திங்கள், 30 டிசம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.30) திங்கட்கிழமை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சென்னை கோரட்டூர்புரத்தை ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (டிச.30) திங்கட்கிழமை மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகிலும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பவானி, அந்தியூர் சாலை பகுதியிலும், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரப்பன்சத்திரத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து இருந்தனர். எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னெச்சரிக்கையாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதன்படி, சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமையில், அதிமுக பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதேபோல், பவானி அந்தியூர் சாலை பகுதியில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல், ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.தென்னரசு ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் 400க்கும் மேற்பட்டோர் யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, கோவிந்தசாமி, ஜெயபாலாஜி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வீரக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஈகிள் சதீஷ்குமார், மாநகர எம்.ஜி.ஆர் மன்ற துணைச் தலைவர் பொன் சேர்மன், தகவல் தொழில் நுட்ப அணி சத்தியமூர்த்தி, வீரக்குமார் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறாக, மாவட்டம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

பெருந்துறை நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

பெருந்துறை நல்லாம்பட்டியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து ரிப்பன் வெட்டி வைத்தார்.
முன்னதாக, ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து, பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக்காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக முதல் தவணையாக 22 நபர்களுக்கு மொத்த கடன் தொகை ரூ.25.80 லட்சத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய கறவைமாட்டு கடனுதவியினை அவர் வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தாட்கோ சார்பில் 5 பயனாளிகளுக்கு மொத்த கடன் தொகை ரூ.33.81 லட்சத்தில் ரூ.11.91 மதிப்பீட்டில் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவினையும், 8 பயனாளிகளுக்கு ரூ.13.44 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.36.36 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, கொந்தளம் ஊராட்சியில் ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தினை திறந்து வைத்து, தாண்டம்பாளையம் விநாயகர் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவியினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் என்.புஷ்பராணி, கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர்.நல்லா ஜி.பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர்.தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த மாநிலத் தலைவர் விருது

ஈரோடு மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த மாநிலத் தலைவர் விருது

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய மாநாடு ஐதராபாத்தில் டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்திய மருத்துவ சங்க தேசிய நிர்வாகிகள் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் மருத்துவர் கே.எம்.அபுல்ஹசன் சிறந்த மாநிலத் தலைவர் என்ற விருதினை வழங்கினர்.

மருத்துவர் அபுல்ஹசன் தமிழ்நாடு இந்திய மருத்துவ சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஆருயிர்-அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்தினார். மேலும், ஆற்றல் திட்டத்தின் கீழ், இளம் மருத்துவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

மருத்துவ மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுக்கு மனநல இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தனிப் பிரிவு தொடங்கப்பட்டது. அவர்களுக்கான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்று, தமிழ்நாடு மாநில கிளையில் முன்னேற்றம், புதுமை ஆகியவற்றுடன் மருத்துவர்களுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் நற்பெயரை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மருத்துவர் கே.எம்.அபுல்ஹசனுக்கு இந்த விருது சிறப்பான அங்கீகாரம் என்று சக மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செட்டிநாடு சந்தை 2024 பொருட்காட்சி மற்றும் விற்பனை சேலத்தில் துவக்கம். ஏராளமான ஒரு கலந்து கொண்டு பயன்.

செட்டிநாடு சந்தை 2024 பொருட்காட்சி மற்றும் விற்பனை சேலத்தில் துவக்கம். ஏராளமான ஒரு கலந்து கொண்டு பயன்.

சேலம். 

செட்டிநாடு சந்தை 2024 பொருட்காட்சி மற்றும் விற்பனை சேலத்தில் துவக்கம். ஏராளமான ஒரு கலந்து கொண்டு பயன். 

