திங்கள், 6 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19,77,419 பேர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 19,77,419 பேர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இன்று (ஜன.6)  வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா இறுதி வாக்காளர் பட்டியல்-2025யை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஜன.6) வெளியிட்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல்-2025 இன்று (ஜன.6ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2024 அக்டோபர் மாதம் 29ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் பின்னர், ஈரோடு மாவட்டத்தின் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் கடந்த நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேற்படி சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் எண் பதிவு, திருத்தம் போன்ற வாக்காளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு உரிய படிவங்கள் பெறப்பட்டது.

மற்ற நாட்களிலும் நேரிலும், இணைய வழியிலும் மேற்படி கோரிக்கைகளுக்காக படிவங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். அதன்பேரில், மேற்படி படிவங்களின் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி சிறப்பு சுருக்கத்திருத்த காலக்கட்டத்தில் 35,855 பெயர் சேர்த்தல் படிவங்களும், 23,112 பெயர் நீக்கல் படிவங்களுக்கும், 11,851 திருத்தங்கள் தொடர்பான படிவங்களுக்கும் ஆக மொத்தம் 70,818 படிவங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 12,746 வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலுடன் ஆதார் அடையாள அட்டை 64.24 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் நிலை சரிபார்ப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், 480 வாக்குப்பதிவு அலகுகள், 480 கட்டுப்பாட்டு அலகுகள் 480 வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் (விவிபெட்) ஆகியவை 6 பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டபேரவைத் தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.6ம் தேதி) படி, மொத்தம் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 55 ஆயிரத்து 356 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 871 பேர், மூன்றாம் பாலித்தனவர்கள் 192 பேர் என மொத்தம் 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 பேர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்:- 

மேற்படி, இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்ட அலுவலர் ரவி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி அசைவ விருந்து படைத்து மகிழ்ந்த மாமன்ற உறுப்பினர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி அசைவ விருந்து படைத்து மகிழ்ந்த மாமன்ற உறுப்பினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி அசைவ விருந்து படைத்து மகிழ்ந்த மாமன்ற உறுப்பினர். 

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் திமுகவினரால் மிகவும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சேலம் மாநகரில் உள்ள 60 கோட்டங்களிலும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டு விழா  நடத்தப்பட்டு வருகின்றது. 
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை எழுச்சியாக கொண்டாடும் விதமாக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதன் அடிப்படையில் சேலம்  மன்னார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் ஆக்கபூர்வமான விளையாட்டு போட்டியாக நடத்த வேண்டும் என்பதற்காக குழந்தைகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தியன் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்களது வயதை மறந்து உற்சாகத்துடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் பாடல்களைப் பாட மேடையில் இருந்த ஆண்கள் அதற்கேற்றவாறு நடனமாடியது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. 
இதனை அடுத்து விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அசைவ விருந்து படைத்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தார் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ராஜா லோகு முருகன் உன்னிடம் பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 3 பேர் கைது: 3 பேருக்கு வலை

கோபி அருகே விவசாயியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள் 3 பேர் கைது: 3 பேருக்கு வலை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பிலியம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளியங்கிரி (வயது 47). இவர் நம்பியூர் அருகே கூடக்கரை கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்ய நிலத்தை சமன் செய்யும் பணியில் கடந்த 1ம் தேதி ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு நம்பியூரை சேர்ந்த அசரப் அலி, சக்திவேல், கோபியைச் சேர்ந்த மாரிச்சாமி, மணிகண்டன், கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 6 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்களை நிருபர்கள் என்று கூறிக்கொண்டு தோட்டத்தை வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர், அவர்கள் வெள்ளியங்கிரியிடம், சட்டத்துக்கு புறம்பாக உரிய அனுமதியின்றி இங்கு பணியில் ஈடுபடுகிறீர்கள். எங்களுக்கு பணம் தரவேண்டும். இல்லையென்றால் வேலை செய்ய விடமாட்டோம் எனக்கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு அவர், இது சட்டத்துக்கு புறம்பான எதுவும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்துள்ளார்.

அதை ஏற்க மறுத்த 6 பேரும் பணத்தை ஏற்பாடு செய்து தராவிட்டால் விவசாயமே செய்ய முடியாது என மிரட்டி சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து வெள்ளியங்கிரி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நிருபர்கள் மாரிச்சாமி, வெங்கடேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.


