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் வேட்டைக்காரன்கோவில் பகுதியில் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்த தகவலறிந்து கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயிரிழந்த மைதிலியின் பெண் குழந்தை கோபி அரசு மருத்துவமனையில் உள்ளது. ஆனால் குழந்தையின் முகத்தை பார்க்காமலே தாயை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் எங்கள் யாரையும் சந்திக்க விடவில்லை. எனவே மைதிலியின் இறப்பில் சந்தேகம் உள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரிய வேண்டும். அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனையடுத்து, இதுகுறித்து புகார் அளித்தால் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து, மைதிலியின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கோபி - திருப்பூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உலக இதய தினத்தை ஒட்டி சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை Cop மற்றும் Sp உள்ளிட்ட துவக்கி வைத்தனர்.

உலக இதய தினத்தை ஒட்டி சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை Cop மற்றும் Sp உள்ளிட்ட துவக்கி வைத்தனர்.


சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

உலக இதய தினத்தை ஒட்டி சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை Cop மற்றும் Sp உள்ளிட்ட துவக்கி வைத்தனர்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தை  சேலம் கார்ப்பரேஷன் அசிஸ்டன்ட் கமிஷனர்  அஸ்வினிஅவர்கள் துவக்கி வைத்தார்.  
 காலை 5.30 மணிக்கு தொடங்கிய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை SP  கௌதம் கோயல் தொடங்கி வைத்தார். 
 காலை 7 மணிக்கு தொடங்கிய 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை சேலம் மாவட்ட கமிஷனர் பிரவீன் குமார் துவங்கி வைத்தார். 21.1  கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி  மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா  வழியாக கன்னங்குறிச்சி சாலை   சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக  சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி  மைதானத்தை வந்தடைந்தது.  இதேபோல் 10 கிலோமீட்டர் ஓட்டமானது சேலம் காந்தி  மைதானத்தில் தொடங்கி ஏற்காடு கோரிமேடு அடிவாரம் வரை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக  சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று திரும்பவும்  சாரதா காலேஜ் -  4ரோடு வந்து திரும்ப காந்தி மைதானத்தை அடைந்தது. காவேரி மருத்துவமனை மாரத்தான்  ஓட்டத்திற்கு சேலம் மருத்துவமனை இயக்குனர் செல்வம்,  மருத்துவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  
இருதய மருத்துவர்கள்  மருத்துவ சுந்தர பாண்டியன்,  மருத்துவர் சதீஷ்குமார் ,  மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் இருதய விழிப்புணர்வு குறித்து  விளக்கம் அளித்தனர். 21.1 கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளை வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.  கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை  சேலம் கார்ப்பரேஷன் கமிஷனர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோர் அளித்தனர். சேலம் காவேரி மருத்துவமனையின்  நிர்வாகத்தினர் ஊழியர்கள்  உள்ளடங்கிய குழுவினர் சார்பில் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாராக ஈரோடு ஆட்சியர் அறிவுரை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாராக ஈரோடு ஆட்சியர் அறிவுரை

ஈரோடு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் களப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை இன்னல்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முன்னேற்பாடு கூட்டம் நடைபெறுகிறது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை இன்னல்களை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு வட்டார அளவில் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மீட்பு குழு, நிவாரண முகாம் மேலாண்மைக் குழு சிறப்பு குழு அமைத்து பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.


அதன்படி, நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், வடிகால்கள், கால்வாய்கள் ஆகியவற்றில் தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண் : 1077, 0424-2260211-ல் தெரிவிக்க வேண்டும். பருவமழைக்காக வட்டார அளவில் அமைக்கப்பட்ட பல்துறை அலுவலர் அடங்கிய மண்டல குழுவினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அது தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட துறையின் அலுவலருக்கு தெரிவித்து உடனடியாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளதா எனவும், அதன் முழு அகலத்திற்கும் நீர்வழிப்பாதை உள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெருமழை வெள்ள நீர் தடையின்றி செல்லும் வகையில் கழிவுநீர்ப் பாதைகளை பெருந்திட்ட பணிகள் மேற்கொண்டு சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அணைகள், ஏரிகளின் உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறும் நீர்வழிப் பாதைகளை அவ்வப்போது ஆய்வு செய்து உபரிநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்யவேண்டும். ஈரோடு மாவட்டத்திலுள்ள 17 மழைமானி நிலையங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் தணிக்கை மேற்கொண்டு செயல்பாடுகள் குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும்.

