திங்கள், 13 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த வாகன சோதனையில், கேரளா ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள்.

மேலும், போலீசாருடன், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு படைகள். பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, இன்று (ஜன.13) அதிகாலை ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரியவந்தது.

மேலும், அவர் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே, அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50,860, பாமக கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார் (வயது 38). இவரது மனைவி சிவகாமி. இவர் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சசிகுமார் தனது மனைவி குழந்தைகளுடன் அறச்சலூர் வீரப்பன்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாக அவரது வீடு கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, சசிகுமார் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சசிகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சசிகுமார் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட சசிகுமார் கடந்த 2009ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், கடந்த 2017ம் ஆண்டு நடந்த காவல் உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணியிடம் மாறுதலாகி வந்து பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. பொங்கல் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி குழந்தைகள்.

சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. பொங்கல் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி குழந்தைகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. பொங்கல் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி குழந்தைகள். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகத் தமிழர்களால் நாளை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதே போல அரசு மற்றும் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 
பள்ளி வளாகத்தில் செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொம்புகள் உட்பட மங்களப் பொருட்களை வைத்தும், புது பானையில் பொங்கலிட்டும் இயற்கைக்கு நன்றி செலுத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர் மற்றும் ஸ்ரீ சிந்து கல்வி அறக்கட்டளை தலைவர் ராம்சந்த் கிங்கர் ஆகிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை வரவேற்று பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஒரு சேர கூறி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பொங்கல் கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொங்கல் பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடி தங்களது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். 
இதனை அடுத்து பேசிய பள்ளி நிர்வாகிகள் நரேஷ் கிங்கர் மற்றும் ராம்சந்த் கிங்கர் ஆகியோர் பள்ளி குழந்தைகளிடையே பொங்கல்  விழாவை ஒட்டி தொடர்ச்சியாக  பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டில் பொழுது போக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் கழிக்காமல்  இந்த விடுமுறை நாட்களை நன்கு பயன்படுத்தி வீட்டிலேயே கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் பொங்கல் வழங்கி மகிழ்தனர் பள்ளி நிர்வாகத்தினர்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை. Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத்தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது. பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: 17ம் தேதி திமுக வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: 17ம் தேதி திமுக வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் இன்று (ஜன.12) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் தலைமையேற்றார். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் வந்தால் அத்துனை தோழமை கட்சியினர், அமைப்புகளையும் அனுசரித்து அவர்களின் அத்துனை கருத்துகளையும் உள்வாங்கி அதற்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து இது போல் நாம் பயணிக்க வேண்டும். நம்முடைய இந்தியா கூட்டணியில் தான் ஒரே கட்சியில் எடுக்கும் முடிவுகளைப் போல அத்துனை தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே மனதோடு செயல்படுகிறார்கள். 

ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு முழு முதற்காரணம் இங்கு வந்திருக்கும் அத்தனை பேரும் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்த தேர்தலிலும் கடுமையாக உழைத்து மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

நம்முடைய முதலமைச்சர் அன்றைக்கு இருந்ததைவிட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அந்த திட்டங்கள் அனைத்து மக்களையும், குறிப்பாக தாய்மார்களைச் சென்றடைந்திருக்கிறது. அது உண்மை என்று முதலமைச்சர் கடந்தமுறை இங்கே வந்த போது ஏறத்தாழ 36 கிமீ வழிநெடுகிலும் மக்கள் வரவேற்று நின்றார்கள். அவர்களைப் பார்த்து முதல்வர் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். 

அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வைத்திருக்கிறோம். மேற்கு மண்டலத்தில் 50 ஆயிரத்தைத் தொட்ட 4 தொகுதிகளில் ஈரோடு கிழக்கும் இருந்தது. அதைப்போல இந்த தேர்தலில் இரண்டு மடங்கு வித்தயாசமாவது கொண்டு வர வேண்டும்.

காரணம் தலைவர் வந்த போது 50 ஆயிரத்து 88 பேருக்கு ஒரே மேடையில் நலத்திட்ட உதவிகளைக் கொடுத்தார். வேறு எந்த அரசாங்கத்திலும் அப்படி செய்யவில்லை. அதுமட்டுமல்ல நமது தலைவர் நிறைவேற்றிய பல திட்டங்கள் வடமாநிலங்களில் பிஜேபி அரசாங்கத்தினர் எடுத்துச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அப்பொழுது ஸ்டாலின் திட்டம் என்று அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். 

ஆகவே மக்கள் நம்முடைய கூட்டணியை நம்பி இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால், வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. 

தேர்தலில் சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாம் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். நம்முடைய தோழமை கட்சிகள் மிகுந்த பொறுப்புள்ள கட்சிகள். எனவே விதிமீறல் எதுவும் இல்லாமல் நடக்க வேண்டும்.

வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு நாம் செய்ததை நினைவு படுத்த வேண்டும். தாய்மார்கள் வாக்கு 99% நமது கூட்டணி பக்கம் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும். 

யாரையும் நாம் எதிரியாக நினைத்து பேச வேண்டிய, திட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதை நடந்து சென்று வீடு வீடாக வாக்கு கேட்க வேண்டும். 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தோழமை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து பேசினார். 

