சனி, 4 ஜனவரி, 2025

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.
ஈரோட்டில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து ஜி. கே.வாசன் எம்.பி. தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச்செயலாளர் யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், மூத்த தலைவர்கள் ஆறுமுகம், எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மார்க்கெட் சஞ்சய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். 

ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அமைப்பு பிரதிநிதிகள், ஏராளமானூர் கலந்து கொண்டனர்.  பின்னர் ஜி.கே.வாசன் எம்.பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக லட்ச கணக்கான பெற்றோர்கள், மாணவிகள் அச்சத்தில் இருப்பது தான் உண்மை நிலை.
குற்றவாளிக்கு யார் பின் பலமாக உள்ளார்கள். அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் யார் அந்த சார் என்பதை தெளிவுப்படுத்தினால் தான் மக்கள் அரசை நம்புவார்கள்.

குற்றவாளியை விரைவில் விசாரித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம். இதனை கட்டுப்படுத்த,நிறுத்த முடியமால், முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தமிழக அரசு செயல்படுவது 
தமிழக மக்களுக்கு தலைக்குணிவு. 

பாலியல் வழக்குகளில் உண்மையான குற்றவாளி என கண்டறியப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. விசாரணை நம்பிக்கைக்குரிய விசாரணையாக நடைபெற வேண்டும் என்றால் கடந்த மாதம் 23-ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக திகில் சினிமா போல ஊடகங்களில் செய்தி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

இதுகுறித்து முதல்-அமைச்சர் நேரடியாக பதில் கூறாதது உண்மையில் மகளிருக்கு போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் அர்த்தம். தி.மு.க .கூட்டணியில் உள்ள தோழமை கட்சி கூட நேரடியாக சம்பவத்தை விமர்சனம் செய்து போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்து எமர்ஜென்சி போல நிலை ஏற்படுகிறது என்று தோழமை கட்சி கூறுவது அரசு நிர்வாக சீர்கேடுக்கு எடுத்துக்காட்டு. 

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. பெற்றோர், மாணவிக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பாடுகள் உள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றம் ஆணையை ஏற்கிறோம். அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சட்டத்தின் படி தான் நடக்கின்றது. 

சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான். அமலாக்கத்துறை சோதனை குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவி விவகாரத்தில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. அதனால் பெற்றோர், மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணைக்கு போக வேண்டும். 

இந்த விவாகரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும்.

தேர்தலுக்கு 
6 மாதம் முன்பு தான் அனைத்து கட்சிகளும் தங்களை பலப்படுத்தி கொள்ள நினைக்கும் .அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கட்சி பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிகரிப்பு பணிகளை செய்து வருகிறது. 

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றுடன் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். கோவை இருகூர் முதல் முத்தூர் வரை கேஸ் பைப்லைன் விவசாயிகள் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து
பட்டாசு ஆலைகள் வெடிவிபத்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி 2 ஆயிரம் 3 ஆயிரம் கொடுக்க நினைக்கும் நிலையில் பேரிடர் மற்றும் பொங்கல் தொகுப்பு என்றால் நிவாரண தொகை வழங்குவதில்லை.  அதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பில் பணம் வழங்க வேண்டும் என கூறினார். 

இந்தப் பேட்டியின் போது, தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச்செயலாளர் யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், மூத்த தலைவர்கள் ஆறுமுகம், எஸ்.டி.சந்திரசேகர், இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மார்க்கெட் சஞ்சய் உள்ளட பலர் உடன் இருந்தனர்.
சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி மகிழ்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி மகிழ்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி மகிழ்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் நாடக கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலைஞர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.  
அதிமுக இளைஞர் அணியின் மாநில துணை செயலாளரும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏபி சக்திவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகை காண சிறப்பு தொகுப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கி நாடக நடிகர்களுக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் தனது பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மற்றும் சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம். சேலம் புத்தூர் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம். சேலம் புத்தூர் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம். சேலம் புத்தூர் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு. 

