வியாழன், 9 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் (ஜன.15) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய தினங்களை முன்னிட்டு மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜன.15 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், எப்எல்2 கிளப்கள் மற்றும் எப்எல்3 ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற பிப்.5ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. அதன்படி, ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஜன.9) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும், வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ.என் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் ஓட்டுச் சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஓட்டுக்களை தபால் மூலம் செலுத்தலாம்.

இதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களுக்கு வரும் ஜன.15ம் தேதிக்கு முன் இதற்கான படிவம் 12டி வழங்கி ஒப்புதல் பெற உள்ளனர்.

சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில், இரண்டாவது முறை நேரில் சென்று வழங்கி ஒப்புதல் பெறுவார்கள். இதன், பின்னர் இவ்வாக்காளர்கள் வீட்டிலிருந்தவாறே வாக்களிக்க ஏதுவாக வாக்காளரின் குடியிருப்பு பகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை தரும் நாள் மற்றும் நேரம் குறித்து, வெகு முன்னராகவே 12டி படிவத்தில் வாக்காளர் தெரிவித்த அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அலைபேசி எண் குறிப்பிடாதவர்களுக்கு அஞ்சல் மூலமாக அல்லது சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். அவ்வாறு குறிப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் குழு வாக்காளர் வீட்டுக்குச் சென்று வாக்காளர் அடையாளத்தை சரிபார்த்து, அவ்விபரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பம், கைரேகை பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி அஞ்சல் வாக்குச்சீட்டினை வழங்குவார்கள்.

வாக்காளர் கண் பார்வையற்று அல்லது உடல் நலிவு காரணமாக வாக்களிக்க இயலாத நிலையிலிருப்பின் அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, வாக்களிப்பு குறித்து ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் முறை வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் செல்லும் போது, அவர் அங்கு இல்லை என்றால், இரண்டாவது வருகை குறித்து தகவல் அளித்து வாக்கச்சாவடி நிலை அலுவலர், வாக்காளரின் அஞ்சல் வாக்குப்பதிவினை பெற வருவார். அதுசமயமும் வாக்காளர் வீட்டில் இல்லை எனில், இதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, அவர்கள் மாற்றுத்திளனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகலினை அளிக்க வேண்டும். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதுமிருப்பின் 0424-2251617 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 8 ஜனவரி, 2025

தமிழர் திருநாளான கைத்திருவிழாவையொட்டி பொங்கல் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி மகிழ்ந்த வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர்.

தமிழர் திருநாளான கைத்திருவிழாவையொட்டி பொங்கல் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி மகிழ்ந்த வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழர் திருநாளான கைத்திருவிழாவையொட்டி பொங்கல் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி மகிழ்ந்த வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர். 

ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதன் அடிப்படையில் நடைபாண்டிற்கான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் மூலமாக இலவச வேட்டி செயல்களுடன் கூடிய கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. 
அதன் அடிப்படையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளரும், அட்மா  குழு தலைவருமான  திருமதி.S.வெண்ணிலா சேகர் அவர்கள் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி நியாய விலைக்கடையில் கலந்து கொண்டார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளுடன் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பினை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில்  முன்னால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கிருத்திகராஜா, கிளை கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவிற்காக  பத்தாம் ஆண்டாக முருக பக்தர்கள்  காவடி தூக்கி பழனிக்கு பாதயாத்திரை புறப்பாடு.தமிழ்க்கடவுளான

சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவிற்காக பத்தாம் ஆண்டாக முருக பக்தர்கள் காவடி தூக்கி பழனிக்கு பாதயாத்திரை புறப்பாடு.தமிழ்க்கடவுளான

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவிற்காக  பத்தாம் ஆண்டாக முருக பக்தர்கள்  காவடி தூக்கி பழனிக்கு பாதயாத்திரை புறப்பாடு.

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு தை மாதம் பங்குனி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இது போன்ற காலங்களில் பக்தர்கள் விரதமிருந்து பால் கவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்று எம்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் வரும் தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாநகரம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மலை பாதயாத்திரை நண்பர்கள் குழு சார்பில் பத்தாவது ஆண்டாக தைப்பூச திருவிழாவிற்காக பழனிக்கு பாதயாத்திரையாக 1000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் காவடி தூக்கியவாறு  முருகன் வள்ளி தேவயானி வேடமடைந்து பள்ளப்பட்டி  ராஜரிஷி ஆசிரமத்தில்  அமைந்துள்ள சேலம் ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பழனிக்கு  ஊர்வலமாக பாதயாத்திரை மேற்கொண்டனர். 
முன்னதாக ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு இன்று காலை முதலே பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு எம்பெருமானுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் முருகன் வள்ளி தேவயானி வேடமடைந்து சென்றது பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பாதயாத்திரை மேற்கொண்ட முருக பக்தர்கள் ஆயிரம்  பேருக்கு ராஜரிஷி ஆசிரமத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது
இந்த பாதை யாத்திரை பயணத்தை சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள சேலம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆசிரம நிறுவன ராஜரிஷி பாபு பாதயாத்திர துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணி, வாசுகி, வசியா விக்ரம் அருண் யோகேஷ் மற்றும் சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி.?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி.?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச.14ம் தேதி காலமானார். 
பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். பிப். 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ஈரோடு மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்ஜிகே என்கிற ஜி.கார்த்திக் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை நிர்வாகிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன? மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் என்னென்ன? மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.8) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலக கூட்டரங்கில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற பிப்.5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற ஜன.10, 13 மற்றும் 17 ஆகிய தினங்களில் நடைபெறும். பெறப்பட்ட வேட்புமனுக்களின் மீது ஜன.18ம் தேதி பரிசீலனை நடைபெறும்.

ஜன.20ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி ஆகும். பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பிப்.8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகமான மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான ஈரோடு மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு புகார்களை அளிக்கலாம். இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி முதற்கட்டமாக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமயம், மொழி, சாதி ஆகியவற்றை தூண்டி வாக்கு சேகரிக்க கூடாது. மத வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. அரசியல் கட்சி கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் இருக்க கூடாது. ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். ஒலிபெருக்கியினை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த கூடாது. அரசியல் கட்சி கூட்டங்கள் மற்றும் வாக்கு சேகரிக்கும் பணியில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது.

தேர்தல் செலவினங்கனை சமர்பிக்க வேட்பாளர்கள் தனியாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள வேட்பாளர்கள் தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள காலக்கெடு அளவில் 3 முறை விளம்பரம் வழங்க வேண்டும். முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கலின் போது குடியிருந்த அரசு குடியிருப்புகளுக்கான கட்டண நிலுவை தொகை இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது 100 மீட்டருக்குள் 3 வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர்களுடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடிவு வந்த 30 நாட்களுக்குள் தேர்தல் கணக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான மரு.மனிஷ். என், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, பிரேமலதா (நிலம்), துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாசம், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.