வெள்ளி, 2 மே, 2025

ஈரோட்டில் வரும் மே.4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை!

ஈரோட்டில் வரும் மே.4ம் தேதி அங்கக விளை பொருட்களுக்கான வேளாண் சந்தை!

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில் அங்கக வேளாண் சந்தை வரும் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.

அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்கள், மஞ்சள் தூள், எண்ணெய் வகைகள், போன்றவை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட உள்ளது.

எனவே, அங்கக சான்று பெற்று விளைவித்த வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளும், நஞ்சு இல்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை வாங்கிட விரும்பும் நுகர்வோர்கள் அங்கக வேளாண் சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த அங்கக வேளாண் சந்தையில் பங்கு பெற்று விளைபொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:

1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னி மலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்ல டம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு வெட்கமாக இல்லையா?.

தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இந்த கொலை- கொள்ளையில் தொடர்பு உள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமை யான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளி வந்து, சட்டம்-ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை!

ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதியை கொலை செய்து 12 பவுன் நகை கொள்ளை!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலிகொடி, 5 பவுன் வலையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.

ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.

இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடைகாலத்தை ஒட்டி சேலத்தில் துவங்கிய மெகா பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025.

கோடைகாலத்தை ஒட்டி சேலத்தில் துவங்கிய மெகா பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

கோடைகாலத்தை ஒட்டி சேலத்தில் துவங்கிய மெகா பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025. 

அடிநிலா ஈவன்ட் மீடியா நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நிறுவன பங்களிப்புடன் சேலத்தில் 2-வது மிகப்பெரிய அளவிலான பிசினஸ் மற்றும் ஹோம் எக்ஸ்போ 2025 இன்று துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மெகா எக்ஸ்போ சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் துவக்கப்பட்டுள்ளது. மிக  பிரம்மாண்டமான முறையில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 80-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பிசினஸ் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் உட்பட அனைத்து விதமான பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது பார்வையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. 
இலவச அனுமதியுடன் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த மெகா எக்ஸ்போ நிகழ்வினை சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தற்போது சூழலில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ள பொது மக்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வரும்போது ஏமாற்றம் என்பது மட்டுமே நிதர்சனமாக உள்ள நிலையில் இந்த எக்ஸ்போவில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை நேரில் பார்த்து அதனை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் அடிநிலா ஈவென்ட் மீடியா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சங்கர். அப்போது நிர்வாகிகள் ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

வியாழன், 1 மே, 2025

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி: சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா தீவிர சோதனை!

பவானி அடுத்த சித்தோடு அருகே சாராயம் காய்ச்சும் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று தீவிர சோதனை மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் கோபி மதுவிலக்கு போலீசார் நரிப்பள்ளம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? எனவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், சாராயம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீதும், அதே போல் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

அப்போது அவருடன் கோபி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார், காவல் ஆய்வாளர்கள் ரவி, முருகையன், கோமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

புதன், 30 ஏப்ரல், 2025

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்.. போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!


ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்..! போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்ததால் பரபரப்பு...!

ஈரோட்டில், ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை, இரண்டு கார்களில் வந்த கும்பல் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றதாக அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அழுது புரண்டு கதறிய நிலையில், கோடிக்கணக்கில் அவர் பண மோசடி செய்ததாக காரில் ஏற்றிச்சென்றவர்கள் காவல் நிலையத்தில்   ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது. 

ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூபைர் அகமது.. இவர் , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பனை செய்யும் தரகராகவும் மற்றும் கறி கடையும் நடத்தி வருகிறார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் இருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.கடத்திச் செல்லப்பட்ட ஜூபையரை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு அவரை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே, கடத்தல் புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜூபைர், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த்தாகவும், அவரை தேடி வந்தவர்கள் ஜூபைரை அழைத்து கொண்டு கருங்கல்பாளையம் காவல் நிலையம் சென்றது தெரியவந்தது. ஆனால், அதற்குள் ஜூபைர் கடத்தப்பட்டதாக  எஸ்.பி அலுவலகத்தில் அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்த உறவினர்களை போலீசார் அங்கிருந்து கருங்கல்பாளையம் காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். 


கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜூபைர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் என பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் ஜமாத் நிர்வாகிகளிடம் அறிமுகமாகி, போலியான தகவல்களை அளித்து உடல்நலம் பாதித்தவர்களுக்கு உதவுமாறு லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும், கண்டெய்னரில் வரும் பழைய இருப்புகளை வாங்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் கூடுதலான லாபம் தருவதாகவும் கூறி ஜூபைர் கோடிக்கணக்கில் பலரிடம் பணம் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இது்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான போராட்ட காட்சியை, சமூக வலை தளத்தில் ஜூபைர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஈரோட்டில் இருப்பதை அறிந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா தென்னிந்திய அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி சேலத்தில். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய அளவிலான ஆணழகன்  போட்டி சேலம் நேரு கலையரங்கில் வருகிற மே 17 மற்றும் 18-ம் தேதி ஆகிய 2  நாட்கள் நடைபெறுகிறது.
 இந்த போட்டியை இந்தியன் பாடி பில்டர் பெடரேஷன் ,தமிழ்நாடு அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன், சேலம் மாவட்ட அமைச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் ஆகியோர் இணைந்து நடத்துகிறார்கள்.  இந்த போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த 350 பேர் பங்கேற்கிறார்கள். 13 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5  இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு தலா 10,000 7,000 5,000 3,000 2,000 என ரொக்க பரிசு ,மெடல் ,  சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. 
மேலும் இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் , இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 50,000  மூன்றாம் இடம் பிடிக்கும் வீரருக்கு 25 ஆயிரம் மற்றும் அனைவருக்கும்  பதக்கம் சான்றிதழ் பட்டயமும் வழங்கப்படுகிறது. இறுதி போட்டியில்  வெற்றிபெறும்  சேலம் மாவட்டத்தைச்  சேர்ந்த வீரருக்கு  ரூபாய் 25,000 பணம் எல் இ டி டிவி, சீல்டுபதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சுரேஷ்குமார் சிறப்பு பரிசாக வழங்குகிறார். இந்த போட்டி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது
 சேலம் பாராளுமன்ற தொகுதி எம்.பி. டி.எம். செல்வகணபதி, சேலம் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு, தலைவர் பாஸ்கர் ,செயலாளர் பாலமுருகன் ,சேலம் மாவட்ட செயலாளர் மயில்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.