செவ்வாய், 11 ஜூன், 2024

கொடிவேரி தடுப்பணைக்கு 2 மாதங்களில் 1.90 லட்சம் பேர் வருகை

கொடிவேரி தடுப்பணைக்கு 2 மாதங்களில் 1.90 லட்சம் பேர் வருகை

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கொடிவேரியில் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கொடிவேரி தடுப்பணை. இந்த தடுப்பணையில் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், அதனை ரசிப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
மேலும், இங்கு குளித்து மகிழ்வதோடு, அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் செய்தும், பூங்காவில் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் வகைகளை சாப்பிடவும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

கடந்த 2014 நவம்பர் முதல் தடுப்பணையில் குளிக்கவும், பூங்காவுக்கு செல்லவும், நீர்வளத்துறை சார்பில், ஒருவருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் , கோடை விடுமுறையால் கடந்த 60 நாட்களில் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணைக்கு வருகை தந்துள்ளனர். 

ஏப்ரல் மாதத்தில் 73 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேரும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு மொத்தம் 1.90 லட்சம் பேர் வருகை புரிந்ததால் ரூ.9 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானியில் 5.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது; கணவன், மனைவி தலைமறைவு

பவானியில் 5.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது; கணவன், மனைவி தலைமறைவு

ஈரோடு மாவட்டம் பவானியை அருகே செங்காடு முட்கள் நிறைந்த புதர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பவானி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பகவதியம்மாள் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இரு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணையில் நடத்தியதில் அவர்கள் பெயர், முகவரியை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து , போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விவேக் (எ) வெள்ளையன் (வயது 22), பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் குமரகுரு (எ) அமுல் (வயது 20) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, இவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இவர்கள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் ஊராட்சிக்கோட்டை, காவேரி வீதி, காமராஜ் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அங்கு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.600 கிலோ கஞ்சா, 5.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். 

மேலும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த பவானி சேர்ந்த விஜயகுமார் (எ) விஜயன், இவரது மனைவி பவித்ரா (எ) மகேஸ்வரி ஆகியோர் போலீசார் தேடி வருகின்றனர். 
குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவை பெருமைப்படுத்திய மத்திய தபால் துறை.

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவை பெருமைப்படுத்திய மத்திய தபால் துறை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவை பெருமைப்படுத்திய மத்திய தபால் துறை, பொன்விழா தபால் தலையை வெளியிட்டு வழக்கறிஞர்களை  கௌரவிப்பு.


சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழா ஆண்டு நிறைவை ஒட்டி பொன்விழா தபால் தலையை மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகம் வெளியிட்டது. 
அதன் வெளியீட்டு விழா இன்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் நடைபெற்றது செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
முதல் வில்லையை தபால் வில்லையை தமிழ்நாடு & புதுச்சேரி பார்கவுன்சில் இனைத் தலைவர் திரு.சரவணன் அவர்கள் வெளியிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் திரு.V.R.சந்திரசேகரன்,  K.M.ஜெயபால்,  ஜனார்த்தனன்,  சிவன்,  K.கோவிந்தராஜ் , மகிழன் திவ்யா,  தமயந்தி,  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முடிவில் பொருளாளர் கண்ணன் நன்றியுரை ஆற்றினார். 
JEE ADVANCED தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு..

JEE ADVANCED தேர்வில் சாதனை படைத்த ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

JEE ADVANCED தேர்வின் பொது பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்து மாணவ மாணவிகள் சாதனை. ஸ்ரீ சைதன்யா பள்ளியில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா. 
    
தேசிய தேர்வு முகமை ( NTA) JEE - ADVACED 2024 தேர்வு முடிவை 9.6.2024 அன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் இமாலய சாதனையை செய்துள்ளனர். JEE ADVANCED தேர்வின் பொது பிரிவில் முதல் 10 இடங்களை ஸ்ரீ சைதன்யா மாணவர்களே பெற்றுள்ளனர். அதன்படி ராகவ் ஷர்மா இந்த தேர்வில் தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மேலும் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் தேசிய அளவில் அபிநவ் 15வது ரேங்க், திலீப் குமார் 508வது ரேங்க், நிதின் 606வது ரேங்க், பெற்று மாணவர்கள் சாதனை புரிந்து IIT கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
JEE ADVANCED நீங்க அரிய சாதனையால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. 
JEE ADVANCED 2024ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமதி சுஷ்மா பொப்பண்ணா, செயல்பாட்டு தலைவர் ஹரிபாபு, துணை செயல்பாட்டு தலைவர் கிருஷ்ண ரெட்டி, பள்ளியின் டீன் திருமதி பூர்ணா ராவ், முதல்வர்கள் டாக்டர் தனசேகரன் மற்றும் மாலதி ராஜா, துணை முதல்வர் ஸ்ரீதர் மற்றும் கலைமணி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் JEE ADVANCED தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை பெற்றுள்ள மாணவர்களுக்கு  தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து சாதனை படைத்த மாணவ மாணவிகள் கூறுகையில், தேசிய அளவில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்து ஸ்ரீ சைதன்யா மாணாக்கர்களாகிய நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள், சாதனை படைக்க உறுதுணையாக இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனைப்படி, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும், இப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் துரிதப்படுத்துவது குறித்தும், புதிய திட்டப்பணிகளை தொடங்குவது குறித்தும், தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் வ.உ.சி பூங்கா, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படுத்துதல், ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட 9 புதிய திட்டங்களை அறிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளதால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையின்படி, சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஏறத்தாழ 10 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மொத்த காய்கறி கனிகள் மற்றும் மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படவுள்ளது.