சேலம் நகரத்தார் சங்கத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக செட்டிநாடு சந்தை 2024 என்ற பெயரில் செட்டிநாடு கலைப் பொருட்களை மட்டுமே உள்ளடக்கிய கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு சேலம் நகரத்தார் சங்கத்தின் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வநாதன் பொருளாளர் அருணாச்சலம் துணைத் தலைவர்கள் லட்சுமணன் நாச்சியப்பன் மற்றும் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டவர் முன்னிலை வகித்த துவக்க விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் மற்றும் சோனா கல்வி குழுமத்தின் தலைவரும் கல்வி தந்தையுமான வள்ளியப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் விற்பனையினை துவக்கி வைத்தனர். 
67 அரங்குகளுடன் தொடங்கிய இந்த செட்டிநாடு சந்தையில் செட்டிநாடு புகழ் பெற்ற சேலைகள் கலைப் பொருட்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் வெள்ளி பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் சைவ வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சைவ அசைவ உணவு வகைகள் உள்ளிட்ட வகைகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக இந்த சைவ அசைவ உணவு வகைகளில் செட்டிநாட்டிற்கு உரித்தான வெள்ளை பணியாரம் ஆடிக்குள் கந்தர அப்பம் பச்சை தேங்குழல் கவுனி அரிசி பால் பணியாரம் கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை இடியாப்பம் வகைகள் கடலை மசாலா வகைகள் காண்பவர்களை கவரும் வகையிலும் அதனை ருசிப்பதிலும் ஆர்வம் காட்டினர். அனுமதி இலவசமாக நடைபெறும் இந்த செட்டிநாடு சந்தையில் உள்ள செட்டிநாட்டிற்கு புகழ்பெற்ற கலைப் பொருட்களை பார்வையிடுவதிலும் அதனை வாங்குவதிலும் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. 
இந்த செட்டிநாடு சந்தை குறித்து சேலம் நகரத்தார் சங்கத்தில் செயலாளர் விஸ்வநாதன் நம்மிடையே கூறுகையில், தற்போதுள்ள எந்திரமயமான வாழ்க்கை முறையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதற்கான பிரத்தியேக கடைகளுக்கு சென்று வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் தங்களது முதலீடுகளை செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் போது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும் இது போன்ற கண்காட்சி மற்றும் விற்பனை அல்லது அதற்கான பிரத்தியேக நிறுவனங்களுக்கு சென்று நேரில் வாங்கும் போது அவர்கள் விரும்பும் பொருட்களை நேரடியாக பார்த்தும் தங்களது தேவைக்கு ஏற்ப வாங்க முடியும் என்பதால் ஆன்லைன் வர்த்தகத்தை இனிவரும் காலங்களில் தவிர்த்து இதுபோன்று நடைபெறும் கண்காட்சி மற்றும் விற்பனை அல்லது அதற்கென பிரத்தியேகமாக உள்ள வர்த்தக வணிக நிறுவனங்களுக்கு சென்று பொது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சனி, 28 டிசம்பர், 2024

ஈரோட்டில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கடும் வயிற்று வலி

ஈரோட்டில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கடும் வயிற்று வலி

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 52). இவருடைய மனைவி அமுதா. இவர்களது மகள் நீலாம்பரி. இவர்கள் 3 பேரும் கடந்த 21ம் தேதி இரவு கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
மறுநாள் முதல் கடுமையான வயிற்று வலியால் மூவரும் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்‌ நலம் சரியாகவில்லை. இதனால் , மூவரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கருங்கல்பாளையத்துக்கு சென்று குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது உணவக சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஓட்டல் தற்காலிகமாக மூடி, அதற்கான உத்தரவு நகலை கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் வழங்கினர்.
பவானி அருகே புடவை வியாபாரி மர்ம சாவில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது

பவானி அருகே புடவை வியாபாரி மர்ம சாவில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை செய்த பள்ளி மாணவன் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம் குலாலர் வீதியைச் சேர்ந்த டெல்லி செல்வராஜ் என்கிற செல்வராஜ் (வயது 70).த திருமணமாகாத இவர்  டெல்லியில் புடவை வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இவர் பாரதி ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் கடந்த 24ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், ஒலகடம் பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை சோதனை செய்தும் வந்தனர். 

இதனிடையே, பிரேத பரிசோதனைக்கு செல்வராஜ்-ன் உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் செல்வகுமார் கழுத்து பகுதியில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டும் கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கழுத்து நசுக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாபேட்டை குருவரெட்டியூர் இலிப்பிலி கிராமம் மேட்டுப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 24), இலிப்பிலி கிராமம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் திலீப் (வயது 20), மேலும், அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து, போலீசார் வெள்ளித்திருப்பூர் புரவிபாளையம் பெரியகுருநாதசாமி கோவில் அருகே உள்ள பாலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் பேரும் கூட்டாக சேர்ந்து கடந்த 23ம் தேதி என்று நள்ளிரவு செல்வராஜின் வீட்டில் மாடிப்படி வழியாக மேலே ஏறி வந்து கூரையை பிரித்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜை மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மேலும், அசோக் மற்றும் திலீப் ஆகிய இருவரும் துணியை வைத்து கழுத்தை நெறித்ததுடன் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டு, செல்வராஜ் அணிந்திருந்த ஐந்து மோதிரங்கள், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்கச் சங்கிலி என மொத்தம் 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவன் உள்பட அசோக் மற்றும் திலீப் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோட்டில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: டீக்கடைக்குள் புகுந்த அரசு பேருந்து

ஈரோட்டில் டிரைவருக்கு திடீர் வலிப்பு: டீக்கடைக்குள் புகுந்த அரசு பேருந்து

ஈரோடு சூரம்பட்டியில் இருந்து அரசு பேருந்து ஈரோடு பேருந்து நிலையம் நோக்கி சென்றது. இந்த பேருந்தை காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த டிரைவர் அண்ணாதுரை (வயது 57) என்பவர் ஓட்டினார். சூரம்பட்டி எஸ்கேசி ரோடு கிராமடைப் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, டிரைவர் அண்ணாதுரைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு மின்கம்பத்தில் மோதிய படி டீக்கடைக்குள் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். உடனே டிரைவர் அண்ணாதுரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டியில் உள்ள தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.