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிரத்தை அடுத்துள்ள புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த சாதனை விளக்க பொதுக்குழு கூட்டத்தில், வீரபாண்டி தொகுதி சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் கிருபாகரன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட பொறுப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ்,  ஆட்டையாம்பட்டி பேரூர் கழக தலைவர் முருக பிரகாஷ், இளம்பிள்ளை பேரூர் கழக செயலாளர் குப்பம்பட்டி சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர். 
தமிழக அரசின் இந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டி எம் செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், திமுக பேச்சாளர் தூத்துக்குடி சரத் பாலா, மாநில தொழில் நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து தேர்தலின் பொழுது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் அறிவிக்கப்படாத வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தியது குறித்து பட்டியல் இட்டு பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக வீரபாண்டி ஒன்றியத்தின் சார்பில் 2025 காண நாட்காட்டி பொதுக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது. 
இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பளிக்க தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பளிக்க தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இன்று (ஜன.4) நடைபெற்றது. இதில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில், திருமகன் ஈவெராவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, முன்னாள் மாவட்டத்தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின்‌ மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த தீர்மானம் இயற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் எனவும், ஈவிகேஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல தலைவர்கள் எச்.எம் ஜாஃபர் சாதிக், ராஜேஷ் ராஜப்பா, முகமது அர்ஷத், தினேஷ், ஜுபைர் அஹமத் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், இந்த தீர்மானத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி அடையாள கருவி பொருத்த நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி அடையாள கருவி பொருத்த நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் இரண்டு நாள் இயந்திர கண்காட்சி கருத்தரங்கு தொடங்க விழா இன்று (ஜன.4) நடைபெற்றது. இதனை, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது, கைரேகை அடிப்படையிலான ரேஷன் அட்டையில் சில சிக்கல்கள் உள்ளதால் மாநிலத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளிலும் ரூ.250 கோடி ரூபாய் செலவில் கருவிழி அடையாள கருவிகளை அரசு நிறுவி வருகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 700 ஆலைகள் இணைந்து இருக்கின்றது. இதன் மூலம் 12 லட்ச மெட்ரிக் டன் அரைக்கின்ற திறன் உயர்ந்து இருக்கிறது. அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரவை கூலி உயர்த்துவது அரசின் பரிசீலணையில் உள்ளது. நடப்பு ஆண்டு 1,235 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் 5 லட்ச 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 75 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,580 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் விலை செப்டம்பர் மாதத்திற்குள் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயை தாண்டும், திறந்தவெளி கிடங்குகளில் கொட்டுவதால் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே ஒரு நெல்லைக் கூட வீணாக்கக் கூடாது என்பதால் அதிகளவில் செமி குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 90 சதவீத குடோன்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கொள்முதல் நிலையம் தேவை எனில் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். ஒழுங்குமுறை சந்தைகளில் கொள்முதல் செய்யப்படும் நெல் மீதான ஒரு சதவீத செஸ் வரியை நீக்கவும், ஹல்லிங் கட்டணத்தை (ரூ. 40 புழுங்கல் மற்றும் 25 கச்சா அரிசி) உயர்த்தவும், 5 சதவீத ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு நீக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு தானிய ஆண்டை முன்னிட்டு தர்மபுரி,ஊட்டி பகுதிகளில் அரிசிற்கு பதிலாக கேழ்வரகு வழங்கப்படுகிறது. சிறுதானிய உற்பத்தி அதிகமானால் மற்ற பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

ஈரோட்டில் மாநில அளவிலான கலைத் திருவிழா துவக்கி வைத்த அமைச்சர்: 4,811 மாணவ, மாணவியர் பங்கேற்பு

ஈரோட்டில் மாநில அளவிலான கலைத் திருவிழா துவக்கி வைத்த அமைச்சர்: 4,811 மாணவ, மாணவியர் பங்கேற்பு

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான கலைத் திருவிழாவினை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (ஜன.3) துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகல்வித்துறையின் சார்பில், 9, 10ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இக்கல்வியாண்டும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும். பள்ளிக் கல்விச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

2024-2025ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் பெறப்பட்டு பள்ளி, குறுவளமையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் முடிவுற்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று (ஜன.3) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் இன்று மற்றும் நாளை ((ஜன.4) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 4,811 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 2023-2024 ஆம் கல்வியாண்டில் இக்கலைத்திருவிழா போட்டிகள் "சங்கமிப்போம் சமத்துவம் படைப்போம்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற்றது.


அதுபோன்று, இவ்வாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளப்படுத்துதல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் 9 மற்றும் 10 வகுப்பு பிரிவின் கீழ் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 4,811 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, சிற்றுண்டி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் கங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் வே.செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், மாவட்டக் கல்வி அலுவலர் (கோபிசெட்டிபாளையம்) தி.திருநாவுக்கரசு, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன். உதவி திட்ட அலுவலர் எஸ்.ரவிச்சந்திரன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கோபியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு: சார் ஆட்சியரிடம் வணிகர்கள் மனு

கோபியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு: சார் ஆட்சியரிடம் வணிகர்கள் மனு

மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது பல்வேறு புதிய வரிவிதிப்பு முறையினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதுமுள்ள வியாபாரிகள் பல்வேறு நகரங்களில் கடைகளை அடைத்து தங்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து வணிகர் சங்கம் சார்பில், இன்று (ஜன.3) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான வணிகர்கள் தங்களின் கடைகளை அடைத்து புதிய வரிவிதிப்பு முறையை கைவிடக்கோரி கோபி துணை ஆட்சியர் சிவனாந்தம் மற்றும் கோபி நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ,50 கோடி வர்த்தகம் முடங்கியது. அதேசமயம், வழக்கம்போல் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் கடைகள் செயல்பட்டன. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியது.