வியாழன், 19 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடியாவது பயனாளி சுந்தரம்பாள் (வயது 55) என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். அடுத்ததாக தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தா (வயது 60) என்பவரையும் சந்தித்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டம் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது அவர் கூறியது, முதல் பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தருகிறேன், ஒரு கோடியாவது பயனாளிக்கும் மருந்து பெட்டகத்தை தருகின்ற நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்களுக்கான இம்மருத்துவத்தை வீடுகள் தோறும் தேடிச் சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, மருந்துகள் தருவது. அந்தவகையில் இந்த திட்டம் 2021ல் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் 50 லட்சமாவது பயனாளிக்கு சித்தாலப்பாக்கத்தில் உள்ள மருந்து பெட்டகம் தரப்பட்டது. மீண்டும் முதலமைச்சரே திருச்சிக்கு வருகை புரிந்து 1 கோடி 01வது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை தந்தார்.

அந்தவகையில் இத்திட்டம் படிப்படியாக வளர்ந்து ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களை சென்றடைந்திருக்கின்றது என்கின்ற வகையில் 2 கோடியாவது பயனாளியாக சுந்தரம்பாள் (வயது 55) என்பவருக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று (டிச.19) மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தொடர் சேவைப் பெறுபவர்கள் 4,29,71,772 பேர் இதில் பயன்பெற்று வருகிறார்கள்.

உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,00,01,363 பேர். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 49,45,745 பேர். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 44,28,972 பேர். நோய் ஆதரவு சிகிச்சை பெறுபவர்கள் 5,40,822 பேர், இயன்முறை சிகிச்சை பெறுபவர்கள் 7.25,042 பேர். சிறுநீரகம் சிகிச்சை (டயாலிஸிஸ்) பெறுபவர்கள் 434 என்கின்ற வகையில் இதுவரை 2 கோடியை கடந்து இந்த சிகிச்சைகள் சென்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் தொடர் சேவை என்கின்ற வகையில் 04,29,71,772 பேர் பயன்பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சிகிச்சையில் பயன்பெற்று வருகிறார். மேலும் நஞ்சனாபுரம் பகுதியில் மட்டுமே 1005 என்கின்ற வகையில் மக்கள் தொகை இருக்கின்றது. இதில் 136 பேர் மருத்துவ பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு புதிதாக சுந்தரம்பாள் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் நோய் இருப்பதை கண்டறியப்பட்டு அவருக்கு மருந்து பெட்டகம் தரப்பட்டிருக்கிறது.
மக்களைத் தேடி மருத்துவம் எனும் இத்திட்டத்தில் 14,000 மேற்பட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வருகை புரிந்து 2 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்தே கண்காணித்து இத்திட்டத்தின் வளர்ச்சியை தொடர் ஆய்வு செய்ததன் காரணமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

அம்மா கிளினிக் என்பது நான் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டேன். 1700 மருத்துவமனைகள் ஒரே ஒரு மருத்துவரோடு, செவிலியர் கூட இல்லாமல், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும்போது சுடுகாடு போன்ற இடங்களிலும் இம்மருத்துவமனையை வைத்திருந்தார்கள் ஒரு மருத்துவரை வைத்து, அதுவும் கூட மாநில அரசின் நிதி ஆதாரம் இல்லை.

NHM என்று சொல்லக்கூடிய தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆதாரம் கொண்டு. ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒரு வருடம் கழித்து தானாகவே அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்த அரசு அம்மா கிளினிக்கை மூடியது போன்று தோற்றத்தை அவர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இது சம்மந்தமாக அதற்கான ஆணைகளை காண்பித்து சட்டமன்றத்தில் பதில் கூறினோம்.

சுடுகாடு என்று சொன்னவுடன் எங்கே என்று கேட்டார். வாருங்கள் சைதாப்போட்டையில் சாரதிநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ஒரு பகுதியை எடுத்து நீங்கள் அம்மா கிளினிக் அமைத்திருக்கிறீர்கள். இப்போதும் இருக்கின்றது வாருங்கள் நாங்கள் காண்பிக்கிறோம் என்று சொன்னேன், இப்போதும் சொல்கிறேன் அவர் வந்தால் காண்பிக்க தயாராக இருக்கின்றேன்.

