ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் கர்நாடக மாநிலம் கொல்லேகால் செல்லும் சாலையில் பர்கூர் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சர்க்கரை மூட்டைகள் ஏற்பட்டப்பட்டு இருந்தன.
மேலும், சர்க்கரை மூட்டைகளுக்கு இடையே சந்தேகப்படும் வகையில் சில மூட்டைகள் இருந்தன. உடனே போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
மொத்தம் 129 மூட்டைகளில் 1,220 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் மினி லாரி டிரைவரிடமும், உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில், மினி லாரியை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 31), உடன் வந்தவர் மினி லாரி உரிமையாளரான ஸ்ரீநாத் (வயது 31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இருவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலத்துக்கு விற்பனைக்காக புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீ சார் விக்னேஷ்வரன், ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் கைது செய்து, புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


