ஞாயிறு, 9 ஜூன், 2024

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 44,790 பேர் பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 44,790 பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம்பாளையம் கார்மல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 9 வட்டங்களில் 194 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பதவிகளுக்கான தேர்வினை எழுத 57 ஆயிரத்து 218 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 44 ஆயிரத்து 790 (78.28 சதவீதம்) பேர் பங்கேற்பு தேர்வு எழுதினர். 12 ஆயிரத்து 248 (21.72 சதவீதம்) பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இத்தேர்வினை கண்காணிக்க 9 வட்டங்களிலும் துணை ஆட்சியர் நிலையில் 9 கண்காணிப்பு அலுவலர்களும், 15 பறக்கும்படை அலுவலர்களும், 45 நடமாடும் குழுவும், 194 ஒளிப்பதிவாளர்களும், தலைமையாசிரியர், முதல்வர் நிலையில் 194 முதன்மை அறை கண்காணிப்பாளர்களும், உதவியாளர், இளநிலை உதவியாளர் நிலையில் 194 அறை கண்காணிப்பு அலுவலர்களும், மேலும் காவல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினரும் ஈடுபட்டனர்.

இத்தேர்விற்காக ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து, இயக்கப்பட்டது. மேலும், தேர்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனத் தெரிவித்தார்.
சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருட்கள் கொள்ளை

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருட்கள் கொள்ளை

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சுமதி (வயது 50). கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மாது உயிரிழந்து விட்டார். இந்தநிலையில், தனது மூத்த மகள் மஞ்சு, மருமகன் சுரேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். 
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனது தாயாரை பார்க்கச் சென்றார். பின்னர், மகள், பேரனுடன் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6.50 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும், வெள்ளி கொலுசு, அரைஞான், வீட்டில் வைத்திருந்த 3 பித்தளை குடங்களையும் காணவில்லை. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.

இதுகுறித்து. சித்தோடு போலீசில் சுமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனி, 8 ஜூன், 2024

பெருந்துறை அருகே வடமாநில வாலிபரை தாக்கி இருசக்கர வாகனம், செல்போன் பறித்த மூவர் கைது

பெருந்துறை அருகே வடமாநில வாலிபரை தாக்கி இருசக்கர வாகனம், செல்போன் பறித்த மூவர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் லோக்நாத் (வயது 26). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வீடு வாடகைக்கு எடுத்து, சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிரிண்டிங் ஹெல்பராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நண்பர் பஜன் என்பவருடன் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள பாலிக்காட்டூர் - வரப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர், முகவரி கேட்பது போல் கையை அசைத்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த லோக்நாத் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது 3 பேரும் சேர்ந்து லோக்நாத் மற்றும் அவருடன் வந்த பஜன் ஆகிய 2 பேரையும் திடீரென தாக்கியதுடன், லோக்நாத்தை பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து லோக்நாத் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம், செல்போனை பறித்து சென்ற 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று விஜயமங்கலம் மேட்டுப்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் சதீஸ் (வயது 24), திருப்பூர் மாவட்டம் மேட்டுக்கடை, தளவாய்பாளையத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் முத்துஎழில் பார்த்திபன் (வயது 26), திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கஸ்தூரிபாளையம் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (வயது 25) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து லோக்நாத்தை தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தாளவாடி மலைக்கிராமத்தில் வாந்தி, பேதியால் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழப்பு

தாளவாடி மலைக்கிராமத்தில் வாந்தி, பேதியால் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக்கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்தநிலையில், கடந்த மாதம் 24ம் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (வயது 40), தடசலட்டி கிராமத்தில் கவுரியம்மாள் (வயது 65), ரங்கன் (வயது 75), மாதி (வயது 85) ஆகிய 4 பேர் திடீரென வாந்தி, பேதியால் உயிரிழந்தனர்.