எனவே அவர் ஏதாவது காரணங்களை சொல்வது எப்போதும் வாடிக்கையான ஒன்று, எனவே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் என்பது இந்திய அளவில் அல்ல உலகளவில் வேறு எங்கேயும் செயல்படுத்தப்படாத திட்டம் என்பதால்தான் ஐ.நா மன்றமே இத்திட்டத்திற்கு விருது தந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ஈரோட்டிற்கு வருகை தந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

ஈரோடு மாவட்டம் சோலாரில் நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) வியாழக்கிழமை மதியம் ஈரோடு வந்தார்.
முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோரும் வரவேற்றனர்.

இதையடுத்து, சாலை வழியாக காரில் புறப்பட்ட முதல்வருக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், எம்பிக்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பெருந்துறை வந்த முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். முதல்வர் பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். இவ்வாறாக, 20 இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நஞ்சனாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். பின்னர், இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு ஈரோடு காளிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கிய முதல்வர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு சென்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கிய முதல்வர்

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளி வீட்டிற்கு நேரில் சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பெட்டகத்தை  இன்று (டிச.19) வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (டிச.19) ஈரோட்டிற்கு வருகைத் தந்தார். அப்போது, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி  தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள்,இடைநிலை சுகாதார செவிலியர்கள். சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன.
இத்திட்டத்தின், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பயனாளி மீனாட்சி 2022ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி முதலமைச்சர் மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி. சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி நடைபெற்ற 79- ஐக்கிய நாடுகள் பொதுசபையின்போது, ஐக்கிய நாடுகள் அமைப்பு "United Nation Interagency Task Force Award 2024" உலக நாடுகள் அளவில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர், ஈரோடு மாவட்டம். நஞ்சனாபுரத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை இன்று (டிச.19) வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இணை இயக்குநர் (மருத்துவம்) கவிதா, துணை இயக்குநர் (மருத்துவம்) அருணா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து, சேலம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து, சேலம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து, சேலம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். 

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று அவதூறாக பேசிய தகவல் தமிழக முட்பட நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில், சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் ஆட்டையாம்பட்டி இளம்பிள்ளை பேரூர் கழகங்களின் சார்பில் ஒன்றிய அமைச்சர் அமிக்ஷாவை கண்டித்து ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டம் வீரபாண்டி ஒன்றிய கழகச் செயலாளர் திருமதி. வெண்ணிலா சேகர் தலைமையிலும் ஆட்டையாம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் முருக பிரகாஷ் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்கள் குறித்து தெரியாமல் அவர் மீது அவதூறு தகவல்களை பரப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதில் பல்வேறு கோரிக்கைகளை வளைத்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கோமதி முருகபிரகாஷ் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வேங்கையன் ஒன்றிய நிர்வாகிகள் அருள், செந்தில்குமார், சாஸ்தா, தங்கராசு, மகேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்வதி ஸ்ரீராம், ‌‌அருள், கோகிலா சங்கர், ராஜலட்சுமி சித்தேஸ்வரன், சின்னபொண்ணு மெய்வேல், அழகேசன் ஒன்றிய கவுன்சிலர் நித்தியா மோகனவேல் பேரூர் அவைத்தலைவர் தாமரைச்செல்வன், இன்ஜினியர் வெங்கடாசலம் S.K.பொன்னுசாமி, வீரபாண்டி வெங்கடாசலம், ஆசிரியர் வெங்கடாசலம், இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

புதன், 18 டிசம்பர், 2024

5 லட்சம் ரூபாய் பண மோசடி  மற்றும் கொலை மிரட்டல் விடுத்த  ஆன்லைன் புரோக்கர்கள் மனோகரன்  மற்றும் கந்தசாமி  ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க  கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

5 லட்சம் ரூபாய் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த ஆன்லைன் புரோக்கர்கள் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

5 லட்சம் ரூபாய் பண மோசடி  மற்றும் கொலை மிரட்டல் விடுத்த  ஆன்லைன் புரோக்கர்கள் மனோகரன்  மற்றும் கந்தசாமி  ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க  கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

