புதன், 9 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 3 ரேஷன் கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் தரமாகவும், முறைகேடுகள் இன்றியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக முறைகேடுகளைத் தடுக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 3 நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட திரு.வி.க ரோடு சூரம்பட்டி - லதா, கணேசபுரம் & நம்பியூர்-4 - இந்திராணி, ஊராட்சிக்கோட்டை -பிரபு ஆகிய மூன்று விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்திட ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர், கட்டுநர் பணி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம், நியமிக்கப்பட உள்ளன.

மாவட்ட ஆள் சேர்ப்பு மையம், அதற்கான அறிவிப்பை இன்று (9ம் தேதி) வெளியிட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://drberd.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வரும் நவம்பர் 7ம் தேதி 5.45 மணி வரை பதிவு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர், கட்டுநர் பணி முறையே, பொதுப் பிரிவில் 27,3 பிற்படுத்தப்பட்டோர் 23,2, இஸ்லாமியர் 3,0, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 19,2, ஆதிதிராவிடர் 14,2, அருந்ததியர் 3,0, பழங்குடியினர்‌ 1,0 என்ற அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுப் பிரிவு வயது 32க்குள், மற்ற பிரிவுக்கு வயது வரம்பு கிடையாது.

மேலும், கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு https://drberd.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆதிதிராவிட மாணவர்களின் படிப்பை உறுதி செய்ய கோரி ஈரோட்டில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

50 ஆதிதிராவிட மாணவர்களின் படிப்பை உறுதி செய்ய கோரி ஈரோட்டில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு காளை மாடு சிலை அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ் எம் சாதி தலைமையில், ஈரோடு மாவட்ட நிர்வாகத்தால் அரசு விடுதிகளில் வெளியேற்றப்பட்ட 50 ஆதிதிராவிட மாணவர்களின் படிப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பெருந்துறை பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிட தங்கும் விடுதியில் தங்கி, அரசு மற்றும் தனியார் கல்லூரி கல்லூரிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களுக்கு, மீண்டும் அரசு விடுதியில் சேர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகாவின் மாநில துணைச் செயலாளர் துரை வளர்மதி மேலாண் மண்டல செயலாளர் சுசி கலையரசன் தெற்கு மாவட்ட செயலாளர் கமலநாதன், தெற்கு மாவட்ட பொருளார் வி.விஜயபாலன் கல்லூரி மாணவர்கள் என பங்கேற்று கோசங்களை எழுப்பினர்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டும், இலவச மருத்துவ முகாம் நடத்தியும் பாமகவினர் உற்சாகம்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டும், இலவச மருத்துவ முகாம் நடத்தியும் பாமகவினர் உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டும், இலவச மருத்துவ முகாம் நடத்தியும் பாமகவினர் உற்சாகம். 

பாமக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாமகவினர் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் ஒன்பதாம் தேதி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் நிலையில் சேலம் பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா. அருள் தலைமையில், சேலம்ராஜகணபதி திருக்கோவில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, தொடர்ந்து, சேலம் சுகவனேஸ்வரர் அருகிலுள்ள தியா சாபீகள்சொசைட்டி முன்பாக 500 ஏழைகளை அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டன. தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலணியில் அம்மணி அம்மாள் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன. 
பின்னர் சேலம் வென்னங்குடி முனியப்பன் கோவில் சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து மித்தா புதூரில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன,  தொடர்ந்து அன்று மாலை சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழாவையொட்டி தங்க தேரிகளுக்கும் வைபவமும் நடத்தி சேலத்தில் பாமகவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிகளில்,  கதிர் ராஜரத்தினம் மாவட்ட தலைவர், பசுமைத் தாயகம் சத்ரிய சேகர், எம்பி சதாசிவம், வக்கீல் குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜமாணிக்கம் பூபதி கலையரசன் சங்கர், பகுதி செயலாளர்கள் அண்ணாமலை, திரிசங்கு,சோடா சண்முகம், சின்னசாமி, சிவக்குமார்,அங்கம்மா காலனி சுரேஷ், வக்கீல் ரஞ்சித்,அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி  பாமக மாணவர் சங்கத்தினர்  உற்சாகம்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி பாமக மாணவர் சங்கத்தினர் உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி  பாமக மாணவர் சங்கத்தினர்  உற்சாகம். 

பாமக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாமகவினர் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் 9ம் தேதியான இன்று  டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் நிலையில்,  பாமக மாணவர் அணி சார்பில் சேலத்தை  அடுத்துள்ள உடையாபட்டி  பகுதியில் உள்ள ஸ்ரீ வாசவி சேவா டிரஸ்ட், ஸ்ரீ வாசவி முதியோர் இடத்தில் உள்ளவர்களுக்கு இன்று காலை பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் விஜய ராசா தலைமையில் நிர்வாகிகள் வழங்கி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். பாமக மாணவர் சங்கத்தினரின் இந்த செயல்பாட்டிற்கு டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் பாராட்டுகள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக மாணவர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 8 அக்டோபர், 2024

டி.என்.பாளையம் ஒன்றியத்தில் ரூ.4.19 கோடியில் வளர்ச்சி தி்ட்ட பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

டி.என்.பாளையம் ஒன்றியத்தில் ரூ.4.19 கோடியில் வளர்ச்சி தி்ட்ட பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் (டி.என்.பாளையம்) ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமுகை மற்றும் அரக்கன்கோட்டை ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (8ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெருமுகை ஊராட்சி கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை அவர் நேரில் பார்வையிட்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் தற்போது உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கல்ராமணி பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.94.50 லட்சம் மதிப்பீட்டில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், எரங்காட்டூர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், கரும்பாறை பகுதியில் 12 பழங்குடியினருக்கான வீடுகளும், பகவதிநகர் பகுதியில் 28 பழங்குடியினருக்கான வீடுகளும் என 40 வீடுகள் தலா ரூ.4.37 லட்சம் வீதம் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அரக்கன்கோட்டை ஊராட்சி அரக்கன்கோட்டை கிராமத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட 4 வீடுகள் புனரமைப்பு செய்யும் பணியினையும் என ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகள் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின்போது, தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மைதிலி, இந்திராணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

ஈரோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

ஈரோடு அடுத்த சின்னசடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்று மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதையொட்டி, கோயில் நிர்வாகி குப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக நேற்று (7ம் தேதி) திங்கட்கிழமை ராமேஸ்வரம் கிளம்பி சென்றனர்.

இதற்காக, தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென அந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் மின்சாதன பொருட்களோ அல்லது இருசக்கர வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனமும் இல்லாத நிலையில், தீ விபத்து நிகழ்ந்துள்ளதால் மர்ம நபர்கள் யாரேனும் நள்ளிரவில் வந்து இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.