அதைத் தொடந்து கடந்த 5ம் தேதி மாரே (வயது 67), என்பவரும், இட்டரை கிராமத்தில் நேற்று கேலன் (வயது 60) என்பவரும் உயிரிழந்தார். தொடர்ந்து, 13 நாட்களில் 6 பேர் உயிரிழந்ததால் மலைக்கிராம மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று மருத்துவக்குழுவினர் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களை வீடுகளுக்கே தேடிச்சென்று பார்த்து சிகிச்சை அளித்தனர். அப்போது உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இதில், மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் குளோரின் கலந்துள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும் வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

இதனிடையில், தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தாளவாடி மலைக் கிராமத்தில் குட்டை நீரை குடிநீராக பயன்படுத்தியதால் வாந்தி , பேதி ஏற்பட்டு 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

அந்தியூரில் வாகன உதிரி பாக கடையில் ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் அந்தியூரில் உள்ள பவானி ரோட்டில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கார்த்திகேயன் நேற்று முன்தினம் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் வந்து கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது மேஜையின் டிராயர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே பார்த்தபோது அதிலிருந்த ரூ. 1 லட்சத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற பிறகு மர்மநபர்கள் கள்ளச்சாவியை போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் மேஜை டிராயரை உடைத்து திறந்து அதிலிருந்த ரூ.1 லட்சத்தை திருடிக்கொண்டு கதவை பூட்டிவிட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை ஆய்வு செய்து வருகின்றனர்.
10ம் தேதி முதல் மக்கள் குறைதீர், இதர குறைதீர் முகாம்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

10ம் தேதி முதல் மக்கள் குறைதீர், இதர குறைதீர் முகாம்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதின்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

தற்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த 6ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வரும் 10ம் தேதி (நாளை மறுநாள்) முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் அனைத்து குறைத்தீர்க்கும் கூட்டங்களும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வண்ணங்களை வைத்து 195 நாடுகளின் பெயர்களை கூறி அசத்தும் நான்கு வயது குழந்தை

வண்ணங்களை வைத்து 195 நாடுகளின் பெயர்களை கூறி அசத்தும் நான்கு வயது குழந்தை

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வண்ணத்தை வைத்து 195 நாடுகளில் பெயரை கூறி அசத்தும் நான்கு வயது சிறுமி...
ஐந்து நிமிடத்தில் 50 திருக்குறள் கூறியும், ஐந்துக்கும் மேற்பட்ட பாரதியார் பாடலை பாடி அசத்தும் நான்கு வயது குட்டி குழந்தை...

சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள 
பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் கீதாலட்சுமி தம்பதியர். விஜயகுமார் ஏசி மெக்கானிக் தொழில் செய்து வருகிறார் இவர்களின் 
பெண் குழந்தை ரக்ஷிதா ஸ்ரீ அப்பகுதியில் உள்ள குயின் பிளவர் மழலையர் பள்ளியில்
 நான்கு வயது எல்கேஜி படித்து வருகிறார். இந்த குழந்தைக்கு மூன்று வயது நினைவாற்றல் அதிகம் உள்ளதால்பல்வேறு நாடுகளில் பெயர் மற்றும் கொடியின் வண்ணத்தை வைத்து நாட்டின் பெயரை கூறி வந்தார். இதை கவனித்த பள்ளியின் தாளாளர் பாண்டிச்சேரி குழந்தை ரக்ஷிதாவிற்க்கு நினைவாற்றும் திறனை அதிகப்படுத்தும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தற்பொழுது 4 வயதாகும் ரக்ஷிதா ஸ்ரீ வண்ணங்களை வைத்து 195 நாடுகளில் பெயரை அதிவேகமாக கூறுகிறார்.
மேலும் ஐந்து நிமிடத்தில் 50 திருக்குறளையும் ஒப்புவிக்கிறார். அதற்கெல்லாம் ஒரு படிமேல் மகாகவி பாரதியாரின் ஐந்து பாடல்களை இடைவிடாமல் பாடி அசத்தி வருகிறார். இந்த அதீத திறமையால் சிறுமி தன் நான்கு வயதிலேயே இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார் மேலும் பல்வேறு உலக சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார் இந்த நிலையில் தான் ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும் இந்த நான்கு வயது சிறுமி பங்கேற்க உள்ளார்.
சிறுமியின் இந்த நினைவாற்றல் அந்த பகுதி மக்களிடையே அவர்களின்  வியப்பை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு நன்றாக படித்து தமிழகத்தில் முதல்வராக வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கில் ஆட்சி புரிய வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாக தெரிவித்துள்ளார்.