சனி, 3 மே, 2025

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி காசியூர் ரோடு, சந்தை கடை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 47). இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வருகிறார். இதனால், அவர் வீட்டிலேயே பந்தல் போடும் சாமான்களை வைத்திருந்தார்.
இவரது வீட்டின் அருகே சந்தை கடையில் ஊசி பாசி விற்பனை செய்பவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் நேற்று இரவு சாப்பாடு செய்து விட்டு அடுப்பில் தீயை அணைத்து உள்ளனர். எனினும், தீ சரியாக அணையாததால் அதிலிருந்த தீப்பொறி வடிவேல் வீட்டின் மீது பட்டு சிறிது நேரத்தில் வீடு தீ பிடித்துள்ளது. 

வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் வெளியே இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரம் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!

ஈரோடு: சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை; வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினரை கணக்கெடுக்கும் போலீசார்!

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, சிவகிரி போலீசார் நடத்தியம முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்பி சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இச்சம்பவத்தை தொடர்ந்து பெருந்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனியாக வசிக்கும் வயதானவர்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் மயோனைஸ் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

ஈரோட்டில் மயோனைஸ் தடை குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

தமிழகத்தில் பரவலாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையில் செய்த மயோனைஸ் உணவை அனைவரும் விரும்பி உண்கின்றனர். முக்கியமாக குழந்தைகள் இதனை விரும்பி உண்பதால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓராண்டுக்கு பச்சை முட்டையில் இருந்து மயோனைஸ் தயாரிக்கவும், இருப்பு வைக்கவும் விநியோகிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உத்தரவின் பேரில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள் மற்றும் அசைவ உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது, தடை விதிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அதை நுகர்வோர், வணிகர்கள் தவிர்க்க வேண்டும்.

கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும், சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைசிலும் சேர்ந்துவிடும் என்பதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்கு தடை செய்துள்ளது. இத்தடை ஆணையானது, கடந்த 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

உணவு வணிகர்கள், கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மயோனைசை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மயோனைசை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

அரசு உத்தரவை மீறி தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப் பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்பு துறையினரின் கள ஆய்வின் போது இது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பிறகு உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். உடல் நலனை பேணி காக்க ஏதுவாக, நுகர்வோரும் இதனை தவிர்க்க வேண்டும்.

எனினும் மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப் பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும்.

அவற்றை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடை ஏதுமில்லை. அவை நுகர்வோரின் உடல்நிலைக்கு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். மேலும், தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்த அறிவிப்பிற்கிணங்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு பதிலாக மறுசுழற்சித் தன்மை உள்ள மக்கும் பொருள்களை உபயோகப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டது. 

குடிநீர் தரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சரிவிகித உணவு தொடர்பான விளக்கங்களும் சமூக ஊடகங்களில் சரிவிகித உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் அரசின் மறு சுழற்சி பயோ டீசலாக மாற்றும் திட்டத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வழங்க தெரிவிக்கப்பட்டது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரிபேக் விலை பயன்படுத்தாமல் இருக்கவும் உணவுப் பொருள்களை பாலித்தீன் பைகளில் கட்டி விற்பனை செய்யாமல் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

செய்தித்தாள்களின் மீது உணவு பொருட்களை வைத்திருக்கக் கூடாது, மற்றும் செய்தித்தாள்களில் உணவை பரிமாற கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், நுகர்வோர் ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது டிஎன்எப்எஸ்டி என்ற செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

17-அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாடு தலைவிய அளவில் போராட்டம். சேலத்தில் நடைபெற்ற HMS கூட்டத்தில் முடிவு.

மதிய அரசின்  தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது தொடர்பான ஹிந்த் மஸ்தூர் சபா தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. ஹிந்த் மஸ்தூர் சபாவின் மாநில தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஹெச் எம் எஸ் செயல் தலைவர் சுப்பிரமணி பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் கணேசன் மாநில செயலாளர் கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தன. கூட்டத்தில் ஹெச் எம் எஸ் மாநில பொதுச் செயலாளரும், தேசிய தலைவருமான ராஜா ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இந்திய சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது, இந்தியாவில் நடைபெறும் இது போன்ற தீவிரவாத சம்பவத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் தீவிரவாதத்தை பயன்படுத்தி மத வெறியை தூண்டும் மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்பதோடு மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அகில இந்திய தலைவருமான ராஜா ஸ்ரீதர் கூறுகையில்,  தொடர்ச்சியாக தொழிலாளர்களின் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே இருபதாம் தேதி நாடுதளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நாடு தழுவிய போராட்டம் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

வெள்ளி, 2 மே, 2025

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையத்தை சுற்றியுள்ள கரளயம், ஏலஞ்சி, காடகநல்லி, எக்கத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திப்பநாயக்கனூர் எக்கத்தூர் பள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வழியில் சர்க்கரை பள்ளம், குறும்பூர் பள்ளங்களிலும் மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் காடகநல்லி எக்கத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக "ஆரேதள்ளம்" பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து மாக்கம்பாளையம் - கோம்பையூர் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால் மாக்கம்பாளையம் கோம்பைதொட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.4ம் தேதி) 12 மையங்களில் நீட் தேர்வு: 4,162 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்!

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அமைப்பு சார்பில் நீட் தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 21 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எதிர்கொள்ளவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 4,162 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நாளை (மே.4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி என 12 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான மேதின பேரணி...

ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான மேதின பேரணி...

பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட மே தின பேரணி ...

தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் நாடு தோறும் மே தினம் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில்  முனியப்பன், ரங்கநாதன் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது.

இப்பேரணியானது, ஈரோடு சிக்கயநாயக்கர் அரசு கல்லூரியில் இருந்து துவங்கி வீரப்பன்சத்திரம், பேருந்து நிலையம், சத்தி சாலை, மணிக்கூண்டு, வழியாக வந்து இறுதியாக ஈஸ்வரன் கோவில் அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியை பாமக மத்திய மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ராஜு கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பேண்ட் வாதிய இசைக்களுக்கு ஏற்ப உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் அசைவ உணவு வழங்கப்பட்டது.

இப்பேரணியில் மாநகர் மாவட்டத் தலைவர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எல் பரமசிவம், எம்பி வெங்கடாசலம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் அய்யம்மாள், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, முருகன் கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.