மேலும், திருமகன் ஈவேரா மற்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு கொடுத்தனர். அதில் கொஞ்சம் செய்துள்ளோம். மீதமிருக்கிற பணிகளை கண்டிப்பாக செய்வோம். துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். நிறைவாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் நன்றி கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 17ம் தேதி பகல் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றார். அதிமுக போட்டியிடவில்லை என்பதை விமர்சிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் பேசும்போது, எங்கள் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இங்கே போட்டியிடுவதாக எண்ணி மிகப்பெரிய வெற்றிக்கு அத்துனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார். 

இதையடுத்து, செய்தியாளர்கயிடம் பேசிய சந்திரகுமார், இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். இத்தேர்தலில் மிகப் பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, எந்த ஒரு அரசியல் இயக்கமும் பெறாத வெற்றியை இந்த இடைத்தேர்தலில் பெற இருக்கிறோம். திமுகவின் வெற்றி எழுதி வைக்கப்பட்ட வெற்றி. இந்த தேர்தலில் கதாநாயகனாக திமுக அரசின் கடந்த 4 ஆண்டு சாதனைகள் தான் மையப்புள்ளியாக இருக்கப் போகிறது. 

குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை, விடியல் பயணம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மக்களுக்கும் சென்றடைந்திருக்கிறது.

அந்த மக்கள் நல திட்டங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப் போகிறது. அதுமட்டுமின்றி எங்கள் தலைவரின் பிரச்சார வியூகங்கள் மற்றும் இளந்தலைவரின் பிரச்சார உத்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும். நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதுகிறோம். குறைந்தபட்சம் 1 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.  

இந்நிகழ்ச்சியில், திமுக அமைப்பு இணை செயலாளர் அன்பகம் கலை, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், செயல் வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் அனைத்துக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. திரைப்படத்தை வரவேற்று விஷால் ரசிகர்கள் பெருமிதம்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. திரைப்படத்தை வரவேற்று விஷால் ரசிகர்கள் பெருமிதம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள மதகஜராஜா திரைப்படம் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. திரைப்படத்தை வரவேற்று விஷால் ரசிகர்கள் பெருமிதம்.

ஏ.சி.எஸ் அருண்குமார் தயாரிப்பில், விஜய் ஆண்டனி இசையமைப்பில் மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா விஷால் நடித்த திரைப்படம் பல்வேறு காரணங்களுக்காக 12 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருந்தது. இதனிடையே நடிகர் விஷால் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் நடக்க முடியாமலும் நிற்க முடியாமலும் கைகள் அனைத்தும் நடுங்கிய நிலையில் அவர் அரங்கில் இருந்தது அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருந்தது. நடிகர் விஷால் பூரண குணமடைந்து தற்பொழுது உடல்நலம் தேறியுள்ள நிலையில், இன்று தமிழக முழுவதும் அனைத்து திரையரங்குகளில் மதகஜராஜா திரைப்படம்  வெளியானது. 
சுமார் 12 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் திரையிடப்படாமல் இருந்த நடிகர் விஷால் நடித்த இந்த மதகஜராஜா திரைப்படம், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால் பூரண குணமடைந்த நிலையில், இன்று வெளியாகி உள்ளது அவர்களது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற்று குணமடைய வேண்டும் என்று சேலத்தில் உள்ள நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பல்வேறு பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அவர் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக நேற்று சேலம் சுவாமிநாதபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நடிகர் விஷால் நலச்சங்கத்தின் தலைவர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர். இதனை அடுத்து சேலம் மாநகரில் உள்ள முக்கிய திரையரங்குகளில் நடிகர் விஷாலின் திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கௌரி திரையரங்கில் வெளியான திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நடிகர் விஷால் மக்கள் நல இயக்க தலைவர் சாமிதுரை தலைமையிலான நிர்வாகிகள் பாலகுமார் சூர்யா விஷால் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட அவரது ரசிகர்கள் திரைப்படத்தை வரவேற்று உற்சாகமடைந்தனர்.
12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு தற்போது வரை திரையிடப்படாமல் இன்று வெளியாகி உள்ள இந்த மதகஜராஜா திரைப்படம் தற்பொழுது எடுத்ததைப் போல் உள்ளது என்றும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் தயாராகியுள்ளது என்று தெரிவித்தார் விஷால் மக்கள் நல இயக்க தலைவர் சாமிதுரை.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற வேண்டி விஷால் மக்கள் நல இயக்கத்தினர் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் விசேஷ பூஜை.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற வேண்டி விஷால் மக்கள் நல இயக்கத்தினர் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் விசேஷ பூஜை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற வேண்டி விஷால் மக்கள் நல இயக்கத்தினர் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் விசேஷ பூஜை. 

தமிழகத் திரை உலகின் முன்னணி நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளருமான விஷால் வைரல் தொற்று காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் அவர் 14 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜ யானை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் நான் நிற்க கூட முடியாமல் உடல் பலவீனமாகவும் கைகள் மிகுந்த நடுக்கத்துடனும் காணப்பட்டது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விஷால் வைரல் தொற்று காரணமாக அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நன்கு ஓய்வெடுத்தால் பூரண குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
என்றாலும் நடிகர் விஷால் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் வெள்ளித் துறையில் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் அருள்மிகு சேலம் ஸ்ரீ கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. விஷால் மக்கள் நல இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சாமிதுரை தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜை இயக்க நிர்வாகிகள் பாலகுமார் சூர்யா விஷால் மற்றும் கலீல் கலந்து கொண்டனர். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.