இதனால், ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் பொதுமக்கள் வாங்கலாம். மாநகரப் பகுதிக்குள் கனரக போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் பெரும் அளவில் பயன் அடைவார்கள். இப்பணிகளை விரைவில் துவங்கி, முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி பூங்கா, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

ஈரோடு மாநகர மக்களின் நீண்ட நாளைய கனவின்படி, மேற்படி பூங்காவை உலக தரம் வாய்ந்த சுற்றுசூழல் பூங்காவாக அமைக்கும் பணி ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது ஈரோடு மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமைவதுடன் பசுமை புல்வெளிகளால் காற்று மாசுடைவது தடுக்கப்பட்டு சுற்றுசூழல் மேம்பாடு அடையும். இவ்வாறு பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னைசத்யா நகர் பகுதியில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவீரன் பொல்லான் நினைவிடம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறையின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிற்பூங்கா அமைப்பதற்கும் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை விரைந்து முடித்திடவும், மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் உரிய நடவடிக்ககை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அந்தியூர் வட்டம் அத்தாணி ஓடைமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கினார். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் துணை தாசில்தார், தாசில்தார் உட்பட பல்வேறு நிலை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலக கலைஞர் மகளிர் உதவித்தொகை தலைமை உதவியாளர் எம்.ஜமுனா ராணி ஈரோடு கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு கலால் உதவி ஆணையாளர் அலுவலக மேலாளராக பணியாற்றிய ஜி.பி.ஜாகிர் உசேன் நம்பியூர் தாசில்தாராக நியமிக்கப்பட் டார்.

நம்பியூர் தாசில்தார் அ.பொ.மாலதி ஈரோடு பெரியசேமூர் அலகு நகர நில வரித்திட்ட தனி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய தனி தாசில்தார் எஸ்.எஸ்.சக்திவேல் சத்தியமங்கலம் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் தாசில்தார் எஸ்.மாரிமுத்து தாளவாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும். இங்கு பணியாற்றிய என்.வெங்கடேஷ்வரன் கோபி குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) எஸ்.குமார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய ஏ.பானுமதி ஆட்சியர் அலுவலக அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தார் எஸ்.ஸ்ரீதர் கோபி டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்பாளர் கே.மகேந்திரன் பதவி உயர்வு பெற்று நம்பியூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த சி.சந்திரசேகர் மொடக்குறிச்சி தாசில்தாராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மொடக்குறிச்சி தாசில்தார் எம்.இளஞ்செழியன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின அலுவலக தனி தாசில்தாராக (நிலம் எடுப்பு) மாற்றப்பட்டார்.

இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கே.நாராயணன் பெருந்துறை தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இங்கு பணியாற்றி வந்த கே.நல்லசாமி பெருந்துறை தாலுகா மண்டல துணை தாசில்தாராக பணி மாறுதல் பெற்று உள்ளார். இங்கு பணியாற்றிய ஆர்.ஏ.கமலக்கண்ணன் ஈரோடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இங்கு பணியாற்றி வந்த செல்வம் ஈரோடு தாலுகா மண்டல துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

கோபி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் எம்.சந்திரன் நம்பியூர் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும். இங்கு பணியாற்றிய டி.ஆர்.விஜயகுமார் நம்பியூர் வட்ட வழங்கல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ப.கயல்விழி பதவி உயர்வு பெற்று கொடுமுடி தாலுகா தலைமையிட துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய ஆர்.சுபாஷினி கொடுமுடி வட்ட வழங்கல் அதிகாரியாகவும், இங்கு பணியாற்றிய வசந்த மனோகரி மொடக்குறிச்சி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய கே.லட் சுமி கோபி ஆர்.டி.ஓ. அலுவலக கலைஞர் மகளிர் உதவித்தொகை தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆட்சியர் அலுவலக ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர்.ரேவதி மொடக்குறிச்சி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய டி.மணிமேகலை கோபி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய என்.விஜயசாமுண்டீஸ்வரி கோபி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 10 ஜூன், 2024

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குருநாதபுரம் காலனியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் இன்று காலை குருநாதசுவாமி கோவில் வனம் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, அந்தியூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் ஆகியோர் மக்களிடம் சமரசம் செய்து, விரைந்து குடிநீர் வழங்கப்படும் என உறுதி கூறினர்.

இதனையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.