பவானி அருகே ஆயில் மில் டிரைவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கார் ஏற்றி கொன்ற அத்தை மகன் உள்பட 2 பேர் கைது

பவானி அருகே ஆயில் மில் டிரைவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: கார் ஏற்றி கொன்ற அத்தை மகன் உள்பட 2 பேர் கைது

பவானி அருகே ஆயில் மில் டிரைவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கார் ஏற்றி கொலை செய்த உறவினரான மில் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் சொக்கனூர் காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 45). ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பையில் உள்ள அவருடைய அத்தை மகன் சேகருக்கு சொந்தமான ஆயில் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், வெங்கடாசலம் உடலில் ரத்த காயங்களுடன் ஒலகடம் அருகே உள்ள வெடிக்காரன்பாளையம் பிரிவு என்ற இடத்தில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் காலை இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வெங்கடாசலத்தின் மனைவி மரகதம் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், வெங்கடாசலத்தின் அத்தை மகனும், மில் உரிமையாளருமான சேகரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், உறவினர் சேகர், மூர்த்தி ஆகியோருடன் வெங்கடாசலம் முந்தைய நாள் இரவில் மது குடித்த போது, வெங்கடாசலத்துக்கும், சேகருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், வீட்டுக்கு காரில் சென்றபோதும் தகராறு ஏற்பட்டதால், வெடிக்காரன்பாளையம் பிரிவு அருகே வெங்கடாசலத்தை இறக்கி விட்டுள்ளார்.

.அங்கிருந்து சிறிது துாரம் சென்ற நிலையில், ஆத்திரம் அடங்காத சேகர், காரை திருப்பி வந்து நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடாசலத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சேகர், மூர்த்தியை கைது செய்த போலீசார் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பெருந்துறையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது

பெருந்துறையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கதிரவன் மற்றும் போலீசார் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள வாய்க்கால்மேடு அருகில் நேற்று (ஜன.5) அதிகாலை 3 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதனால் சந்தேக அடிப்படையில், அவர்களை துரத்திப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த பெருந்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வங்கதேசம் சத்ரிகா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபிகுல் இஸ்லாம் என்கிற பிக் முல்லா (வயது 31), மொக்லெச்சூர் ரஹ்மான் லால்து (எ) லால்டு முல்லா (வயது 23), முகமது சைதுல் இஸ்லாம் (வயது 48), முகமது மொனிருல் இஸ்லாம் (வயது 23), முகமது அனருல் இஸ்லாம் (எ) அனருல் (வயது 31), முகமது ரஜிபுல் இஸ்லாம் (வயது 37), முகமது மாசூர் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இவர்கள் அனைவரும் கடந்த 12-லிருந்து 15 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பெருந்துறை அருகே உள்ள பனிக்கம்பாளையம் குப்பக்காடு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் 15-லிருந்து 17 ஆண்டுகளாக வசித்து கொண்டு வெல்டிங், கட்டிட வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க இணைந்த மாபெரும் இணைப்பு விழா. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டதாக பெருமிதம்.

சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க இணைந்த மாபெரும் இணைப்பு விழா. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டதாக பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க இணைந்த மாபெரும் இணைப்பு விழா. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டதாக பெருமிதம். 

கோலிவுட் திரை உலகின் நட்சத்திர நடிகரும்,  அவர்களது ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகத்தில்  அரசியல் பிரவேசம் செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள ஏராளமான ஆர்வத்துடன் முன் வந்து தங்களை நடிகர் விஜய் தலைமையின் கீழ் செயல்படும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். 
அந்த வகையில், சேலம் மாநகரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் த.வெ.கவில் தங்களை இணைத்துக் கொள்ளும் மாபெரும் இணைப்பு விழா ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியா பட்டணம் அன்னை கஸ்தூரிபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் தெற்கு ஒன்றிய தலைவர் அமர்நாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் இணைப்பு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.கவில் தங்களை ஆர்வத்துடன் இணைத்து கொண்டனர். 
கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தார். மேலும் இந்த கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கட்சியில் இணைந்து விட்டு ஆர்வத்துடன் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபனுடன் செல்பி எடுத்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக சேலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் இதேபோன்று நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழா சேலத்தை அடுத்துள்ள வலசியுரிடம் நடைபெற்றது. அந்த நிகழ்விலும் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்து கொண்டதை பார்க்க முடிந்தது. 
இந்த மாபெரும் இணைப்பு விழா குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தளபதி விஜய் அவர்களின் தலைமையில் செயல்படும் கட்சியில் பொதுமக்களும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் இணைந்து வருவது தங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றும், உறுப்பினர் சேர்க்கைக்கு கட்சியின் சார்பில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாத பட்சத்திலேயே இவ்வளவு பேர் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர் என்றும் வரும் காலங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக தமிழக வெற்றி கழகம் திகழும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் தலைவரும் கட்சியின் தலைமையும் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் வேதநாயகம், நகர தலைவர் வெங்கடேஷ், நகர இணை  செயலாளர் செந்தில்குமார் மற்றும் தொண்டர் அணி செயலாளர் கார்த்தி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோட்டில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

ஈரோடு அசோகபுரம் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் இன்று (ஜன.5) காலை சொந்த வேலை காரணமாக தனது காரில் ஈரோடு - பவானி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அசோகாபுரம் அருகே சென்ற போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பி வந்துள்ளது.

இதனைக் கண்ட சதீஸ்குமார் உடனடியாக காரை விட்டு இறங்கியுள்ளார். இதனையடுத்து, காரின் முன்பக்கம் தீப்பற்றி மளமளவென எரிந்தது. உடனே, சதீஸ்குமார் அருகில் பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இந்த சம்பவத்தில், காரின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.