நாமக்கல் மாவட்டம்
N. கொசவன்பட்டி, ரோஜா நகர் பகுதியை சார்ந்தவர்கள் S. ராஜ்குமார். M. ராஜசேகரன், K சிவபிரகாசம், S.J உதித்நரேந்தர். மற்றும் M. ரவிகுமார். இவர்களில் சிலர் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளனர். கடந்த 18  மாதங்களுக்கு முன்பு எங்களது இல்லம் தேடி வந்த நாமக்கல் மாவட்டம்- N கொசவம்பட்டி-  VOC நகரில் வசிக்கும் மனோகரன்  என்பவர் எங்களை  கட்டாயபடுத்தி  *அமெசர் வர்த்தம்- ( AMAZER TRADE- Cripto Coin*) ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 15 மாதங்களில் முதலீடு பணம் அதனுடன் சில லட்சங்கள் போனஸ் பணத்துடன் திருப்பி வரும் என்று ஆசை வார்த்தைகள்  கூறியதுடன் அவரும் சில லட்சம் முதலீடு செய்து பல லட்சம் பெற்றதாக கூறியுள்ளார். எங்கள் ஐவரையும் வற்புறுத்தி ரூபாய் 5 லட்சம் மற்றும் பத்தாயிரம் பெற்று கொண்டார். மனோகரன் தன்னுடன் அவரது கூட்டாளி  திருசெங்கோட்டை சார்ந்த கந்தசாமி என்பவரை அழைத்து வந்துள்ளார். தங்களிடம் பெற்ற ஐந்து லட்சத்து பத்தாயிரம் ரூபாயை கந்தசாமியிடம் கொடுத்த மனோகரன், இந்த பணம் உங்களது பெயரில் அமெசர் வர்த்தகத்தில் ( AMAZER Trade ) முதலீடு செய்து பத்திரம்- இரசீது தருவதாக கூறி பணத்தை வாங்கி சென்றனர். கடந்த இரண்டு வருடமாக பெற்று சென்ற எங்களது முதலீடு பணத்திற்கு பத்திரமோ- இரசீதோ கொடுக்காமல் இருந்ததால் எங்களது முதலீடு பணத்தை திருப்பி  கொடுக்க மனோகரனிடம் பல மாதங்களாக கேட்டு போராடி வருகின்றோம்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அவர்களை அணுகி உள்ளனர். அவரது அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட அனைவரும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், நாமக்கலைச் சேர்ந்த  மனோகரன் அவரது கூட்டாளி கந்தசாமியிடம் பெற்று தருவதாக கூறி வந்த போதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றி பண மோசடி செய்து வருகின்றனர் என்றும் கடந்த 17-12-24 அன்று மனோகரனையும், கந்தசாமியையும் கைபேசியில்  தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கொடுக்க கேட்ட போது  பணம் கேட்டு வீட்டு பக்கம் வந்தால்  அனைவரையும் வெட்டி சாய்ப்பேன் என்று அச்சுறுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்த மனுவில், இந்த கொலை மிரட்டல் புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டு பண மோசடி மற்றும் மிரட்டல் விடும் குற்றவாளிகள் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வலியுறுத்தி இந்த புகார் மனுவை அளிக்கின்றோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தன ர். மேலும் சேலம் - நாமக்கல் மாவட்டங்களில் 50 கும் மேற்பட்ட அப்பாவி மக்களிடம் , அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் கூறி வைத்து மனோகரன், கந்தசாமி ஆகியோர் சுமார் 5 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பல புகார்கள் நிலுவையில் இருப்பது  தெரியவருகின்றது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த புகார் மனு நகல், காவல் துணை கண்காணிப்பாளர்
நாமக்கல் மாவட்டம், காவல் துணை கண்காணிப்பாள திருசெங்கோடு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் வரும் 21ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

ஈரோட்டில் வரும் 21ம் தேதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 21ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
108 ஆம்புலன்சில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 11:30 மணி முதல் 2 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நடைபெற உள்ளது.

இதில், ஓட்டுநருக்கான அடிப்படை தகுதிகளான, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கலாம். 

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக நேரில் கொண்டு வர வேண்டும்.
மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தேர்வு அன்று 19-க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாத ஊதியம் 16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூறியியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனித வளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், கூடுதல் விவரங்கள் அறிய 044-28888060, 7397724813, 73388 94971, 89259 41108 எண்களை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 வடமாநில வாலிபர்கள் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 வடமாநில வாலிபர்கள் கைது

ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 2 வடமாநில வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையம் அருகே ஹெராயின் கடத்தப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு உதவி காவல் ஆய்வாளர் துளசிமணி தலைமையிலான போலீசார் ரயில் நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும் படியாக 2 வடமாநில வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹாசானு ஜமால் (வயது 32), ஹசாதுல் இஸ்லாம் (வயது 29) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த பாக்சை திறந்து பார்த்தபோது அதில் 50 கிராம் ஹெராயின் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, போலீசார் அவர்களை இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 50 கிராம் ஹெரயின் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் அசாம் மாநிலத்தில் இருந்து ஹெராயினை கடத்தி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கடத்தி செல்ல முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.