தன்னார்வலர்கள் மற்றும் பேரிடர் கால காவலர்கள் தங்களது பகுதியில் மழை,புயல், சரிசெய்ய மாற்றுப்பாதைகள் கொண்ட திட்ட வரைவு வைத்து கொள்ள வேண்டும். வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்க ஏதுவாக வட்டாட்சியர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்களின் தொடர்பு எண்களை அவர்களிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் சாலைகளில் ஏற்படும் இடையூறுகளை மின்சாரத்துறை, பலத்த காற்று மற்றும் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் பட்சத்தில் அவற்றை உடனடியாக சரி செய்ய தேவையான பணியாளர் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.


பொதுப்பணித்துறை அலுவலர்கள், வடகிழக்கு பருவமழை காலங்களில் மழை, வெள்ளம், புயலினால் பாதிப்புக்குள்ளானவர்களை தங்க வைக்கப்படும் நிவாரண முகாம்களான பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவைகளை பொதுப்பணித்துறை அலுவலர்களால் நேரில் தணிக்கை செய்து அவற்றின் கட்டிட உறுதித் தன்மையை உறுதி செய்திட வேண்டும்.

மேற்படி கட்டிடங்களில் மின்வசதி, குடிநீர் வசதி ஆகியன உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, கரையோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். பெரிய அளவிலான வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி கரைகளை அகலப்படுத்துதல் வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம், பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றின் நீர்வழிப்பாதைகளில் இருபுறங்களிலும் தூர்வாரி நீர்வழிப்பாதைகளை சீர் செய்யவேண்டும். நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட மதகுகள் மற்றும் சாலைப்பாலங்களில் வெள்ள நீர் வடிந்து செல்வதற்காக உள்ள மதகுகள் அனைத்தையும் புலத்தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதில் உள்ள செடிகொடிகள் அகற்றி சுத்தம் செய்து வெள்ள நீர் தடையின்றி வடிந்து செல்லத் தக்க வகையில் பராமரிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளம், குட்டைகள், திறந்தவெளி கிணறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குளங்களில் உடைப்புகள் ஏற்படும் நேரங்களில் அதனை அடைக்க தேவையான அளவு சாக்குப்பைகள் மற்றும் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் மழையினால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட மதகுகள் மற்றும் சாலைப் பாலங்கள் ஆகியவற்றினை உடனடியாக புலத்தணிக்கை மேற்கொண்டு, இவற்றில் வளர்ந்துள்ள செடி,கொடிகள் ஆகியவற்றினை அகற்றவும், வெள்ள நீர் தங்கு தடையின்றி வடிந்து செல்லவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

இதே போல மாநகராட்சி, நகராட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவசர காலங்களில் பேரிடர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்கள் கைபேசி எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் துறை வாரியாக தயார் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து வட்டாட்சியர்களும் தங்களுடைய வட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்க தகுதியான சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றின் பட்டியலினையும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களின் பெயர், கைபேசி எண், பராமரிப்பு பணியாளர்களின் கைபேசி எண் ஆகியவற்றினை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.


ஒவ்வொரு அலுவலர்களும் வட்டாட்சியர்களும் எந்தெந்த இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதோ அந்த இடங்களை நேரிடையாக தணிக்கை செய்து தேவைப்படும் முன்னெச்சரிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலையில் தூர் வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றி நீர்நிலைகள், நீர்நிலைக்கு வெள்ளநீர் வரும் பாதைகள் மற்றும் வெள்ள நீர் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றினை தூர் வாரி வெள்ள நீர் தடையின்றி செல்வதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து துறைகளிலும் உள்ள களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், வட்டாட்சியர் அங்கமுத்து (பேரிடர் மேலாண்மை), அனைத்து வட்டாட்சியர்கள், காவல்துறை, தீயணைப்பு துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது: 3 சவரன் மீட்பு

ஈரோட்டில் ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது: 3 சவரன் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் தர்மத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா ஈஸ்வரி (வயது 29). இவர் தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவாரூருக்கு காரைக்கால் விரைவு ரயிலில் பயணம் செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அதிகாலை ரயிலானது, தொட்டிப்பாளையம் ரயில் நிலையம் அருகே வரும்போது மர்ம நபர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து, ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் உமா ஈஸ்வரி புகார் அளித்தார்..

