செவ்வாய், 7 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமல்

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 10ம் தேதி வேட்பு மனு தாக்கலும், 18ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜன.7) முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர், அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஈரோடு கிழக்கில் பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலைகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை: ஜன.10 முதல் 14ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை: ஜன.10 முதல் 14ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக ஜன.10ம் தேதி முதல் 14ம் தேதி முடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கோவை, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்சி, பழனி, சேலம், நாமக்கல், கரூர், சத்தி மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 புறப்பாடுகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றவாறு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு மற்றும் உடல் நலக் கோளாறால் தவிப்பவர்களுக்கு முதற்கட்ட முதல் உதவி சிகிச்சை குறித்த பயிற்சி. சேலம் CJ பள்ளாஜியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி.

விபத்துக்கு மற்றும் உடல் நலக் கோளாறால் தவிப்பவர்களுக்கு முதற்கட்ட முதல் உதவி சிகிச்சை குறித்த பயிற்சி. சேலம் CJ பள்ளாஜியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

விபத்துக்கு மற்றும் உடல் நலக் கோளாறால் தவிப்பவர்களுக்கு முதற்கட்ட முதல் உதவி சிகிச்சை குறித்த பயிற்சி. சேலம் CJ பள்ளாஜியோ நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சார்பில் பயிற்சி. 

தமிழகத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை வாகன விபத்துகள் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படுபவர்கள் 108 அவசர ஊர்தி வாயிலாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன. அதுபோல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி அவர்களை உயிர் பிழைக்க செய்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகன விபத்துக்கள் மற்றும் எதிர்பாராமல் நிகழும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதற்கட்டமாக முதல் அவசர சிகிச்சை அளித்து அவர்களை எவ்வாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவது என்பது குறித்தான பயிற்சி சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான CJ பள்ளாஜ்ஜியோ- வில் நடைபெற்றது. 
விடுதியின் பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் முதன்மை பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் எமர்ஜென்சி டெக்ஸ்ட் டெக்னீசியன்கள் ராகவன் கண்ணன் மற்றும் பைலட் அசோக் ஆகியோர் நட்சத்திர விடுதி பணியாளர்களுக்கு விபத்தில் காயம் ஏற்படுபவர்கள் எவ்வாறு முதல் உதவி செய்வது மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு எவ்வாறெல்லாம் முதலுதவி செய்வது இது போன்ற பல்வேறு உடல் பாதிப்புகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு முதற்கட்டமாக முதலுதவி சிகிச்சை எவ்வாறெல்லாம் வழங்குவது என்பன குறித்து விரிவாக 108 நிர்வாகத்தினர் பயிற்சி அளித்தனர். 
இந்த பயிற்சி குறித்து நட்சத்திர விடுதியில் பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி கூறுகையில் ஆண்டுதோறும் இரண்டு முறை தங்களது விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் இது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதே போல் மற்றவர்களுக்கு உதவி அவரின் உயிரை பாதுகாக்க ஏதுவாக உள்ளதாக 108 நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, டிசம்பர் 17ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

இந்நிலையில், ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜன.7) செவ்வாய்க்கிழமை மதியம் வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 5ம் ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜனவரி 17ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி நடைபெறுகிறது.

மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறுகிறது.

திங்கள், 6 ஜனவரி, 2025

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை வரும் ஜன.14ம் தேதி தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ மற்றும் முழுக் கரும்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கு பகுதி வாரியாக ஜன.8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன்கள் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஜன.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

இப்பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 18004255901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பினை பயனாளிகள் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதை ஏதுவாக மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை அமைத்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, தெரு விளக்குகள், வடிகால், சிறுபாலம் அமைத்தல், மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் ஊர்தியில் ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து பணிகாலத்தில் மரணமடைந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி: கலக்கிய வீரர், வீராங்கனைகள்

ஈரோட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி: கலக்கிய வீரர், வீராங்கனைகள்

ஈரோட்டில் நடைபெற்ற
மாநில அளவிலான கராத்தே போட்டியில் 300-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தறமைகளை வெளிபடுத்தி அபார சாதனை படைத்தனர்.

ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலியில், கோஜோரியோ கராத்தே சம்மேளனத்தின் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
கோஜோரியோ கராத்தே சம்மேளனத்தின் மாநில தலைவர் பார்த்திபன் கூறுகையில், கஜோரியோ கராத்தே பெடரேஷன் சார்பில் ஈரோடு டெக்ஸ் வேலியில் இரண்டாவது மாநில அளவிலான கஜோரியோ கராத்தே போட்டிகள் நடைபெற்றது, 

இதில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் வீராங்கனைகள் அடுத்த மாதம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகின்ற தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள், இன்று நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகளுக்கான போட்டிகளில் 8, 9 வயதிலும், சிறுவர் சிறுமிகளுக்கான 10, 11 வயது உட்பட கேடர், ஜூனியர் கேடர், அண்டர் 21, என்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தனிநபராக செய்யக்கூடிய கத்தா பிரிவிலும், வயது மற்றும் எடை அடிப்படையிலும் கத்தார் மற்றும் கும்தே என 88 பிரிவுகளில் நடைபெற்றது, இதில் கத்தா 60 பிரிவுகளிலும், கும்தே 28 பிரிவுகளிலும், மூன்று பேர் கொண்ட குழு போட்டி என நடத்தப்பட்டன,

முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற கராத்தே வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, இந்த பரிசுகளை பெற்ற வீரர் வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார், இந்த தேசிய போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இலங்கையில் நடைபெறும் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள், 

இன்று நடைபெற்ற மாநில அளவிலான இந்த கராத்தே போட்டியில் சென்னை கோவை திருப்பூர், சிவகங்கை, மதுரை,  ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கராத்தே வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர் என தெரிவித்தார், 

இப்போட்டிகளை தற்காப்பு கலை கராத்தே மாஸ்டர்களான மாணிக்கவாசகம், சக்தி, மணிவர்மா, பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.