திங்கள், 10 ஜூன், 2024

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்

ஈரோட்டில் மாணவர்களை ஆரத்தி எடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பழைய மற்றும் புதிய மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு காலை முதலே புறப்பட்டு சென்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மாதிரி பள்ளியில் இன்று பள்ளிக்கு வரும் மாணவிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு வளைவு தனியாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக இன்று பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மேளம், தாளம் முழங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை வரவேற்றனர். மேலும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அவர்களை பள்ளிக்கு வரவேற்றனர்.

இதனையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. 
நீட் தேர்வு தேவையா என்று மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய தமாகா இளைஞரணி கோரிக்கை

நீட் தேர்வு தேவையா என்று மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய தமாகா இளைஞரணி கோரிக்கை

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. அந்த தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேசிய அளவில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 13.16 லட்சம் பேரை தகுதி உள்ளவர்களாக அறிவித்ததன் நோக்கம் என்ன? நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. தற்போது தேர்வு முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் கருணை மதிப்பெண் குளறுபடிகளையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி உறுதிசெய்யப்பட்டுளதாவே தெரிகிறது.

மனித தேவையில் மிக உன்னதமான பணிகளில் முன்னிலையில் இருப்பது மருத்துவ சேவை. உயிர் காக்கும் பணியான மருத்துவப் பணிக்கு தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த தகுதியை நிர்ணயம் செய்யும் தகுதித் தேர்வுகள் தகுதியாக நடத்தப்படுகிறதா? என்பது இப்பொழுது நாடு முழுவதும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை முழுமையாக இல்லாமல் போகும் வகையில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு குழப்ப நிலையிலேயே தொடர்கிறது. தேர்வு நடக்கும் போதே வட இந்திய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானது முதல் தேர்வு முடிவுகள் வெளியானது வரை இந்த தேர்வு குறித்த சந்தேகங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு தேவையில்லை என்பது எங்களது நிலைப்பாடு.

ஆனாலும் தகுதியான மாணவ மாணவியர்களுக்கு சரியான முறையில் அதிக பணம் செலவிடாமல் மருத்துவ படிப்பு இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே நீட் தேர்வு புகுத்தப்பட்டது. ஆனால் அது சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்பது இதுவரை வெளிவந்த தகவல்கள் அதை உறுதி செய்கிறது. எனவே நீட் தேர்வு தேவையா? என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தேவையானவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகின்ற மாநிலங்கள் அவரவர் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கைகளை நடத்தவும் அதில் முறைகேடு இல்லாமல் தடுக்கவும் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் ஆண்டுதோறும் நடைபெறும் குளறுபடிகளாலும், அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறான நடவடிக்கையாலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்க வழிவகை செய்தார்கள்.

அதுபோல அந்தந்த மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் கல்விக் கொள்கைக்கு ஏற்ப இந்த திட்டங்களை வகுத்து மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கும் உரிய வழிமுறைகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், இந்த குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தவறுகள் சரி செய்யப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 2 மாதத்துக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம்: 215 மனுக்கள் மீது நடவடிக்கை

ஈரோட்டில் 2 மாதத்துக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம்: 215 மனுக்கள் மீது நடவடிக்கை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும். நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததன் காரணமாக கடந்த 2 மாதத்துக்குக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று (ஜூன்.10) திங்கட்கிழமை ஈரோடு அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் தாட்கோ மூலம் ஒரு தற்காலிக துப்புரவு பணியாளரின் வாரிசுதாரருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையினையும், 2 துப்புரவு பணியாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக தலா ரூ. 6 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு மாதிரி பள்ளியைச் சேர்ந்த மாணவன் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வு 2024-ல் 39 மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட மேலாளர் அர்ஜூன், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்ச்சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாரசியம்.

சேலத்தில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சாலை அணிவித்து வரவேற்கும் நிகழ்ச்சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் சுவாரசியம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வாய்க்கால் பட்டறை அரசு உயர்நிலை பள்ளியில் பிரஷர்ஸ் டே புதிதாக முதல் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவிகளே வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த விழாவில் குழந்தைகள் முதல் மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும்,  ரோஜாக்கள் மற்றும் சாக்லேட் கொடுத்தும் வரவேற்றனர். 
நிகழ்ச்சியில் வாய்க்கால்பட்டறை மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி,  செயலாளர் லோக முத்து மற்றும் வழக்கறிஞரும் சேலம் மாமன்ற  திமுக உறுப்பினருமான  தெய்வலிங்கம், 
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகாந்த் பிரசாத்,  லோகமுத்து செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் பிரெஷர்ஸ் டே... புதிதாக சேமிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து சாக்லேட்டுகள் கொடுத்து வரவேற்பு....

சேலத்தில் பிரெஷர்ஸ் டே... புதிதாக சேமிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கிரீடம் அணிவித்து சாக்லேட்டுகள் கொடுத்து வரவேற்பு....

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் நாராயண நகர் பகுதியில் 76 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் பிரஷர்ஸ் டே புதிதாக முதல் வகுப்பு சேர்ந்த குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து ரோஜாக்கள் சாக்லேட் கொடுத்தும் வரவேற்றனர் முதல் வகுப்பு சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் பள்ளி சார்பாக டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர், கமிட்டி தலைவர் ராம்சந்த் கிங்கர், செயலாளர் ரமேஷ் லால் பதீஜா  மற்றும் பொருளாளர் தீபக் பதீஜா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை 100 என்ற எண்ணிக்கையை தாண்டி செல்வதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஞாயிறு, 9 ஜூன், 2024

அந்தியூர் அருகே பர்கூரில் பாறைகளுக்கு இடையே சிக்கிய ஆண் யானை

அந்தியூர் அருகே பர்கூரில் பாறைகளுக்கு இடையே சிக்கிய ஆண் யானை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை வனப்பகுதியில் உணவைத் தேடி ஆண் யானை ஒன்று உலவிக் கொண்டிருந்தது. அப்போது, மலைப்பகுதியில் இரண்டு பாறைகளுக்கு இடையே சென்றபோது, யானை அதில் சிக்கிக்கொண்டது. இதனால், அந்த யானை அதில் இருந்து நகர முடியாமல் நின்றது.

அதனைத் தொடர்ந்து, அந்த யானையின் சத்தத்தை கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து பார்த்தனர். அப்போது, யானை 2 பாறைகளுக்கு இடையே சிக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானை ஒரு வழியாக அந்த பாறையின் இடையில் இருந்து வெளியே வந்தது.

பின்னர், அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் நாளை (ஜூன்.10) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோட்டில் நாளை (ஜூன்.10) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்கம்பாளையம், மில்க்டெய்ரி மின்பாதைகளில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மேம்பாட்டு பணி நடக்கிறது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று ஈரோடு மின்பகிர்மான வட்ட நக ரிய செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு சி.எஸ்.நகர், சேரன்நகர், கணபதிநகர், வசந்தம் நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஈ.பி.பி.நகர், ஞானபுரம், ஊத்துக்காடு, மாமரத்துப்பாளையம், காவிரி நகர், சக்திநகர், அம்மன்நகர், சிவசக்திநகர், செந்தமிழ்நகர், எல்லப்பா ளையம், பெரியசேமூர், சின்னசேமூர், வேலன்நகர், எம்.ஜி.ஆர்.ஆர்.நகர், கள்ளஸ்கரடு.