இதேபோல் , தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரூபினி (வயது 25). இவர் தனது குடும்பத்துடன் பட்டுகோட்டையில் இருந்து திருப்பூருக்கு கோயமுத்தூர் விரைவு ரயிலில் பயணம் செய்தார். ரயில் கடந்த 13ம் தேதி இரவு 20.15 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை தாண்டி மெதுவாக சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூபினி கழுத்தில் அனிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு வண்டியில் இருந்து குதித்து ஓடியுள்ளார். பின்னர், ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரூபினி புகார் அளித்தார்.

இவ்விரு சம்பவங்களில் தொடர்புடைய நபரை பிடிக்க இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா உத்தரவுப்படி, இருப்புப் பாதை காவல்துறை துணை தலைவர் அபிஷேக் தீக்ஷித்தின் நேரடி மேற்பார்வையில், இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரடி கண்காணிப்பில், கோயமுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில், ஈரோடு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (27ம் தேதி) மதியம் இவ்விரு சம்பவங்களில் தொடர்புடைய பெருந்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராகேஷ் என்பவரை ஈரோடு ரயில் நிலைய பூங்கா அருகே  கைது செய்து, அவரிடம் இருந்து 3 சவரன் நகையை மீட்டனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் ராகேஷ் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் 2009 முதல் 8 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து நகையை மீட்ட தனிப்படையினரை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா, காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக்ஷித், காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர். மேலும், ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸ்அப் எண் 99625-00500 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.

திருப்பதி லட்டு விவகாரம்: ஈரோடு, பெருந்துறையில் தேங்காய் உடைத்து முறையிட்ட இந்து முன்னணியினர்

திருப்பதி லட்டு விவகாரம்: ஈரோடு, பெருந்துறையில் தேங்காய் உடைத்து முறையிட்ட இந்து முன்னணியினர்

ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக, திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை 
வழங்க கோரி, தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு வ.உ.சி.பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன் மற்றும் 
மாவட்ட செயலாளர் து.முரளி
மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல், பெருந்துறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், பெருந்துறை பெருமாள் கோவில் வளாகம் முன்பு உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் முறையிட்டு சூரை தேங்காய் உடைக்கப்பட்டது.
சோனா கல்வி நிறுவனத்தில்சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும்கிரிக்கெட் வீரர்ரான பாஸ்கி மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடல்

சோனா கல்வி நிறுவனத்தில்சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும்கிரிக்கெட் வீரர்ரான பாஸ்கி மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடல்

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சோனா கல்வி நிறுவனத்தில்
சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும்
கிரிக்கெட் வீரர்ரான பாஸ்கி மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடல்

சேலம் சோனா கல்வி குழுமத்தில் சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரியில் நடைப்பெற்றது. சோனா கல்வி நிறுவனங்களின்  துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகருமான திரு.பாஸ்கி, தேசிய அளவிலான கிரிக்கெட் பயிற்சியாளர் திரு.அரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்கி பேசும் பொழுது இன்றைய சூழலில் மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் விளையாட்டினால் உடல் வலிமையுடன் மனவலிமையும் அடைய முடியும். இன்றைய வாழ்க்கை சூழலில் இது முக்கியமான ஒன்றாகும் என்றார். 
மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கிவரும் சோனா கல்வி நிறுவனங்கள் தற்போது விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஒரு புதிய முயற்சியாக அதிநவீன வசதிகளுடன் கூடிய சோனா கிரிகெட் அகடமியை துவங்கியுள்ளது சேலத்திற்கு மிக பெரிய அடையாளம் என்றார். இந்த புதிய முயற்சியை செயல்படுத்திய சோனா கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பாவை அவர் வெகுவாக பாராட்டினார்.  
இதனைத்தொடர்ந்து சோனா கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா பேசும்பொழுது   சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்கிவருகிறது. தற்போது விளையாட்டு துறையிலும் சர்வதேச அளவில் சிறப்பு பெற அதிநவின வசதிகளுடன் கூடிய சோனா கிரிகெட் அகடமியை துவங்கியுள்ளது. விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி விளையாட்டு வீரர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். மற்றும் விளையாட்டு மூலம் தான் உடல் வலிமையும், மன வலிமையும் பெற்று மாணவர்கள் வாழ்கையில் வெற்றியடைய முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜி.எம்.காதர்நவாஷ், இ.ஜெ.கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.