நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்து 18 நாட்கள் ஆகியும் அமல்படுத்தாத தமிழக அரசு. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை.
தமிழக விவசாயிகளை பொருத்தவரை அவர்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தாலும் கூட, பால் மற்றும் எருமை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றே. பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வை அறிவித்தார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியும் தற்போது வரை விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தமிழக விவசாயிகளின் குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு. பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதாகவும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்பது பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு ஒன்றிய அதிகாரிகளின் தகவலாக உள்ளது. ஆவின் ஒன்றியத்திற்கு பால் கொடுக்காமல் வெளியே சென்ற விவசாயிகளையும் மீண்டும் அழைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் தமிழகத்தில் தற்போது ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு விவசாயிகளாக ஆவின் ஒன்றியத்திற்கு பால் வழங்காமல் தனியாருக்கு பால் வினியோகித்தால் எதிர்காலத்தில் ஆவின் நிறுவனம் என்று ஒன்று இருந்ததே அழிந்து விடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக விவசாயிகளின் கனவு திட்டமான பால் கொள்முதல் விலை உயர்வு என்பதனை 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது அறிவிப்பாகவே மட்டும் இல்லாமல் இதனை உடனடியாக செயல்படுத்த தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்கவில்லை என்பதால் தனியாருக்கு பால் உற்பத்தியாளர்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழுவை அமைத்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்தை அதிகரிக்கவும், ஆவின் நிறுவனத்தை லாபகரமாக நடத்திடவும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் நிறுவனமும் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பால்வளத்துறை மூலமாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் இருப்பு வைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பொருத்தவரை உரிய நேரத்தில் உரிய காலகட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை அறிவித்து இருந்திருந்தால் இதுபோன்று பால் தட்டுப்பாடு வந்து இருக்காது. விவசாயிகளிடம் கலந்து பேசி பால் கொள்முதல் விலை உயர்வை உயர்த்தாததால் தான் இந்த தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் தற்பொழுது நிலவுகிறது என்றும் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை எங்கு லாபம் கிடைக்கிறது அங்குதான் செல்வார்கள் என்றும் அரசு தான் இதற்கு முழு முதற் காரணம் என்றும் தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல என்றும் தனது செய்தி குறிப்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.


