ஞாயிறு, 27 அக்டோபர், 2024

கோபி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு: பொதுமக்கள் பீதி

கோபி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு: பொதுமக்கள் பீதி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே உள்ள அயலூர் எல்லப்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 55). இவர் விவசாயம் செய்து வருவதோடு, 7 ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (27ம் தேதி) இரவு தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இன்று (28ம் தேதி) காலை சென்று பார்த்தபோது, ஆடுகள் அனைத்தும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தன.

மேலும், அருகில் உள்ள விஜயகுமார், பாப்பாத்தி ஆகியோரின் 2 ஆடுகளும் கழுத்துப் பகுதியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தது. இதனால், அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கும், கொளப்பலூர் கால்நடை மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து, இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை: வடமாநில தொழிலாளர்களிடம் விற்க 20 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

பெருந்துறை: வடமாநில தொழிலாளர்களிடம் விற்க 20 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருவாச்சி மணலாங்காட்டு தோட்டத்தில் பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இண்டிகா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 2 சாக்கு மூட்டைகளில் 20 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். 

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பவானி அருகே உள்ள புள்ளபாளையம் ஆலமரத்துவலசு செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற பாம்பாட்டி மணி (வயது 40) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் கஞ்சாவை காரில் வைத்து பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் போதைக்கு அடிமையான இதர தொழிலாளர்களிடம் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பாம்பாட்டி மணியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 20 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பாம்பாட்டி மணியை ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சனி, 26 அக்டோபர், 2024

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, தாய் உள்பட 3 பேர் கைது

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, தாய் உள்பட 3 பேர் கைது


ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை, தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அருகே உள்ள சித்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவ ரிக் வண்டி தொழிலாளி. இவருக்கும். ஈரோடு பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்லும்போது மகளிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அந்த பெண்ணும், அவரது கணவரும் கண்டிக்கவில்லை. மாறாக சிறுமியின் தந்தையும் பெற்ற மகள் என்றுகூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இவர்களின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத சிறுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை, தாயின் கள்ளக்காதலன் உடந்தையாக இருந்த தாய் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா புகையிலை பொருட்கள் அழிப்பு

பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா புகையிலை பொருட்கள் அழிப்பு

பெருந்துறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) தீ வைத்து அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்கப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி கிலோ மற்றும் டன் கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இவ்வாறாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்காக உணவு பாதுகாப்புத் துறையினர் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காவல்துறை மற்றும் பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களை கொட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்
சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த வீரபாண்டியார் பெயரையும், சேலம் விமான நிலையத்திற்கு வாழப்பாடி யார் பெயரையும் சூட்ட வேண்டும். சேலத்தில் நடைபெற்ற வாழப்பாடியார் மற்றும் வீரபாண்டியார் புகழஅஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்.

சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த வீரபாண்டியார் பெயரையும், சேலம் விமான நிலையத்திற்கு வாழப்பாடி யார் பெயரையும் சூட்ட வேண்டும். சேலத்தில் நடைபெற்ற வாழப்பாடியார் மற்றும் வீரபாண்டியார் புகழஅஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த வீரபாண்டியார் பெயரையும், சேலம் விமான நிலையத்திற்கு வாழப்பாடி யார் பெயரையும் சூட்ட வேண்டும். சேலத்தில் நடைபெற்ற வாழப்பாடியார் மற்றும் வீரபாண்டியார் புகழஅஞ்சலி கூட்டத்தில் தீர்மானம். 

சேலம் மாவட்ட சமூக நீதி சத்திரியர் பேரவை மற்றும் சத்திரியர் சேனை அமைப்பின் சார்பில் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் மறைந்த தமிழக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரது புகழஞ்சலி கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. வாழபாடியார் அறக்கட்டளையின் தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயராமன் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் முருகேச பூபதி அக்னி குல வன்னிய குல சத்திரிய சங்கத்தை சேர்ந்த எம்எஸ்வி மணி மற்றும் தொழிலதிபர் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இந்த புகழஞ்சலி கூட்டத்தில் தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோரது புகைப்படங்களை திறந்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோரது வாழ்க்கை பயணத்தில் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு மேற்கொண்ட எண்ணற்ற திட்ட பணிகள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரிக்கு மறைந்த முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டியாரின் பெயரையும், இதே போல சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வாழப்பாடியார் பெயர்களை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததுடன் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமல்லாமல் சேலம் மாநகரத்தின் மையப் பகுதியில் தமிழக அரசின் சார்பில் காலம் சென்ற வாழப்பாடி யார் மற்றும் வீரபாண்டியார் ஆகியோர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அதற்கான இடம் தமிழக அரசு ஒதுக்கி தந்தாலும் சரி தங்களது அமைப்பின் சார்பில் இரண்டு மூத்த தலைவர்களுக்கும் தங்களது அமைப்பின் சார்பில் சிலை நிறுவப்படும் என்றும் தமிழக முதல்வருக்கு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் மற்றும் வாழப்பாடியார் அறக்கட்டளையின் தலைவர் வாழப்பாடி ராமசுந்தன் ஆகியோர் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் புகழஞ்சலி கூட்டத்தை நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விற்பனை

ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விற்பனை

ஈரோட்டில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (25ம் தேதி) துவங்கியது.
ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான தீபாவளி சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (25ம் தேதி) துவங்கியது. 

இதனை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார். பின்னர், அவர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் வகையில் கண்காட்சி மற்றும் விற்பனையானது ஈரோடு குமலன்குட்டை பெருந்துறை ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் (மகளிர் திட்ட அலுவலகம்) இன்று (25ம் தேதி) துவங்கி தொடர்ந்து நவம்பர் 3ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.


இக்கண்காட்சியில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயுத்த ஆடைகள், கால்மிதியடிகள், டிசைன் மிதியடிகள், பேன்சிப் பொருட்கள், காட்டன் பைகள், சணல் பைகள், மரச்செக்கு எண்ணெய்கள், பாத்ரூம் க்ளீனர்ஸ், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை பொருட்கள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், தேன், தின்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்கள், வேர்க்கடலை, மஞ்சள், குண்டு வெல்லம், மற்றும் நாட்டுச் சர்க்கரை போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது

இக்கண்காட்சியில், பொதுமக்கள் கலந்து கொண்டு தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக் குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வழிவகை செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா உட்பட உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (25ம் தேதி) நடைபெற்றது.

இதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம், கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள் மற்றும் அதன் செயல்பாடு. தீயணைப்பு துறை ஊர்தியில் பயன்படுத்தப்படும் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு. வெட்டும் மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களின் செயல் விளக்கம் நடைபெற்றது.

மேலும், கயிறுகள் மூலம் உயர்மாடிக் கட்டடங்கள், கிணறுகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முறை. ஏணிகள் மூலம் மீட்கும் முறை, மூச்சு நின்றவர்களுக்கு சிபிஆர் (CPR) மூலம் இதயம், நுரையீரல் செயல்பாடு மீட்டல், நம் சுற்றுப்புறத்தில் தீவிபத்து ஏற்பட்டால் அந்த தீக்காலங்களில் தீயணைப்பான்கள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் வகைகள் தீயணைப்பு வாகனங்களின் வகைகள், பயன்பாடுகள் ஆகியவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தீத்தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், உதவி மாவட்ட அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் உட்பட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.